''எஸ்சி பட்டியலில் இடம்பெறாமல் இருந்திருந்தால் ஓஹோவென்று வந்திருப்போம்'': கிருஷ்ணசாமி

''எஸ்சி பட்டியலில் இடம்பெறாமல் இருந்திருந்தால் ஓஹோவென்று வந்திருப்போம்'': கிருஷ்ணசாமி படத்தின் காப்புரிமை ptparty

தேவேந்திர குல வேளாளர் சாதியை பட்டியல் சாதியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி அக்டோபர் ஆறாம் தேதியன்று சென்னையில் மாநாடு ஒன்றை நடத்தவிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. இந்தக் கோரிக்கையின் பின்னணி குறித்தும் தனது பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாடு குறித்தும் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் அவர். பேட்டியிலிருந்து:

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பொதுவாக எதெற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறதோ, அதற்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவருகிறீர்கள். குறிப்பாக நீட் விவகாரத்தில் நீங்கள் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆர்.எஸ்.எஸிற்கும் பா.ஜ.கவிற்கும் ஆதரவான கருத்துகளை வெளியிட்டுவருகிறீர்கள்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்குவந்த பிறகு, அவர்கள் சொல்வதுதான் வேதவாக்காக மாறிவிட்டது. மக்களால் இதற்கு மாறாக சிந்திக்கவே முடியவில்லை. தி.மு.கவும் அ.தி.மு.கவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.

91ல் நிராகரித்த தி.மு.கவை, 96ல் ஏற்கிறார்கள். பிறகு மீண்டும் 2001ல் அ.தி.மு.கவை ஆதரிக்கிறார்கள்.

தி.மு.க. - அ.தி.மு.கவைத் தாண்டி சிந்திப்பதற்கான நிலையே இங்கு இல்லை. திராவிட சிந்தனைகளால்தான் தமிழகம் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அந்தக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் புதிய தமிழகம் என்ற கட்சியை உருவாக்கினேன்.

ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை நான் சொன்ன கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நான் படிக்கிற காலத்தில் பார்த்திருக்கிறேன். ஒரு ஜாதிக்காரரின் மாட்டை மற்றொரு ஜாதிக்காரர் பிடித்தால் அங்கு ஜாதிச் சண்டை வரும். வீரம் பேசப்படாமல் ஜாதிதான் பேசப்பட்டது.

அதற்காக தமிழ் பாரம்பரியத்தை முற்றாக நான் நிராகரிக்கவில்லை. ஆனால், இங்கே வீரத்தைக் காட்டிலும் தமிழ் பண்பாட்டைக் காட்டிலும் ஜாதியைப் பார்த்துதான் மாடு பிடிக்க வருகிறார்கள். நான் முற்றாக அந்த விளையாட்டை நிராகரிக்கவில்லை. அதிலிருக்கும் ஜாதி பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்கச் சொல்கிறேன்.

தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, தமிழக கட்சிகள் எல்லாம் அதை கடுமையாக எதிர்த்தபோது நீங்கள் தீவிரமாக ஆதரித்தீர்கள்.

2009-2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் நீட் தொடர்பான பரிந்துரைகளை இந்திய மெடிக்கல் கவுன்சில் வகுத்தது. இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வந்தபோது, தி.மு.க. ஆதரித்தது.

அப்போது ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்ப்பதுபோல நாடகம் ஆடுகிறார்கள். தமிழகத்தின் கல்வித் தரம் நாளுக்கு நாள் கீழே போய்க்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் எல்லாம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக இருக்கும்போது, தமிழகம் போன்ற வளர்ச்சிமிக்க மாநிலத்தில் மாணவர்களை தயார் செய்யவில்லை என்ற ஆதங்கம்தான்.

இதுபோன்ற தேசிய தேர்வுகளை எழுதும்வகையில் மாணவர்களைத் தயார்செய்தால், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளிலும் நம் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். கோழிப்பண்ணை பள்ளிகளில் படித்து வெளிவந்து, மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவது எப்படி தரமானவர்களாக இருக்க முடியும்?

மருத்துவக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் தேர்வுகளை எழுதி, தேர்ச்சிபெற்றுத்தானே வருகிறார்கள். அவர்களிடம் தரமில்லையென எப்படிச் சொல்ல முடியும்?

இந்த வருடம் அவர்களது தரம் வெட்டவெளிச்சமாகிவிட்டதே..

படத்தின் காப்புரிமை ptparty

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையென்பது வேறு, மருத்துவக் கல்லூரியில் படிப்பது வேறு அல்லவா?

ஏன் அவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியவில்லை? மனப்பாடம் செய்வது நல்ல கல்வி முறை அல்ல. மருத்துவக் கல்லூரியில் வெறும் 2 ஆயிரத்து ஐநூறு பேர்தான் சேர்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பொறியியல் கல்வியில் சேர்கிறார்கள். அவர்கள் மிக மோசமான தரத்துடன் இருக்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல், கலை என எதில் படிப்பவர்களாக இருந்தாலும் அந்த மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். நம் கல்வி முறையில் மாற்றம் வேண்டும். படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் தரம் குறைந்திருக்கிறது.

நீட் தேர்வு இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா?

நான் சொல்லவருவது, இந்த நீட் தேர்வை முன்வைத்தாவது கல்வித் தரத்தை மாற்றுவதற்கு, மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி செய்யாதா என்பதைத்தான்.

நீட் தேர்வு, மத்திய அரசு கொண்டுவந்த புதிய விதிமுறைகளின் காரணமாக, எம்.டி., எம்.எஸ்., போன்ற பட்ட மேற்படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வது பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேற்படிப்புக்காகத்தான் அரசுப் பணியில் இருப்பார்கள் என்றால் அதை ஏற்க முடியாது. அந்த எண்ணமே தவறு. மாணவர்கள் மருத்துவம் படிக்க அரசு எவ்வளவோ செலவுசெய்யும்போது, அரசுப் பணியில் சேர்வதற்கு அவர்கள் தயங்குவார்களானால் அது தவறானது. தமிழகம், பொது மருத்துவத்தில் முன்னணியில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இவையெல்லாவற்றையும்விட நீட் தேர்வு என்பது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயலாக இருக்கிறது என்ற கருத்தும் இருக்கிறது.

அரசு என்று சொன்னால் இந்திய அரசு ஒன்றுதான். இந்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துகிற அமைப்பாகத்தான் மாநில அரசு செயல்பட வேண்டுமே தவிர, தனி அரசுகளாக செயல்பட முடியாது, கூடாது.

ஆனால், மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க மாநில அரசுகள்தானே செலவுசெய்கின்றன. குறிப்பாக தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி போன்ற பிரிவுகளில் உள்ள இடங்களுக்கு தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் மாணவர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது.

நீங்கள் திரும்பவும் பிரித்துப் பேசுகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் அங்கம். இதைவிட்டு வேறு வழிக்குப் போனாலே அது தவறான பார்வை. தமிழகம் கல்வியில் முன்னணியில் இருந்தால் அதில் பெருமிதம் கொள்ளவேண்டும்.

அந்த வளர்ச்சியை பிற மாநிலங்களுக்கும் தர வேண்டுமே தவிர, நமக்கேதான் எல்லாம் என்று சொல்வது சரியாக இருக்காது. எங்களுடைய பிரச்சனையில் தலையீடாதீர்கள், எதுவும் தரமாட்டோம் என்று சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நாம் பங்களிப்புச் செலுத்துவதில்தான் நம் பெருமை இருக்க முடியும்.

தேவேந்திர குல வேளாளர் என்ற ஜாதியை பட்டியல் சாதியினர் என்ற பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிவருகிறீர்கள். வழக்கமாக, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோருவதுதான் வழக்கம். நீங்கள் மாறுபட்டு கேட்கிறீர்கள். ஏன்?

தேவேந்திர குல வேளாளர்களாகிய நாங்கள் இந்த மண்ணில் கோலோச்சியிருக்கிறோம். நாங்கள் மருத நிலத்தின் மக்கள். எங்களைப் பட்டியல் சாதியில் சேர்க்கக்கூடாது என அந்த மக்கள் நீண்ட காலமாக போராடிவருகிறார்கள்.

பிரிட்டிஷ் அரசு, பட்டியல் சாதியில் சேர்த்தபோது, இந்த சாதியின் தலைவர்களால் அதற்கு எதிராக போராட முடியவில்லை. நாடார் சமுதாயம் முன்னேறியிருப்பதற்கு காரணம், அவர்கள் பட்டியல் சாதியில் இடம்பெறாததுதான்.

தேவேந்திர குல வேளாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறாமல் இருந்திருந்தால் ஓஹோவென்று வந்திருப்பார்கள். எங்களை எஸ்சி பட்டியலில் தள்ளி, ஆதி திராவிடர், ஹரிஜன், தலித் என எங்கள் அடையாளங்களை அழித்தார்கள். இதற்கு எதிராக நாங்கள் நீண்ட காலமாகப் போராடிவருகிறோம்.

இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை வெகு சிலருக்கே அது கிடைக்கிறது. ஆகவே வெறும் இழிவை மட்டும் தாங்கிக்கொண்டு இந்தப் பட்டியலில் இருக்க வேண்டியிருக்கிறது. ஆகவே அதிலிருந்து வெளியேறுவதுதான் சரியானதாக இருக்க முடியும். தேவேந்திர குல வேளாளர்களின் ஒட்டுமொத்த குரலாகத்தான் இதற்காக அக்டோபரில் ஒரு மாநாட்டை நடத்தவிருக்கிறோம்.

தேவேந்திர குல வேளாளர்கள் இன்னும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும்போது, அரசின் பட்டியலில் இருந்து வெளியில்வருவதால் இதை மாற்றிவிட முடியுமா? அதைப் பயன்படுத்துதானே சரியாக இருக்க முடியும்?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சலுகையைச் சொல்லும்போது ஒவ்வொருவரும் தங்கள் சாதியைச் சொல்கிறார்கள். ஆனால், பட்டியல் இனத்தவர் என்று வரும்போது ஒட்டுமொத்தமாக ஆதி திராவிடர் என்ற அடையாளத்திற்குள் எல்லா சாதியினரையும் குறுக்குகிறார்கள்.

77 சாதிக்கும் ஆதி திராவிடர் என்ற ஒரே பெயர்தான். அரசின் சலுகைகளைப் பொறுத்தவரை, எங்களுக்கு வேண்டாமென்று சொல்லவில்லையே, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையைத் தாருங்கள் என்றுதான் சொல்கிறோம். அல்லது தனியாக இடஒதுக்கீடு ஏற்படுத்தித்தர வேண்டும். ஒன்றிரண்டு பேர் அரசாங்க வேலையைப் பெறுவதற்காக, சமூகமே முன்னேற முடியாமல் தவிக்கிறது.

மக்கள் மத்தியில் தலித் என்றால் ஒரு ஒதுக்கல் இருக்கிறது. இந்த சமூக ஒதுக்கல் இந்தியா முழுவதுமே இருக்கிறது. ஜனாதிபதியையே தலித் ஜனாதிபதி என்றுதான் குறிப்பிடுகிறார்கள். பிற்படுத்தப்பட்டோரைக் குறிப்பிடும்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், ஷெட்யூல்டு கேஸ்ட் என்று எங்களை ஒரே ஜாதியாக ஒதுக்குகிறார்கள். நாங்கள் தமிழகத்தின் பூர்வீக குடிகள். எங்களை தலித் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

படத்தின் காப்புரிமை DrKrishnasamy

பட்டியல் சாதியில் உள்ள ஒவ்வொரு சாதியையும் தனித்தனியாக குறிப்பிட்டால் உங்களுக்கு அது ஏற்புடையதா?

பல முறை அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தலித், ஆதி திராவிடர் என்று குறிப்பிடாதீர்கள் என்று பல முறை சொல்லிவிட்டோம்.

ஆனால், காலம் கடந்துவிட்டது. இனி மாற்ற முடியாது. சிலர் ஆதி திராவிடர் என்ற அடையாளத்தை பெருமையாக கருதுகிறார்கள். எங்களுக்கு இந்தப் பெயர்தான் வேண்டும் என்கிறார்கள். அவர்கள் கோபத்திற்கு நாங்கள் ஏன் ஆளாக வேண்டும்? அதனால், பட்டியலில் இருந்து வெளியேற விரும்புகிறோம்.

இந்தக் கோரிக்கையை தேவேந்திர குல வேளாளர் மக்கள் அனைவரும் ஏற்கிறார்களா? பட்டியல் சாதியில் இருக்கும்போது கிடைக்கும் அரசு வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகளை மறுத்துவிட்டு, ஒட்டுமொத்த சமுதாயமே இதை ஏற்கிறார்களா?

எல்லோருமே ஏற்கிறார்கள். இந்தப் பட்டியலில் இருப்பது, ஒதுக்கலுக்கு வழிவகுக்கிறது. அதனால்தான் தொழிலில் முன்னேற முடியவில்லை. இந்தப் பட்டியலில் இருப்பதற்காக, ஆண்டாண்டு காலமாக அடிமையாக இருக்க வேண்டியிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற பெருமையோடு வாழ்ந்த சமூகம், மீண்டும் அந்தப் பெருமிதத்தைக் கேட்கிறோம். அந்தப் பெருமிதம் இல்லாமல் நாங்கள் முன்னேற முடியாது. இந்த சமூகத்தை இடஒதுக்கீடு இல்லாமலேயேகூட உயர்த்த முடியும்.

சமீபகாலமாக நீங்கள் பா.ஜ.கவையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தீவிரமாக ஆதரிக்கிறீர்கள்..

பா.ஜகவாலும் ஆர்.எஸ்.எஸாலும் என்ன தீங்கு நடந்துவிட்டது? அவர்கள் இந்தியாவை என்ன காட்டிக்கொடுத்துவிட்டார்கள்? இந்தியா என்று பெருமையாக சொல்வதில் என்ன குறை கண்டுவிட்டீர்கள்?

படத்தின் காப்புரிமை DrKrishnasamy

மாட்டிறைச்சித் தடை போன்ற விவகாரங்களில் பா.ஜ.கவின் கருத்து ஏற்புடையதா?

ஒரு மருத்துவராக இந்த விஷயத்தில் நான் கருத்துத் தெரிவித்தேன். அதனைச் சாப்பிட்டால் அதிக கொழுப்பு உடலில் சேருகிறது. அதனால்தான் மாட்டு இறைச்சி உண்பது குறித்து கருத்துத் தெரிவித்தேன். பசு வதை தடைச் சட்டம் இந்தியாவில் இருக்கிறது? காங்கிரஸ் ஏன் அதனை நீக்கவில்லை.

நான் பா.ஜ.க.வை முழுமையாக ஏற்கவில்லை. ஆனால், சில வெளிநாட்டு சக்திகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி, தமிழ் இன வாதிகளாக அடையாளம் காட்டிக்கொண்டு, பா.ஜ.கவை குறிவைத்து தாக்குகிறார்கள். மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்க்கிறார்கள்.

ஜல்லிகட்டு, நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் எனக்கு இருக்கும் கருத்தைவைத்து என்னை பா.ஜ.கவோடு இணைத்துப் பார்க்கிறீர்கள். விஷயங்களின் அடிப்படையில் அக்கட்சியை ஆதரிக்கிறேன்.

பெரியாரும் அம்பேத்காரும் இருந்திருந்தால் பா.ஜ.கவையும் ஆர்.எஸ்.எஸையும் ஆதரித்திருப்பார்கள் என்று சொன்னீர்கள். அது சரியான கருத்தா?

இந்த அரசு மிகச் சிறப்பாக தேசத்தை பாதுகாக்கிறது. இந்தியாவை முறையாக பாதுகாக்கும் அரசு இருந்தால் பெரியாரும் அம்பேத்காரும் ஆதரிக்கத்தானே செய்திருப்பார்கள். பெரியார் கறுப்பு பணத்திற்கு எதிரான சிந்தனையை கொண்டிருந்தவர். அவர் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென சொல்லியிருப்பார். அம்பேத்கரும் சொல்லியிருப்பார். பண மதிப்பிழப்பு கறுப்பு பணத்தை ஒழிப்பதில் எந்த அளவுக்கு வெற்றிபெற்றது என்பது வேறு விஷயம். ஆனால், நோக்கத்தை அவர்கள் ஆதரித்திருப்பார்கள்.

பா.ஜ.க. இந்தியா முழுவதும் சிறிய கட்சிகளை வசப்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக உங்கள் கட்சியையும் வசப்படுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு தவறானது. திட்டமிட்டு, ஒரு கட்சியின் மதிப்பை குறைப்பதற்காக பேசக்கூடிய பேச்சு இது. தேர்தல் சமயத்தில்தான் கட்சிகளோடு கூட்டணி. மற்ற நேரங்களில் என்னைப் பொறுத்துவரை விஷயங்களின் அடிப்படையில்தான் ஆதரவு. இந்த ஆதரவுக்கு காரணம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. இம்மாதிரியான கருத்துகள் திட்டமிட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருக்கக்கூடிய சில அமைப்புகளால் பரப்பப்படக்கூடிய மோசடியான கருத்துகள்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் என்பது யார், அவர்களுக்கு உங்கள் மீது கோபம்என்ன?

சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்தால் தெரியும். இது இன்னும் ஆழமாக பேச வேண்டிய விஷயம். தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்ட விரும்புகிறார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் ஒரு பெரிய வலுவான மக்கள் சக்தி. இந்த சக்தி நடுநிலையோடு இருப்பதை அவர்களால் தாங்க முடியவில்லை.

அவர்களுக்கு சுய சிந்தனையே கிடையாது. ஒரு அரசியல் கட்சியும் அவர்கள் பதுங்குகுழியாக பயன்படுத்தும் தீவிரவாத அமைப்புகளும்தான் இந்த கருத்துகளை பரப்புகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :