நமக்கு நாமே பாணியில் தமிழக மக்களைச் சந்திக்கப்போவதாக மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

செய்தியாளர் சந்திப்பு

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைப் போல, நவம்பர் மாதம் முதல் மீண்டும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கப்போவதாக தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை காலையில் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், கட்சியை வளர்க்கும் நோக்கத்திலும் அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளை மக்களிடம் விளக்கும் நோக்கத்திலும் இந்தப் பயணத்தை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

நவம்பர் முதல் வாரத்திலிருந்து டிசம்பர் முதல் வாரம் வரை இந்தப் பயணத்தை மேற்கொள்ளப்போவதாகவும் சரியான பயணத் திட்டம் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

டெங்கு நோயால் மாநிலத்தில் 126 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசே தெரிவிக்கும் நிலையில், உடனடியாக சுகாதாரப் பேரிடர் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்க வேண்டும், வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணிகளில் தி.மு.கவினர் ஈடுபட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்களும் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்