தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

தீபாவளி பண்டிகை படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மில்லியன் கணக்கான இந்தியர்கள், இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி வரவிருப்பதையடுத்து, தலைநகர் டெல்லியில், பட்டாசுகள் விற்பனை செய்வதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதன் மூலம், உலகிலேயே காற்று தரத்தில் மிகவும் மோசமானது என்ற இடத்தை பிடித்துள்ள தலைநகர் டெல்லியின் காற்று தரத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரமுடியுமா என்பதைச் சோதிக்க விரும்புவதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பட்டாசுகளின் விற்பனை மற்றும் விநியோகம் மீதான தடை, நவம்பர் 1 வரை நீடிக்கும். தீபாவளிப் பண்டிகையானது அக்டோபர் 18 ம் தேதி அன்று கொண்டாடப்படவிருக்கிறது.

வட இந்தியாவில் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி, தீமையை நன்மை வெற்றி கொண்டதை கொண்டாடும் பண்டிகையாக குறிப்பிடப்படுகிறது.

செப்டம்பர் மாதம் தற்காலிகமாக அமல்படுத்துவதற்கு முன்பு, 2016 ஆம் ஆண்டு நவம்பரில், உச்ச நீதிமன்றம் முதலில் பிறப்பித்த தடையை திரும்பப்பெறுமாறு வந்த பல மனுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தடை என்பது "ஒரு தீவிர நடவடிக்கையாக இருக்கும்" என்று அந்த நேரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் கூறியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2016 ஆம் ஆண்டில் தீபாவளிக்கு பிறகு புகைமயமாக காட்சியளிக்கும் தில்லி நகரம்

இந்தியாவின் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்திடம் இந்த தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்தத் தடை அமல்படுத்தப்படும்.

இருப்பினும், ஏற்கனவே பட்டாசுகளை வாங்கியவர்கள் அவற்றைப் பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டு "பட்டாசுகளை வாங்குதல்,சேமித்தல் மற்றும் விற்பனை" மீதான தடை, தீபாவளிக்கு பிறகுதான் விதிக்கப்பட்டது.

டெல்லி நகரத்தில் காற்றின் தரம் ஏற்கனவே அபாயகரமான அளவை எட்டிய பிறகு தான் இந்த தடை ஆணை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாசடைந்த காற்று டெல்லியெங்கும் சூழப்பட்டதால், மூன்று நாட்களுக்கு அனைத்து பள்ளிகளை மூடுமாறு டெல்லி அரசு உத்தரவிட்டது.

தீபாவளிப் பண்டிகை காலத்தில் குறைந்த அளவு பட்டாசுகளைப் பயன்படுத்தவேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் கடந்த நாட்களில் பல்வேறு பிரசாரங்கள் நடைபெற்றன. ஆனால் அவை பெரிய அளவில் பயனளிக்கவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்