தலித்துகள் மீசை வைத்தால் அடி, குஜராத்தில்; அர்ச்சகராகலாம்,கேரளாவில்

கேரளா படத்தின் காப்புரிமை PUNDALIK PAI

இந்தியா ஒரு முரண்பாடுகள் நிறைந்த நாடு. மேற்கு மாநிலமான குஜராத்தில், மீசை வளர்த்ததற்காக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டார்.

தென் மாநிலமான கேரளாவில், தலித் சமூகத்தை சேர்ந்த ஆறு பேர் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அர்ச்சகர்களாக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு நிர்வகிக்கும் 1,504 கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசின் முடிவை பின்பற்றும் விதமாத, திருவிதாங்கூர் தேவசம் போர்ட் இந்த வரலாற்று முடிவினை எடுத்துள்ளது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முடிவையடுத்து அர்ச்சகர்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் தகுதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 36 பேரும், தலித் சமூகத்தை சேர்ந்த 6 பேரும் அர்ச்சகர்களாக தேர்வாகியுள்ளனர்.

திருவிதாங்கூர் தேவசம் போர்ட் அர்ச்சகர்களை நியமிப்பதிலும் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற ஆளும் கம்யூனிஸ்ட் அரசின் தேவசம் போர்ட் அமைச்சரான கடம்பள்ளி சுரேந்திரனின் உத்தரவின் அடிப்படையில் தேவசம் போர்ட் இம்முடிவை எடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தலித்துகளை கோயில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு சற்று எதிர்ப்பு எழலாம் என்ற அச்சங்கள் நிலவலாம்.

ஆனால் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்கள் மத்தியில், தலித்துகளை அர்ச்சகர்களாக ஏற்றுக்கொள்வது குறித்து பக்தர்கள் மத்தியில் ஒரு "ஒருமித்த கருத்துணர்வை" ஏற்படுத்த முடியும் என்று பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.

இப்போதெல்லாம், இந்து சமயத்தில், வழிபாடுதான் முக்கியம், அர்ச்சகராக பிராமணர் இருக்கிறாரா அல்லது நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருக்கிறாரா என்பது முக்கியமல்ல. வழிபாடுதான் முக்கிய நோக்கம்" , என்கிறார் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பிரயர் கோபாலகிருஷ்ணா,

"பிராமணர்களுக்குள் சுமார் 40 உட்பிரிவுகள் இருக்கின்றன. நாயர் சமூகத்தில் சுமார் 9 அல்லது 10 கிளைகள் இருக்கின்றன. இந்த சமூகங்களின் பல்வேறு கிளைகளுடன் ஒருங்கிணைந்து இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்யத் தயாராக இருக்கிறோம், என்று கூறினார் கோபாலகிருஷ்ணா.

தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிக்கும் முடிவுக்கு நிச்சயமாக எதிர்ப்பு இருக்கும் என கோபாலகிருஷ்ணன் உடனடியாக ஒப்புக்கொள்கிறார். ஆனால், சாதிகளுக்கு இடையில் பாகுபாடு இருக்க முடியாது என்று பக்தர்களை சமாதானப்படுத்த அவர்கள் `பாரம்பரிய முறையுடன் நவீனத்தையும் கலப்பார்கள்`எனவும் அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமூக செயல்பாட்டாளர் ராகுல் ஈஸ்வர் வேறு விதமாக பார்க்கிறார்.

``வேதவ்யாஸ் ஒரு மீனவரின் மகன். வால்மீகி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டால், ஒரு நேரத்தில் இந்து மதம் மிக கடுமையான சாதி மனப்பான்மை கொண்டதாக இருக்கும் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். ஆம், இதற்கு எதிராக குரல்கள் வந்தாலும், இது வரவேற்கக்கூடிய முடிவு`` என்கிறார் ஈஸ்வர்.

``எல்லோரும் இதை எதிர்க்க மாட்டார்கள். ஆனாலும், பிராமணர்கள் வறுமையில் இருப்பதையும், சமூகத்தில் விலக்கி வைக்கபடும் நிலையை எதிர்கொள்வதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்`` என கூறுகிறார் ஈஸ்வர்.

பல சமூகங்களிடையே ஒருமித்த சம்மதத்தை உருவாக்குவதன் மூலம், இந்த சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும் என ஈஸ்வர் நம்புகிறார்.

படத்தின் காப்புரிமை PUNDALIK PAI

கர்நாடகாவைப் போலவே, கேரளாவும், அதன் மன்னர்கள் தலித்துகளை கோயிலுக்குள் நுழைய அனுமதித்து உத்தரவுகளைப் பிறப்பித்த தனித்துவ வரலாறு கொண்டது.

இரு மாநிலங்களை சேர்ந்த மன்னர்களும் தலித்துகளை கோயிலுக்குள் அனுமதியளிக்க ஆணையிட்டனர்.

1936-ல் வைக்கம் போராட்டத்திற்கு பிறகு, திருவிதாங்கூர் மகாராஜா இம்முடிவை எடுத்தார்.

1927-ல் காந்தியில் கோரிக்கையை ஏற்று நளவாடி கிருஷ்ணராஜ உடையார் ஆண்ட மைசூரு சமஸ்தானமும் இதே முடிவை எடுத்தது.

``இந்தியாவின் பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது, கர்நாடகம் மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களில் சாதி அமைப்புக்கு எதிரான இயக்கத்தின் வேறுபாடு வித்தியாசமானது`` என்கிறார் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸின் ஸ்கூல் ஆப் ஷோசியல் ஸ்டடீஸின் போராசிரியர் டாக்டர் நரேந்திர பானி.

``கேரளாவில், கீழ்நிலையில் இருந்து ஆரம்பித்த இந்த தீவிர இயக்கத்திற்கு திருவாங்கூர் மகாராஜாவின் ஆதரவு இருந்தது. பழைய மைசூரில் மன்னர் நளவாடி கிருஷ்ணராஜ உடையார், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆதரவாக முடிவெடுத்தார்`` என்கிறார் டாக்டர் பானி.

``மக்கள் வழிபாடு முறை குறித்து ஏற்கனவே பல அடையாளங்கள் உள்ளன. மக்கள் செல்லும் கோயில்களில் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு சமூகமும் தாங்கள் வணங்க சொந்த கடவுளை கொண்டுள்ளனர்.`` என்கிறார் பானி.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள கட்ரோளி கோயிலிலும், தலித்துகள் மட்டுமல்ல, விதவைகளும் அர்ச்சகர்களாக உள்ளனர்.

ஆனால், தலித்துகளை அர்ச்சகர்களாக நியமித்த இந்த நடவடிக்கைக்கு, கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் அரசியல்ரீதியான தாக்கங்களும் உள்ளன.

" இது சமூக ரீதியாக ஒரு சர்ச்சையைத் தூண்டத்தான் செய்யும்; அரசியல்ரீதியாகவும்கூட, இது சர்ச்சையை உருவாக்கும், ஏனென்றால், பாஜக இடைநிலைச் சாதிகளை தனது அணியில் இணைத்து, அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது", என்கிறார் தெ இந்து நாளிதழின் மூத்த இணை ஆசிரியர், சி.ஜி.கௌரிதாசன் நாயர்.

"தாங்கள் இந்து சமுதாயத்தை ஒன்று திரட்ட முயன்று கொண்டிருந்தோம் என்பதால்தான் , மார்க்ஸிஸ்ட் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை கூறும். இதை பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவைத் திரட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்திக்கொள்ளும்", என்றார் அவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்