புறா சர்ச்சை: தீபாவளிக்கு 'மெர்சல்' வெளியாகுமா?

மெர்சல் திரைப்படம் படத்தின் காப்புரிமை youtube

விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி வாங்காமல் மெர்சல் திரைப்படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால், அந்த திரைப்படத்திற்கு தணிக்கைத் துறை அனுமதி வழங்க மறுக்கிறது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், நிச்சயம் அந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இத்திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

ஆனால், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெறாமல், இந்த படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்த படத்திற்கு தணிக்கை துறை சான்றிதழ் தர மறுத்துவிட்டதாகவும், அதனால் இந்த படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகம்தான் என்றும் கூறப்பட்டது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய சினிமா வட்டாரத்தினர், "இந்த படத்தில் புறா, காளைகள் வரும் காட்சிகள் இடம் பிடித்துள்ளன. ஆனால், அந்த காட்சிகளில் நிஜ விலங்குகளை பயன்படுத்தவில்லை. அவை அனைத்தும் கிராஃபிக்ஸ் காட்சிகள். இந்த குழப்பத்தினால்தான், படத்திற்கு சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.

இப்படியான சூழலில் நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ரியாஸ், "விலங்குகள் நல வாரிய குழப்பத்தினால்தான், திரைப்படத்திற்கு சான்றிதழ் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிச்சயம் திரைப்படம் திட்டமிட்டவாறு தீபாவளிக்கு வெளியாகும். அதற்கான முயற்சியில்தான் நாங்கள் தீவிரமாக இறங்கி இருக்கிறோம்." என்றார்.

கடந்த காலங்களில், இது போல இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி உள்ளிட்ட பல படங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்