இரானுடன் ஆறு நாடுகள் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுமா?

இரான் தமது அணு ஆயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக இரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தி அமெரிக்கா உள்ளிட்ட ஆறு சக்திவாய்ந்த நாடுகள் செய்துகொண்ட 2015-ம் ஆண்டின் ஒப்பந்தத்தில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பதற்கு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

படத்தின் காப்புரிமை AFP

எனினும் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, நீடித்திருக்கவேண்டுமா அல்லது விலகவேண்டுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவை முடிவு செய்வதற்கு இன்னும் 60 நாள் கால அவகாசம் இருக்கிறது.

வெள்ளிக்கிழமை ஆற்றிய ஆவேசமான உரையில், இரான் பயங்கரவாத்த்திற்கு துணைபோகிறது என்றும் அங்கு நடப்பது (மத)வெறி ஆட்சி என்றும் குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப், புதிய தடைகளை முன்மொழிந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை அந்த நாடு ஏற்கெனவே மீறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை முழு இணக்கத்தோடு இரான் கடைபிடித்து வருவதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எல்லா பாதைகளையும் அடைக்கும் வகையில் தாம் செயல்படுவதாக வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

"முடிவில் அதிக வன்முறை, அதிக பயங்கரம் நிறைந்ததாக இருக்கும் என கணிக்கத்தகுந்த பாதையில், இரான் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இட்டுச்செல்லும் பாதையில் தொடரப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்".

இரான் அதனுடைய உடன்பாட்டை சரியாக நிறைவேற்றி வருகிறதா என்று 90 நாட்களுக்கு ஒருமுறை, அமெரிக்க அதிபர் காங்கிரசுக்கு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

இரான் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏவுகணை சோதனைக் காட்சி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
2000 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணை ஒன்றை சோதித்தது இரான்.

இரண்டு முறை ஏற்கெனவே உறுதி செய்துள்ள டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ள நிலையில் அப்படி ஒரு உறுதிப்பாட்டை தர மறுப்பு தெரிவித்துள்ளார்.

தடைகளை விதித்து இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்ய இன்னும் 60 நாட்கள் உள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா என ஆறு சர்வதேச நாடுகளும், இரானும் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்போர், டிரம்ப் அமெரிக்காவை இந்த ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றி விடுவார் என்று அச்சம் அடைந்திருந்தனர்.

ஆனால், டிரம்ப் இந்த கடமையை அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அளித்திருக்கிறார். டிரம்பின் விருப்பத்திற்கேற்ப இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்யவுள்ளது.

அவ்வாறு நடைபெறவில்லை என்றால், தான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக அதிபர் டிரம்ப் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :