இணைய வசவாளர்களை டிவிட்டரில் மோதி பின்தொடர்வது ஏன்?

சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள், கேலிகளை தரக்குறைவான மொழியில் பதிவிடுவோரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் பின்தொடர்வது ஏன் என்று கேள்வி எழுப்புவோரின் நீண்ட பட்டியலில், விருது பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜும் இணைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவருடைய நண்பர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பின்னர், சமூக வலைதளங்களில் சிலர் மகிழ்ச்சியடைவதை கண்டு மிகவும் கவலையடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சில மிகவும் மேசமான விமர்சனங்களை, கேலிகளை பதிவிடுவோரை நரேந்திர மோதி பின்தொடர்வதை கண்டு இன்னும் வருத்தம் கொள்வதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

"நம்முடைய பிரதமர் நரேந்திர மோதியால் டிவிட்டரில் பின்தொடரப்படும் சிலர் கொடூரமானவர்களாக உள்ளனர். இதைக் கண்டுகொள்ளாத பிரதமரை நாம் கொண்டுள்ளோம்" என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதனால், "கலக்கமடைந்துள்ளதாகவும், மனதளவில் வருந்துவதாகவும், பிரதமரின் மௌனத்தால் அச்சமடைந்துள்ளதாகவும்" அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் விடுத்த டுவிட்டர் கருத்துக்கு இணைய வசவாளர்கள் (ட்ரோல்கள்) உடனே எதிர்வினையாற்றத் தொடங்கினர். "மோதிக்கு எதிரானவர்" என்று அவர்கள் பிரகாஷ் ராஜை அழைத்தனர். அவரது கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன.

35 மில்லியனுக்கு மேலானோர் பின்தொடரும் நரேந்திர மோதி, டுவிட்டரில் மிகவும் பிரபலமாக இருக்கும் உலக தலைவர்களில் ஒருவராவார்.

அவர் அதிக டுவிட்டர் பதிவிடுபவர். அதில் பெரும்பாலானவை அவருடைய அலுவலகப் பணிகள். அரசு கொள்கைகள், அல்லது 'தூய்மை இந்தியா திட்டம்' போன்ற தனது விருப்பமான அம்சங்கள் பற்றியதாக இருக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகத் திட்டம்தான் 2014 ஆம் ஆண்டு இந்த கட்சிக்கு கிடைத்த பெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

எனினும் மோதியின் டுவீட்டுகள் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாகவும், பலவித பார்வைகளை ஏற்பவையாக இல்லாமல் இருப்பதாகவும் விமர்சனம் உள்ளது.

படத்தின் காப்புரிமை SUHAIMI ABDULLAH

எடுத்துக்காட்டாக, கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளை வாகனத்தில் எற்றி அனுப்பி கொண்டிருந்த முஸ்லிம் ஒருவர் பசு பாதுகாப்பாளர்கள் என்று கூறப்படுவோரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மோதி காட்டிய மௌனம் பலராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

இந்த சம்வம் நடைபெற்று ஒரு வாரத்திற்கு பின்னர், ஸ்டாக்ஹோமில் நடந்த தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்த மோதியை பலரும் கேலி செய்து டவிட் வெளியிட்டிருந்தனர்.

பல மாதங்களாக, மிகவும் முக்கியமானதாக விமர்சகர்களால் பார்க்கப்படுவது என்னவென்றால், பிரதமர் என்ன பதிவிடுகிறார் என்பதல்ல. மாறாக, அவர் என்ன டுவிட்டுகளை வாசிக்கிறார் என்பதே அல்லது மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் யாருடைய டுவிட்டுகளை அவர் வாசிக்கிறார் என்பதே.

"பிரதமர் நரேந்திர மோதி பின்தொடர்கிற 1,845 பேரில் பெருமளவிலானோர் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள். ஆனால், அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர், மிகவும் பண்பற்ற மொழியில் விமர்சிப்போராக மற்றும் அரசியல் எதிரிகளை குறைகூறுபவர்களாக உள்ளனர்" என்று போலி செய்திகளுக்கு எதிராக போராடுவதற்கு அமைக்கப்பட்ட இணையதளமான 'அல்ட் நியூஸ்' இணைய தளத்தின் பராதிக் சின்ஹா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"அவர்களில் பெரும்பாலோர் பாரதிய ஜனதா கட்சியின் அடிமட்ட பணியாளர்கள். பிரதமர் அவர்களை பின்தொடர்வது என்பது, அவர்களை பொறுத்தமட்டில் மரியாதைக்குரிய விடயம், தங்களின் கட்சிப் பணிகளுக்கு அவர்களுக்கு கிடைக்கின்ற அங்கீகாரம்" என்று கூறும் சின்ஹா, "அவர்களில் பலரும் பெண்களுக்கு எதிரானவர்கள். பெண்களுக்கு எதிராக தரக்குறைவான மொழியை பயன்படுத்துவோர்" என்கிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் பதிவிடப்பட்ட சில டுவீட்டுகளை குறிப்பிடலாம்.

நரேந்திர மோதியால் பின்தொடரப்படும் சூரத்தை சேர்ந்த வர்த்தகர் நிக்கில் டாட்ஹிச் பதிவிட்ட ஹிந்தி மொழி டுவிட்டின் தோராய மொழிபெயர்ப்பு:

"பெண் நாய் ஒன்று, நாயை போல இறந்துள்ளது. அதன் அத்தனை குட்டிகளும் அதே குரலில் அழுகின்றன".

மக்கள் தெரிவித்த கோபமான பதில்களுக்கு பின்னர், நிக்கில் டாட்ஹிச்சின் இந்த மோசமான பதிவு அழிக்கப்பட்டது. தற்போது அவருடைய பக்கத்தில் இந்தப் பதிவு இடம்பெறவில்லை.

படத்தின் காப்புரிமை TWITTER

நரேந்திர மோடியால் பின்தொடரப்படும் அஷிஷ் மிஸ்ரா, பத்திரிகையாளர் லங்கேஷ் கொலை செய்யப்பட்ட செய்தித்தாள் அறிவிப்பை மறுடுவீட் செய்த நிலையில், "நீ என்ன விதைப்பாயோ, அதையே அறுவடை செய்வாய்" என்ற பொருளில் "ஜெய்சி கார்னி வாய்சி பார்னி" என்று பதிவிட்டிருந்தார்.

அவர்களின் மோசமான பதிவுகள் மிகவும் விமர்சனத்திற்குள்ளாயின. மேலும், மோடி இவற்றையும், இவற்றை போன்ற பிற கணக்குகளை தொடர்வதும் விமர்சனத்திற்குள்ளானது.

கோபமடைந்த சிலர் 'நரேந்திரமோதியை தடை செய்' என்ற பொருளில் #BlockNarendraModi என்ற ஹேஸ்டேக்கை தொடங்கி பரப்புரை செய்தனர்.

ஆனால், பிரதமரின் விமர்சகர்கள் எதிர்பார்த்தப்படி இது அமோக வரவேற்பை பெறவில்லை என்றாலும், சில அதிர்வு அலையை ஏற்படுத்தியது.

மோடியின் தனிப்பட்ட கணக்கை தடை செய்திருப்பதாக பலர் டுவீட் பதிவிட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா, "பிரதமர் பின்தொடர்வது என்பது ஒருவரது நல்ல பண்பின் சான்றிதழ் அல்ல" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

படத்தின் காப்புரிமை TWITTER

பிரதமரின் டுவிட்டர் கணக்கில் யாரையும் தடை செய்யவில்லை அல்லது பின்தொடர்வதை விட்டுவிடவில்லை என்று மால்வியா தெரிவித்ததில் முழு உண்மையில்லை என்கிறார் ஆல்ட் நியூஸின் பராதிக் சின்கா.

தன்னுடைய முன்னாள் ஆதரவளாரான டாக்டர் ஜவாலா குருநாத்தை, அவர் பாரதிய ஜனதா கடசியின் செய்தி தொடாபாளரின் அறநெறியற்ற நடத்தை பற்றி குற்றஞ்சாட்டிய பின்னர், மோதி பின்தொடர்வதை விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையை பிபிசி செய்தியாளர் எழுதியபோது, மால்வியாவிடம் பிரதமரின் டுவிட்டர் கணக்கு பற்றி சில கேள்விகளை கேட்க அழைத்தபோது, அவர் விடையளிக்க மறுத்துவிட்டார். "நான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லை" என்று அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துவிட்டார்.

பிரதமர் அதிக வேலையுடையவர், மில்லியன் விடயங்களை செய்ய வேண்டியிருப்பவர். அத்தகையவர் டுவிட்டரில் அதிக நேரம் செலவிடுவது அல்லது தானே டுவிட்டர் கணக்கை இயக்குவது சாத்தியமற்றது என்கிறார் சின்ஹா.

ஆனால், மோதி எழுந்த சில நிமிடங்களில் தன்னுடைய ஐபேடை எடுத்து பயன்படுத்த தொடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது சமூக வலைதளப் பதிவுகளில் அவர் சற்று நேரம் செலவிடுகிறார்.

அவரது ஆதரவாளர்கள் சிலரது விஷமச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, பிரதமரின் மௌனம் வருத்தமளிக்கிறது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அவருடைய வீட்டிற்கு வெளியே கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்டது. இதுவரை யாரும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை. யாரையும் பிரதமர் பின்தொடர்வதையும் விட்டுவிடவில்லை.

"இத்தகையோரை பிரதமர் மோதி ஏன் பின்தொடர்வதை விட்டுவிடக்கூடாது என்று கேட்டிருக்கிறேன். ஆனால். இதுதான் அவர்களின் அரசியல் தந்திரம் என்பதை உணர்ந்துள்ளேன்" என்கிறார் சின்ஹா.

"இத்தகையோர் உண்மையில் வெறும் சமூகதள வசவாளர்கள் அல்லர். அதைவிட அதிக முக்கியமானவர்கள். இவர்கள் டுவிட்டரில் பாரதிய ஜனதா கட்சியின் டிவிட்டர் காலாட்படையினர்" என்று கூறுகிறார் சின்ஹா.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :