கீழடி அகழ்வுப் பணிகள் தொடர்வதை தமிழக அரசு உறுதிசெய்யும்: அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி ஆழ்வாராய்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வந்த கீழடி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்ட ஆய்வில் குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் கிடைக்காததால் ஆய்வுக் குழிகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கீழடி அகழ்வுப் பணிகள் குறித்து திங்களன்று (அக்டோபர் 9) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கீழடியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்றும் மத்திய அரசின் தொல்லியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழக தொல்லியல் துறையைக் காட்டிலும் மத்திய அரசின் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள் உள்ள காரணத்தால் மட்டுமே கீழடி அகழ்வு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

''மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் கீழடியின் வரலாற்றை மறைப்பதாக நச்சுக் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய நிறுவனத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒரு தமிழர்தான். கீழடியில் மேலும் ஆராய்ச்சிகள் தொடரும். அதை தமிழக அரசு உறுதிசெய்யும்,'' என்றார் பாண்டியராஜன்.

2015ல் தொடங்கப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமையானவை என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற அகழ்வுப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் கண்டறியப்பட்ட சுமார் 27,000 தொல்பொருட்கள் மட்டுமே எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 11,000 பொருட்களை காட்சிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் .

எழும்பூர் அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாகவும், உலகின் முதல் ஐம்பது காட்சியகங்களில் ஒன்றாக மாற்றவும் முயற்சிகள் எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

''இலக்கிய ஆதாரம், தொல்பொருட்கள் மற்றும் கல்வெட்டுகள் என ஒவ்வொரு பகுதியாக பிரிந்து கிடக்கும் தமிழர் வரலாற்றை ஒன்றிணைத்து காட்சிப்படுத்தவுள்ளோம்,'' என்றார் அவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்