நீதிமன்றத்தின் பிடியில் இருக்கும் 'லவ் ஜிஹாத்' திருமணம்

ஷஃபின் ஜஹன் மற்றும் ஹதியா படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption ஹதியாவை திருமணம் செய்து கொண்ட ஷஃபின் ஜஹன்

இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு ஒரு இஸ்லாமியரை மணந்து கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கில், திருமணத்தை ரத்து செய்வதாக கடந்த மே மாதத்தில் ஒரு இந்திய உயர்நீதிமன்றம் முடிவெடுத்தது. இது நாடு முழுவதும் செய்திதாள்களில் தலைப்புச் செய்தியானது. பலர் இதனை லவ் ஜிகாத்துக்கு எதிரான அடி என குறிப்பிட்டனர்.

'லவ் ஜிகாத்' எனும் பதம் தீவிர அடிப்படைவாத இந்துமத சிறு குழுக்களால் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. லவ் ஜிகாத் என்பது இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை காதல் என்ற பெயரில் கவர்ந்து இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதை குறிப்பதாக இந்தக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.

தென்னிந்தியாவில் உள்ள மாநிலமான கேரளாவைச் சேர்ந்த அந்தப் பெண் கூறுகையில் சொந்த விருப்பத்தின் பெயரில்தான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக குறிப்பிடுகிறார். அந்தப் பெண் ஹதியா மற்றும் அவரது கணவர் ஷஃபின் ஜஹன் ஆகியோரின் மேல்முறையீடு மனுக்கள் இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்த வழக்கில் தேசிய புலனாய்வு நிறுவனமும் ஏற்கனவே இணைந்திருக்கிறது. ஜகானுக்கு அடிப்படைவாத பார்வைகள் இருக்கிறதா மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய குழுக்களுடனான தொடர்புகள் இருக்கிறதா என்பது குறித்து தேடி வருகிறது அந்நிறுவனம்.

இந்த வழக்கு குறித்து எங்களுக்கு இதுவரை தெரிந்துள்ள விஷயங்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், 23 வயதாகும் ஹதியா ஜஹன் (முன்னதாக அவர் இந்து மதத்தில் இருந்தபோது அகிலா அசோகன் என அறியப்பட்டவர் ) இஸ்லாம் மதத்தை தழுவினார். அவர் ஒரு வீட்டை தனது வகுப்புத்தோழிகளான இரண்டு இஸ்லாமிய பெண்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் தமிழ்நாட்டில் படித்துக்கொண்டிருந்தார். அவளது பெற்றோர்கள் அருகில் உள்ள மாநிலமான கேரளாவில் வசித்து வந்தனர்.

ஹதியாவை (இந்து மதத்தில் இருந்தபோது அகிலா) கண்டுபிடிக்கும் முயற்சியாக அப்போது அவரது தந்தை கே.எம்.அசோகன் நீதிமன்றத்தை நாடினார். ஏனெனில் அவரைப் பொறுத்தவரை ஹதியா கல்லூரியை விட்டு வெளியே தங்கத் தொடங்கியதில் இருந்து பெற்றோரை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார்.

ஹதியா (அகிலா என முன்பு அறியப்பட்டவர்) இஸ்லாமிய மதத்துக்கு மாறியதை பெற்றோர்கள் கண்டுபிடித்த பிறகு அவரது தந்தை அசோகன் கேரள உயர் நீதி மன்றத்தில் ஒரு மனு போட்டார். அவரது மகள் அவளது விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் திருமதி ஜஹன் அப்போது நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கையில் விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாகவும், அவளது இரண்டு வீட்டு நண்பர்களும் இஸ்லாம் மதத்தை கடைபிடிப்பதையும் பிரார்த்தனை செய்ததையும் பார்த்து ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அசோகன் குற்றம் சாட்டியதற்கு ஆதாரம் இல்லாததால் ஹதியா தான் விரும்பியதைச் தேர்வு செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அசோகன் பிபியிடம் பேசுகையில், தனது மகள் அவரது வீட்டு நண்பர்கள் மற்றும் அந்த வீட்டு நண்பர்களுக்கு தெரிந்த சிலரால் 'மூளை சலவை' செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார். '' அவர்கள் அவளை சிரியாவுக்கு அனுப்ப விரும்பினர். எனது மகள் என்னுடன் தொலைபேசியில் பேசியபோது அது எனக்கு தெரியவந்தது. நான் அதை பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதையடுத்து வழக்கு தொடர்ந்தேன்'' என்கிறார் அசோகன்.

தனது மகள் பயணம் செய்து இந்தியாவை விட்டு வெளியே செல்லவுள்ளதாக மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதி மன்றத்தில் அசோகன் முறையிட்டார். இந்த இரண்டாவது வழக்கின் விசாரணையின் போதே, ஹதியா ஒரு இஸ்லாமியரை மணந்துவிட்டார். அவர் திருமணத்துக்கான பிரத்யேக வலைதளத்தில் தனது துணையை கண்டுகொண்டார்.

இம்முறை அசோகனுக்கு சாதகமான வகையில் வழக்கு தீர்ப்பு வந்தது. வெவ்வேறு நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கில் அவர்கள் ஹதியாவின் திருமணத்தை ரத்து செய்தனர் மேலும் ஹதியாவின் மதமாற்றம் தன்னார்வ விருப்பம் அடிப்படையில் அமைந்ததா என கேள்வி எழுப்பினர்.

