பேருந்து பணிமனை இடிந்துவிழுந்து 8 பேர் மரணம்

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலையில் பேருந்துகளை இயக்க வேண்டிய ஓட்டுனர்களும் நடத்துனர்களும் வியாழக்கிழமை இரவிலேயே பொறையாறு பணிமனைக்கு வந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 7 ஓட்டுனர்களும் ஒரு நடத்துனரும் உயிரிழந்தார்.

இடிபாடுகளில் இருந்து 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயங்களுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

முற்றுகையும், போராட்டமும்

இந்தக் கட்டடம் சுமார் 60 ஆண்டுகள் பழமையானது என்றும் ஏற்கனவே அந்தக் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருந்ததாகவும் கூறிய போக்குவரத்துக் கழக ஊழியர்கள், விபத்தைப் பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியனை முற்றுகையிட்டனர்.

இதேபோல, உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள பொறையாறு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

விபத்து நடந்த பகுதியைப் பார்வையிடச் செல்வதாகவும் விரைவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

தமிழக போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது இரு மாதங்களுக்குள் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக செப்டம்பர் 7ஆம் தேதியன்று, கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

தற்போது இடிந்துவிழுந்துள்ள கட்டடம் 1943ல் சக்தி விலாஸ் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது என்றும் போக்குவரத்துக் கழகங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, இந்தக் கட்டடமும் அரசுடமையாக்கப்பட்டது என்றும் கூறியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, இந்தக் கட்டடம் மிக பலவீனமாக இருப்பதாக பல முறை பா.ம.க. போராட்டம் நடத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

இழப்பீடு அறிவிப்பு

இதற்கிடையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஏழரை லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுவதாகவும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்ச ரூபாயும் லேசாக காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்