மெர்சல்: தமிழிசையின் எச்சரிக்கைக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள், சவால்கள்

நடிகர் விஜய் மற்றும் பலர் நடித்து அட்லி இயக்கியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து விமர்சித்துள்ள வசனங்களுக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த எதிர்ப்பு, இன்னும் அடுக்கடுக்கான சவால்களை அவர் எதிர்கொள்ளும் வகையில் விவாதம் சூடுபிடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

அரசியலுக்கு வரும் நோக்கில் விஜய் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார் என்று காட்டமாக கூறியுள்ளதுடன், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழிசையின் கருத்துகள் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

'தணிக்கை குழு அனுமதித்தது'

"தணிக்கை குழு அனுமதித்துத்தானே அந்தக் காட்சிகள் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன? மத்திய அரசின் கீழ்தானே தணிக்கை குழு உள்ளது?" என்று கேள்வி எழுப்புகிறார் திரைப்பட ஆய்வாளர் அம்ஷன் குமார்.

ஜி.எஸ்.டி குறித்து உங்களுக்கு என்ன தெரியும் என்றும் தவறான கருத்துக்களை பரப்பக்கூடாது என்றும் வியாழன்று தமிழிசை அளித்த பேட்டியில் கூறியிருப்பது பற்றிக் கேட்டபோது, "ஜி.எஸ்.டி வரியைப் பற்றி மக்களுக்கு தெரிய வைக்க மத்திய அரசு நிறைய விளம்பரங்கள் செய்துவரும் சூழலில் அதைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்று எப்படிக் கூற முடியும்," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அம்ஷன் குமார்.

Image caption அம்ஷன் குமார்

தமிழக அரசின் டாஸ்மாக் குறித்த விமர்சனங்கள் இதற்கு முன்பு பல தமிழ் திரைப்படங்களில் வந்திருப்பதையும், அவற்றை நீக்க வேண்டும் என்று யாரும் எதிர்ப்புக்குரல் எழுப்பாததையும் சுட்டிக்காட்டிய அவர், "திரைப்படம் எடுப்பவர்களுக்கு என்றும் ஓர் அரசியல் இருக்கும். எனினும், ஜனநாயக நாட்டில் எதைப்பற்றியும் கருத்துக் கூற எல்லோருக்கும் உரிமை உண்டு," என்கிறார்.

"திரைப்படத்தில் வரும் கதாநாயகர்கள் மட்டுமல்ல, முந்தைய ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தபோதே சோ (ராமசாமி) நிறைய அரசியல் விமர்சனம் செய்யும் வசனங்களைப் பேசி நடித்துள்ளார்," என்று சுட்டிக்காட்டினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிற்கு பட்டாசு அறிமுகமானது எப்படி?

'அரசியல்வாதிகளின் அறுவைசிகிச்சை வேண்டாம்'

பிபிசி தமிழிடம் பேசிய திரைப்பட இயக்குநர் வ.கௌதமன், "அரசியல்வாதிகள் கலையை அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கலையின் தலையை வெட்டக்கூடாது," என்றும், "அப்படி செய்தால் அது ஒரு வன்முறை," என்றும் கூறினார்.

"உதாரணமாக, கோயில் சிலைகளில் ஆபாசம் இருக்கிறது என்று சிலைகளை பிடுங்கி எறிந்தால் கோயில்களே இருக்காது," என்று கூறினார் கௌதமன்.

படத்தின் காப்புரிமை Va.Gowthaman/ Facebook
Image caption இயக்குvர் வ.கௌதமன்

'மக்கள் கைதட்டுகிறார்கள்'

"இப்போது ஹோட்டலுக்கு சாப்பிடப் போகும் ஒருவர் உணவுடன் சேர்ந்து கட்டும் ஜி.எஸ்.டி வரிப்பணத்துக்கும் சேர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. இதைக் கேட்பவர்கள் விஜய், அட்லி என்று பாராமல், கேட்கப்படும் கேள்வி சரியானதா இல்லையா என்பதையே ஆராய வேண்டும்," என்றார் அவர்.

மக்களின் மனதைப் பிரதிபலிப்பதால்தான் இத்தகைய காட்சிகளை மக்கள் ரசித்து கைதட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

"இந்தக் காட்சி வரும்போது மக்கள் தியேட்டரில் கை தட்டுகிறார்களே ஏன்? மக்கள் பாதிக்கப்பட்டதைப் புரிந்துகொண்டு, அதைத் திருத்தி மக்களிடம் கைதட்டல் வாங்கவே அரசியல்வாதிகள் முயற்சி செய்ய வேண்டும்," என்று கூறினார் கௌதமன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்