வீழ்ந்து வரும் வேலைவாய்ப்பு: மோடியின் ஒரு கோடி வேலை வாக்குறுதி என்னவாயிற்று?

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி செய்தியாளர்
ஏறத்தாழ 2.6 கோடி இளைஞர்கள் வேலைத்தேடி கொண்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஏறத்தாழ 2.6 கோடி இளைஞர்கள் இந்தியாவில் வேலைத்தேடி கொண்டிருக்கிறார்கள்.

2013-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியர்களிடம் நரேந்திர மோதி, அவருடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உண்டாக்கும் என்றார்.

ஒரு ஆண்டுக்கு பின், அவருடைய பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால், அவர் வாக்குறுதி அளித்தது போல புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உண்டாக வில்லை என்று இந்தியா எக்கனாமிக் சர்வே (2016 - 17) தரவுகள் கூறுகின்றன. அந்த தரவுகளின் படி, வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது.

அரசாங்கத்தின் இந்த புதிய தரவுகளின்படி, வேலைவாய்ப்பின்மை 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோதி பிரதமராவதற்கு முன், 2013-14-ம் ஆண்டில் இது 4.9 சதவீதமாக இருந்தது.

குறையும் வேலைவாய்ப்புகள்

பொருளாதார அறிஞர் வினோஜ் ஆப்ரகாம், அண்மையில் தொழிலாளர் பணியகத்தின் தரவுகளை திரட்டி ஒரு ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வு, இந்தியாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதமானது, 2012 - 2016 இடையிலான காலக்கட்டத்தில் கடுமையாக குறைந்துள்ளது என்று கூறுகிறது.

ஏற்கெனவே இருக்கின்ற வேலைவாய்ப்புகளே நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது அவருடைய ஆய்வு. இதுதான் நம்மை கவலை அடைய செய்கிறது. அவரின் ஆய்வில், 2013-14 மற்றும் 2015-16 இடையிலான காலகட்டத்தில், வேலை வாய்ப்புகள் வேகமாக குறைந்து வருகின்றன மற்றும் ஏற்கெனவே உள்ள வேலை வாய்ப்புகளே கடுமையாக பறிபோய் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இருக்கின்ற வேலை வாய்ப்புகளே கடுமையாக பறிபோவது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்றும் தரவுகளுடன் நிறுவுகிறார் அவர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

வீழ்ச்சியை சந்தித்த விவசாயத் துறை

இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ சரிபாதியினர், தங்கள் வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தை நம்பி இருந்தனர். குறு விவசாயிகள் சிறு நிலப்பரப்பில் பயிரிட்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் விவசாயத்திலும் வேலைகள் குறைகின்றன.

இதற்கு காரணம், தொடர் மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி மற்றும் விவசாய உற்பத்திக்கு உரிய கொள்முதல் விலை இல்லாமல் போனதுதான். இதன் காரணமாக பெருமளவிலான மக்கள், விவசாயத் துறையை விட்டு வெளியேறி, கட்டிட வேலை மற்றும் ஊரக உற்பத்தி துறையை நோக்கி வேலைவாய்ப்புகளை தேடி சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மெக்கன்ஸி குளோபல் நிறுவனம் மேற்கொண்ட் ஆய்வு, இந்தியாவில் 2011 - 2015 இடையிலான காலக்கட்டத்தில் மட்டும், விவசாய துறையில் 26 மில்லியன் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று சுட்டிக் காட்டுகிறது.

உள்நாட்டு உற்பத்தியும், வேலைவாய்ப்பும்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவாக, இது 5.7% என்ற நிலைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் இடையிலான காலாண்டில் சென்றுள்ளது. சர்ச்சைக்குரிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும் வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டதற்கான காரணங்களின் பகுதியாக இருக்கின்றன. இவை வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் விவசாயத் துறை, உள்கட்டமைப்பு மற்றும் தனியார் வணிகம் போன்ற துறைகளை மோசமாகப் பாதித்துள்ளன.

உலோகம், முதலீடு, கட்டுமானம், மின்சரம், நுகர்வோர் பண்டங்கள், சில்லரை வணிகம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள 120 நிறுவனங்களில் வேலைக்கு ஆளெடுப்பது குறைந்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்தியன் எக்கானாமிக் சர்வே, வேலைவாய்ய்ப்புகளை உண்டாக்குவது இந்தியா முன் இருக்கும் சவால் என்று கூறியுள்ளது. இந்தியாவில் 2030-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியனுக்கும் மேலானவர்கள் வேலைவாய்ப்புகளை தேடி சந்தைக்குள் நுழைவார்கள். இந்தியாவில் ஏற்கெனவே 26 மில்லியன் மக்கள் (ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சமமான எண்ணிக்கை) முறையான வேலைவாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏதோ ஒரு வாழ்வு

இந்தியாவின் வேலை வாய்ப்பு பிரச்னை வித்தியாசமானது. அது மேற்குலகை போன்றது அல்ல. அங்கு வேலையின்மை நிவாரணம் பெறுகிறவர்களை வைத்து வேலையின்மையின் அளவை மதிப்பிடலாம். இங்கு அப்படி இல்லை. பொருளாதார அறிஞர் விஜய் ஜோஷி, "வறுமை மற்றும் சமூக பாதுகாப்பின்மையின் காரணமாக, இங்குபெரும்பாலான மக்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்".

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

புதிய சரக்கு மற்றும் சேவை வரியால் திணறும் சிறுவணிகம்

அது மட்டுமல்ல, வேலை இல்லாத பலர், தங்கள் குடும்பத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு சில பேரால் முடிக்கப்படும் வேலைகளை பலர் பகிர்ந்துக் கொள்கிறார்கள். பலர் குறைந்த ஊதியத்துக்கு பல மணி நேரம் வேலை பார்க்கிறார்கள்.

இதற்கெல்லாம் மேலாக, 80 சதவீதத்துக்கும் மேலான தொழிலாளர்கள், அமைப்புச்சாரா, முறைசாரா நிறுவனங்களில்தான் மோசமான சூழலில், குறைந்த ஊதியத்துக்கு வேலைப் பார்க்கிறார்கள். இதில் சில வேலைகள்தான் பணி பாதுகாப்பை, ஊதியத்துக்கான உத்தரவாதத்தைத் தருகின்றன. 7 சதவீத இந்தியர்கள்தான் முழுமையான பலன்களை அளிக்கும் நிறுவனத்தில் நல்ல பொருளாதார சூழலில் பணி செய்கிறார்கள் என்கிறது ஒரு மதிப்பீடு.

"வேலைவாய்ப்புகளை தேடுபவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை வருங்காலத்தில் மோசமாகும் என்று தெரிகிறது. அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வேலை தேடி சந்தைக்குள் நுழைவார்கள்.

இதே நிலை இந்தியாவில் தொடருமானால், அது இரண்டு அடுக்குப் பொருளாதாரத்துக்கு வழிவகுக்கும். அதாவது, ஒரு தரப்பு மற்ற தரப்பைவிட குறைந்த ஊதியத்தையும், பணி வாய்ப்புகளையும் பெறும்" என்கிறார் 'இந்தியாஸ் லாங் ரோடு தி செர்ச் ஆஃப் பிராஸ்பரிட்டி' நூலின் ஆசிரியர் ஜோஷி.

இந்தியாவின் வேலைவாய்ப்பு பிரச்னையானது, பணியாளர்கள் முறையாக பகிர்ந்தளிக்கப்படாததால் ஏற்படுவது. அதாவது, தொழிலாளர்-உற்பத்தித் திறன் மிகுந்த முறைப்படுத்தப்பட்ட துறைகளின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது. அதே நேரத்தில், குறைந்த ஊதியம் தரும், முறைப்படுத்தப்படாத, தொழிலாளர்-உற்பத்தித் திறன் குறைந்த துறையில் அதிகம் பேர் வேலைப்பார்கிறார்கள்.

வேலைவாய்ப்புகளை எப்படி உண்டாக்குவது?

அதிக வேலைவாய்ப்புகளை உண்டாக்குவதற்கான ஒரே வழி, அதிக பணியாளர்களை கோரும், ஜவுளி, ஆயத்த ஆடை துறை, தோல் தொழிற்துறையில் அதிகம் கவனம் செலுத்துவதுதான். ஆனால், அரசாங்கம் இதில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

அனுமதியில்லாத கசாப்புக் கடைகளை மூடுவது, மாடு வெட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது, தோல் பொருள் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவின் தோல் துறை முறைசாராத் தொழிலாகத்தான் உள்ளது.

"இந்தியாவின் எளிய பொம்மை மற்றும் ஆடை உற்பத்தித் துறை தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவே இந்தியா சீனாவைவிட பின்தங்கி இருப்பதற்கும், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை பலவீனமாக இருப்பதற்குமான ஒரு பெரிய காரணம்" என்கிறார் மோர்கன் ஸ்டான்லி முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை வல்லுநர் ருச்சிர் ஷர்மா.

வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டதா இந்தியா...?

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

காணொளிக் குறிப்பு,

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :