உலக காதல் சின்னத்தை பா.ஜ.க தலைவர்கள் வெறுப்பது ஏன்?

  • 17 அக்டோபர் 2017
தாஜ் மஹால் படத்தின் காப்புரிமை Getty Images

உலகின் காதல் சின்னமாகப் பரவலாக கருதப்படும் தாஜ்மஹாலை எதற்காக பா.ஜ.க தலைவர்கள் குறி வைக்கிறார்கள்? அவர்கள் காதலுக்கு எதிரானவர்களா?

தாஜ்மஹால் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கவில்லை என முதலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

பிறகு, இந்த மாத தொடக்கத்தில் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா இடங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை யோகி அரசு நீக்கியது.

தற்போது, மேற்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம், தாஜ்மஹால் இந்திய கலாசாரத்தின் மீது படிந்துள்ள கறை என்றும், அது துரோகிகளால் கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

தனது அன்பிற்குரிய மனைவி மும்தாஜ் நினைவாக, ஷாஜகான் தாஜ் மஹாலை கட்டினார். இந்த நினைவுச்சின்னம் 1648 ஆம் ஆண்டில் கட்டிமுடித்த பிறகு, விரைவிலே புகழ்பெற்றது.

1656 மற்றும் 1668-ல் முகலாய இந்தியாவில் பரந்த அளவில் பயணம் செய்த பிரான்ஸ் பயணி ஃப்ரான்கோஸ் பெர்னியர், தாஜ்மஹால் முன்பு நின்றபோது அதிகமாக ஈர்க்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை SANGEET SOM FB PAGE
Image caption சங்கீத் சோம்

இந்திய பயணித்தின் போது வெள்ளை மார்பில் கல்லால் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் தனக்கு எப்படி உற்சாகம் கொடுத்து என்பதைத் தனது பயணக்கட்டுரையில் பெர்னியர் விளக்கியுள்ளார்.

தற்போது, ஒரு வெளிநாட்டுப் பயணியின் இந்தியப்பயணம், தாஜ்மஹாலைப் பார்க்காமல் முழுமையடையாது. இந்தியாவிற்கு வரும் வெளிநாடுகளின் பிரதமர், அதிபர் அல்லது உலகளாவிய பிரபலம் என யாராக இருந்தாலும் இது பொருந்தும்.

தாஜ்மஹாலுக்கு முன் நிற்கும், இளவரசி டயானாவின் புகைப்படத்தை யாரால் மறக்க முடியும்.

ஒவ்வொரு வருடமும் 2 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை தாஜ்மஹால் ஈர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனாலும், புதிதாகத் திருமணமான இந்திய தம்பதிக்கு காதல் சின்னமாகவே இது தொடர்கிறது.

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 4 மில்லியன் இந்திய சுற்றுலாப் பயணிகள், அதில் பெரும்பாலானோர் இளம் தம்பதியினர் ஏன் தாஜ்மஹாலுக்குச் செல்கின்றனர் என்பதற்கான காரணம் இதுவே.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது மீண்டும் தலைப்பு செய்திகளை தாஜ்மஹால் பிடித்துள்ளது.

தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனக் கூறிய சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ சங்கீத் சோம்,"தாஜ்மஹாலைக் கட்டியவர் தனது தந்தையை சிறையில் வைத்தார். அவர் இந்துக்களைப் படுகொலை செய்ய விரும்பினார்... நாங்கள் வரலாற்றை மாற்றுவோம்" எனவும் கூறியிருந்தார்.

தாஜ்மஹால் குறித்து கடந்த கால பா.ஜ.க அறிக்கைகளைப் போல இம்முறையும், சங்கீத் சோம் கூறிய கருத்து கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல என விளக்கப்பட்டுள்ளது. இது சங்கீத் சோமின் தனிப்பட்ட கருத்து என பா.ஜ.கவின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சோமின் கருத்தில் இருந்து பா.ஜ.க விலகியிருக்கலாம். ஆனால், அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

சமூக ஊடகங்களில் பலர் அவரைக் கேலி செய்துள்ளனர். டெல்லியில் உள்ள செங்கோட்டையும் ஷாஜகானால்தான் கட்டப்பட்டது. அப்படி என்றால் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின உரையை, பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து வழங்கமாட்டாரா என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நகைச்சுவையாகக் கேட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை PIB

தாஜ்மஹாலுக்கு எதிரான கருத்துகள், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சி என பல அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.

இக்கருத்துகள் முகலாய ஆட்சிக்கு எதிரான அபிப்ராயத்தில் வேரூன்றி இருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால், எதிர்வரும் சட்டசபை தேர்தலின் பின்னணியிலே இதனைப் பார்க்க வேண்டும்.

பொருளாதார ரீதியான சாதனைகள் பற்றி செல்வதற்கு குறைவாக இருக்கும்போது, மக்களின் மத உணர்வுகளைத் தூண்டுவது பெருமளவு ஆதாயமளிப்பதாக உள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்