தமிழகத்திற்கு நிலக்கரி கேட்கவே பிரதமரை சந்தித்தோம்: பன்னீர்செல்வம்

படத்தின் காப்புரிமை Twitter

தமிழகத்தில் உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் நிலக்கரி வேண்டி பிரதமர் மோதியை சந்தித்ததாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே சமீப காலமாக பனிப்போர் நிலவி வருவதாக பல்வேறு ஊகங்கள் நிலவிவரும் நிலையில், இன்றைய தினம் (வியாழன்) தில்லிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை நேரில் சந்தித்தார். தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோதி - பன்னீர்செல்வம் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இது.

இன்றுகாலை புதுடெல்லியில் மோதியை சந்தித்துவிட்டு தமிழ்நாடு அரசினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற நிலக்கரி வேண்டி பிரதமரை சந்தித்ததாகவும், தற்போது தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மனவருத்தமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், தங்கள் இருவருக்குமிடையில் எவ்விதமான மனவருத்தம் இல்லை என்றும், முதல்வருடன் ஆலோசித்த பிறகே பிரதமரை சந்தித்ததாகவும் கூறினார்.

இனி எந்த காலத்திற்கும் அதிமுகவில் பிளவு ஏற்படாது என்று கூறிய பன்னீர்செல்வம், தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, கட்சிக்காக கீழ் மட்டத்திலிருந்து உழைத்து மேலே வரும் தொண்டர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படும் என்று பதிலளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்