பூச்சிக் கொல்லிக்கு இரையாகும் இந்திய விவசாயிகள்

பூச்சிக்கொல்லி மருந்தினை சுவாசித்ததால் இறந்த 23 வயது பிரவீன் சொயம் படத்தின் காப்புரிமை Jaideep Hardikar
Image caption பூச்சிக்கொல்லி மருந்தினை சுவாசித்ததால் இறந்த 23 வயது பிரவீன் சொயம்

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தல் மட்டும் கடந்த சில மாதங்களில் ஏறத்தாழ 50 விவசாயிகள் மரணித்து இருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கு காரணம் பூச்சிக் கொல்லிதான் என்று பேசப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிர அரசு ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

அந்த மாநிலத்தின் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான யவத்மால் மாவட்டத்திலிருந்து செய்தியாளர் ஜெய்தீப் ஹர்திகார் செய்திகளை வழங்கியுள்ளார்.

பிரவீன் சொயம்-க்கு 23 வயது ஆகிறது. நல்ல ஆரோக்கியமானவர். ஒரு நாள் திடீரென வாந்தி எடுக்க தொடங்குகிறார். நெஞ்சும் கடுமையாக வலிக்க தொடங்குகிறது. உணர்வற்ற நிலைக்கு செல்கிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 27-ம் தேதி மரணித்தார்.

சொயமுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இது மற்றொரு பூச்சிக்கொல்லி விஷத்தால் ஏற்பட்ட மரணமாக இருக்குமோ என்று சந்தேகித்தனர். சொயம் அவர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். பருத்தி செடிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் பூச்சிக் கொல்லி மருந்தினை சொயம் தெளித்திருந்தார். அந்த மருந்தை சுவாசிக்க நேரிட்டதால்தான் அவர் மரணித்திருப்பார் என்று மருத்தவர்கள் நம்புகிறார்கள்.

ஐம்பது மரணங்கள்

அரசு மற்றும் ஊடக தகவல்களின் கணக்கின்படி சந்தேகத்திற்குரிய இந்த பூச்சிக் கொல்லி விஷத்தின் காரணமாக ஏறத்தாழ 50 விவசாயிகள் ஜூலை மாதத்திலிருந்து இறந்திருக்கிறார்கள். மரண எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால், பா.ஜ.க தலைமையிலான அந்த மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

பெரும் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்படும், விவசாய தற்கொலைகளுக்காக அடிக்கடி தலைப்புச் செய்தியை பிடிக்கும் இந்த யவத்மால் மாவட்டத்தில் மட்டும் 19 பேர் இறந்திருக்கிறார்கள்.

இந்த நான்கு மாதங்களில் மட்டும் 800 விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஒரு அதிகாரி கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பருத்தி பயிரிடப்பட்ட நிலம்

யவத்மால் மாவட்டத்தில் பருத்தி, சோயாபீன்ஸ் மற்றும் இதர பயறு வகைகளை பெருமளவில் சாகுப்படி செய்கிறார்கள். அங்கு நம்மிடம் பேசிய விவசாயிகள், தாங்கள் மிகவும் சக்திவாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தினை பொடி வடிவிலும் மற்றும் திரவ வடிவிலும் பயன்படுத்துவதாக கூறினார்கள்.

அவர்கள் மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடியை பயிரிட்டு இருக்கிறார்கள்.

வழக்கமாக பருத்தி செடியை தாக்கும் காய்ப்புழு, இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்காது என்று கூறப்பட்டது.

ஆனால் விவசாயிகள் அந்த காய்ப்புழுக்கள் தாங்கள் பயிரிட்டுள்ள மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளை தாக்குகிறது. அதைக் கட்டுப்படுத்ததான் நாங்கள் பூசிக் கொல்லி மருந்தின் அளவினை அதிகப்படுத்தினோம் என்றார்கள்.

அசாதரண நிகழ்வு

நம்மிடம் பேசிய 21 வயதான நிக்கேஷ் கதானே, தொடர்ந்து ஏழு நாட்கள் தன் நிலத்தில் பூச்சிக் கொல்லி மருந்தினை பயன்படுத்திய பின் தான் சரிந்து விழுந்ததாக கூறினார்.

அவர், "என் தலை கனக்க தொடங்கியது. என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை" என்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் அவர் கூறினார்.

ஆபத்துக் கட்டத்தை கடந்துவிட்ட அவர், இனி எப்போதும் தான் பூச்சிக் கொல்லி மருந்தினை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறினார்.

அவர் மட்டுமல்ல, பிபிசியிடம் இதுகுறித்துப் பேசிய பல விவசாயிகள் தாங்கள் உடல்நிலைக் குறித்த பயத்தின் காரணமாக பூச்சிக் கொல்லி மருந்தினை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக கூறினர்.

"இது அசாதரணமான நிகழ்வு," என்று பிபிசியிடம் கூறிய மருத்துவர் அசோக், பூச்சி மருந்தினை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுதான் இந்த மருத்துவமனையின் வழக்கமாக இருந்திருக்கிறது என்றார்.

எதிர்பாராத விதமாக விஷத்தை எடுத்துக் கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானது.

ஏனெனில், உட்கொள்ளப்பட்ட விஷத்தை வயிற்றிலிருந்து அகற்ற முடியாது. அதுபோல, பூச்சிக் கொல்லி விஷத்தை நுகர்வது சுவாச அமைப்பையே முற்றிலுமாக சிதைக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

படத்தின் காப்புரிமை Jaideep Hardikar
Image caption நான்கு மாதங்களில் மட்டும் 800 விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

சந்தேகத்திற்குரிய பூச்சிக்கொல்லி விஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களை ஜூலை மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து தான் தாங்கள் கவனிக்க தொடங்கியதாக இந்த பகுதி மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அந்த வாரத்தில் மட்டும், வாந்தி, மூச்சுக் கோளாறு, கண்பார்வை கோளாறு மற்றும் உணர்வினை இழத்தல் - ஆகிய அறிகுறிகளை உடைய ஏறத்தாழ 41 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்

இந்த எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 111-ஆகவும், செப்டம்பரில் 300-ஆகவும் உயர்ந்தது.

தற்சமயம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஏறத்தாழ 10 பேர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள், அதுபோல, 25 பேர் கண்பார்வை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Jaideep Hardikar
Image caption பூச்சிக்கொல்லி தெளிக்கும் விவசாயி

விவசாயிகளே காரணம்

செப்டம்பர் மாதம், மாவட்ட அதிகாரிகள் வேளாண் விஞ்ஞானிகளிடம் இதுகுறித்து ஒரு கள ஆய்வை மேற்கொள்ளுமாறு கூறினார்கள்.

அந்த கள ஆய்வின் அறிக்கை, விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்தினை தெளிக்கும்போது அணிய வேண்டிய உபகரணங்களான கையுறைகள், கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை அணியாததுதான் இதற்கு காரணம் என்று விவசாயிகளை குற்றஞ்சாட்டியது.

இதை ஒப்புக் கொள்ளும் சொயமின் தந்தை, "ஆம் அணியவில்லைதான். கடந்த காலங்களில் கூட, அணியாமல்தான் பூச்சிக் கொல்லி மருந்தினை தெளித்தார். இப்போது மட்டும் இப்படியான நிலை ஏற்பட என்ன காரணம்?"

விவசாயிகள் போலியான பூச்சி மருந்தினை பயன்படுத்தினார்களா? அவர்கள் அறியாத புதிய கலவையை பயன்படுத்தினார்களா? இதற்கு ஆலோசனை சொல்வதற்குதான் யாராவது இருக்கிறார்களா?.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்