''இது லவ் ஜிகாத் வழக்கு அல்ல. இது வலுக்கட்டாயமான மதமாற்றம் பற்றிய வழக்கு'' என அசோகனின் வழக்குரைஞர் சி.ரவீந்திரன் தெரிவித்தார். ''அவள் ஜனவரி மாதம் மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டார் ஆனால் டிசம்பரில் தான் திருமணம் நடந்தது'' என அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லவ் ஜிகாத்துக்கு எதிராக போராடும் அடிப்படைவாத இந்துமத சிறு குழுக்கள்

கேரள உயர்நீதி மன்றம் என்ன சொன்னது?

கேரள உயர்நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்று ஜனவரி 2016-லும் மற்றொன்று மே 2017-லிலும் வழங்கப்பட்டது. முதல் தீர்ப்பு திருமதி ஜஹானுக்கு ஆதரவாக வழங்கப்பட்டு, அசோகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் இரண்டாவது வழக்கின்போதைய தீர்ப்பில் திருமதி ஜஹானின் இஸ்லாமிய மதம் மாறிய முடிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. காதல் எனும் பெயரில் இந்து மதத்தின் இளம் பெண்கள் அடிப்படைவாத அமைப்புகளால் மதம் மாற்றம் செய்வது குறித்து நீதிமன்றம் கவனித்தது. நீதிமன்றம் பயன்படுத்திய மொழியில் பிரபல 'லவ் ஜிகாத்'தின் விளக்கம் ஒத்திருந்தது.

பல காரணங்களை மேற்கோள் காட்டி அந்த திருமணத்தை போலியானது என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவளது பெற்றோர்கள் அவர்களது மகளை பாதுகாப்பாக காவலில் வைத்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.

இது வரை கடந்து வந்ததில் மிக அபத்தமான தீர்ப்பு இதுதான் என ஹதியாவின் கணவர் ஜஹானின் வழக்குரைஞர் துஷ்யந்த் டேவ் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த தீர்ப்பு ஊடங்கங்களில் விமர்சனங்களை கிளப்பியது மேலும் பல வழக்குரைஞர்களையும் ஆச்சர்யப்படுத்தியது.

இது முற்றிலும் சட்ட அதிகார வரம்புக்குள் வராமல் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என விவரித்துள்ளார் உச்ச நீதிமன்ற வழக்குரைஞரான கருணா நுந்தி. ''உயர் நீதிமன்றத்தால் திருமணத்தை ரத்து செய்ய முடியாது. இது வினோதமான அம்சமாக இருக்கிறது'' என அவர் கூறியுள்ளார்.

வழக்கில் என்ன நடக்கிறது ?

உயர் நீதிமன்ற தீர்ப்பை ஷபின் ஜஃகான் மேல்முறையீடு செய்ததையடுத்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

அனைத்து பக்கங்களில் இருந்தும் உள்ளீடுகளை பெறாமல் திருமணம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த திருமணத்துக்கும் லவ் ஜிகாத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

இந்த வழக்கிலும் கட்டாயப்படுத்தப்ட்ட மதமாற்றம் என குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு வழக்கிலும் பொதுவான ஒரு இணைப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சாய்நபா என்ற பெண் தான் இந்த இரண்டு வழக்கிலும் அவர்கள் இஸ்லாத்துக்கு மாறிய தருணங்களில் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர் .

தேசிய புலனாய்வு நிறுவனமான என்ஐஏவின் கருத்துப்படி சாய்நபா பிரபல இந்திய முன்னணியுடன் தொடர்புடையவராவார். இது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு என சந்தேகிக்கப்படுகிறது.

''ஒருவேளை பெண்களை கவர்ந்து ஐஎஸ் அமைப்பில் இணைய வைப்பதற்கான சதியாக இருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட ஆணுடன் திருமண பந்தத்தில் இருக்க வேண்டுமா இல்லையா என முடிவு செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட பெண்தான்'' என்கிறார் வழக்குரைஞரான கருணா நுந்தி.

இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு என்ஐஏ விடம் பிபிசி கேட்டதற்கு இதுவரை அந்நிறுவனம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த ஜோடிகளின் நிலை என்ன?

கடந்த மே மாதத்தில் கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திருமதி ஜஹன் தற்போது அவரது பெற்றோர்களின் வீட்டில் வசித்து வருகிறார்.

தனது மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார் ஜஹன். அவளது பெற்றோரின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்தபோது அவர்கள் அனுமதி தரவில்லை என அவர் குற்றம் சாட்டுகிறார்.

அசோகனிடம் அவரது மகள் இதுவரை யாருடனும் பேச அனுமதிக்கப்படாதது குறித்த குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, '' அவள் யாரை சந்திக்க வேண்டும்? உறவினர்களாக இருந்தால் அவளை சந்திக்கலாம். மற்றவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் அவளுக்கு கிடையாது'' என பிபிசியிடம் தெரிவித்தார்.

''என்னுடைய மகளை என்னுடைய வீட்டுக்கு அனுப்பியது நீதிமன்றத்தின் முடிவு. ஆகவே , இது போன்ற நபர்கள் ஏன் என்னுடைய மகளை சந்திக்க வருகின்றனர்? அவளை சந்திக்க விரும்பினால் அவர்கள் நீதிமன்றத்துக்குத் தான் செல்ல வேண்டும். ஏன் என்னை தொந்தரவு செய்கிறார்கள்? '' என அவர் கூறினார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதையடுத்து சம்பந்தப்பட்ட ஜோடிகள் பிபிசியிடம் பேச மறுத்துவிட்டனர்.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆண்களை பழிவாங்கும் பெண் பேயை நம்பும் கிராமம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்