பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பினார் சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, தனது பரோல் காலம் முடித்து மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்குத் திரும்பினார்.

படத்தின் காப்புரிமை KASHIF MASOOD

உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் எம். நடராஜனை சந்திப்பதற்காக அவருக்கு ஐந்து நாட்கள் பரோல் அளிக்கப்பட்டிருந்தது.

சசிகலாவின் கணவர் எம் நடராஜன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பழுதடைந்ததையடுத்து, அக்டோபர் 4ஆம் தேதியன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் தனது கணவரைப் பார்ப்பதற்கு பரோல் அளிக்க வேண்டுமென சசிகலா விண்ணப்பித்ததையடுத்து நிபந்தனைகளுடன் அவருக்கு ஐந்து நாட்கள் சிறை விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் ஆறாம் தேதி சிறையிலிருந்து வந்த சசிகலா சாலை வழியாக சென்னை வந்தடைந்தார்.

பரோல் காலத்தில் சசிகலா யாரையும் சந்திக்கக்கூடாது என்றும், வீடு - மருத்துவமனை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தியாகராய நகரில் உள்ள அவரது உறவினர் கிருஷ்ண ப்ரியா வீட்டில் தங்கியிருந்த சசிகலா, கடந்த ஐந்து நாட்களும் தினமும் சென்று தனது கணவரை மருத்துவமனையில் சென்று பார்த்துவந்தார்.

இந்த நிலையில் அவருக்கான சிறைவிடுப்புக் காலம் நேற்று முடிவடைந்தது. இன்று மாலை ஆறு மணிக்குள் அவர் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், காலையில் சாலை வழியாக பெங்களூர் புறப்பட்ட சசிகலா, பிற்பகலில் சிறைச்சாலையை வந்தடைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட சசிகலா, கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் தேர்வானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச் சொல்லிய சசிகலா, தன்னை பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் கோரினார்.

ஆனால், ஆளுநர் அழைப்புவிடுக்கும் முன்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்த சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும் தேர்வுசெய்ய வைத்தார்.

ஆனால், அவர் சிறை சென்ற சில வாரங்களிலேயே டிடிவி தினகரனுக்கு எதிராகத் திரண்ட அமைச்சர்கள், அவரை கட்சியிலிருந்து ஒதுங்கும்படி கூறினர். சமீபத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சசிகலா சிறையிலிருந்து வரும்போதும் திரும்பிச் செல்லும்போது வழியெங்கும் தொண்டர்கள் அவரது காரை நிறுத்தி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சிறையில் சாதாரண உடையில் சசிகலா: சமூக ஊடகங்களில் பரவிய காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிறையில் சாதாரண உடையில் சசிகலா நடமாடுகிறாரா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :