அர்ச்சகர்களை மணம்முடிக்க 3 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா அரசின் கல்யாணப் பரிசு

கோயில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், அவர்களை மணம் முடிக்க முன்வரும் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலங்கானா மாநில அரசின் கீழ் இயங்கும், தெலங்கானா பிராமணர் நல வாரியம் அறிவித்துள்ளது பல்வேறு தரப்பினரிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

படக்குறிப்பு,

(கோப்புப் படம்)

அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு இருக்கும் பொருளாதார சிக்கல்களால் அவர்களுக்கு மணப்பெண் கிடைப்பது கடினமாக உள்ளதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த வாரியம் கூறியுள்ளது.

"அர்ச்சகர்கள் இருந்தால்தான் கோயில்களும் கலாசாரமும் நீடித்திருக்க முடியும். இந்த முடிவு அவர்களுக்கு பலனளிக்கும்," என்று 'தெலங்கானா பிராமிண் சம்ஷேமா பரிஷத்' எனப்படும் அந்த வாரியத்தின் தலைவர் கே.வி.ரமணாச்சாரி கூறியுள்ளார்.

"ஏழை பிராமணர்களுக்கு உதவவும், அவர்களின் நலம் மற்றும் முன்னேற்றத்திற்கு இம்மாதிரியான முடிவுகள் அவசியம்," என்று மன பிராமண சங்கம் எனும் அமைப்பின் தெலங்கானா மாநிலச் செயலர் அவதானுல நரசிம்ம சர்மா கூறியுள்ளார்.

2016-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிராமணர்கள் நலனுக்காக 100 கோடி ரூபாயை தெலங்கானா அரசு ஒதுக்கியிருந்தது.

அர்ச்சகர்கள் ஒரு வேளை ஏழ்மை நிலையில்கூட இருக்கலாம். ஆனால், இந்த முடிவை பலரும் விமர்சித்துள்ளனர்.

"இம்மாதிரியான முடிவுகள் அரசிலமைப்பு சட்டத்தின் நெறிகளுக்கு எதிரானது. நிர்வாக முடிவுகள் எனும் போர்வையின் கீழ் இவற்றை மறைக்க ஆட்சியாளர்கள் முயல்கின்றனர்," என்று கூறுகிறார் கவுன்சில் ஃபார் சோசியல் டெவலப்மென்ட் எனும் சமூக ஆய்வு மையத்தின் இயக்குனர் கல்பனா கண்ணபிரான்.

"அர்ச்சகர்களுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு அரசு எவ்வகையில் பொறுப்பாகும்? மக்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அரசுக்கு ஏதாவது பிரச்சனையா?" என்று மேலும் அவர் கேட்டார்.

ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் ஆவதில் உள்ள சிக்கலில் அரசு செலுத்தும் கவனம் மற்றும் அவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுவதற்கான நோக்கம் ஆகியவற்றை அவர் கேள்வி எழுப்புகிறார்.

"அரசியலமைப்புச் சட்டத்தின்படி சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில்தான் நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். சமூகத்தில் பின்தங்காதவர்களுக்காக அல்ல. இவ்வளவு பணம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாதா?" என்கிறார் அவர்.

பிற்போக்கான சமூகப் போக்கை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், சாதிய அமைப்பின் நிலவுடைமைவாத அடித்தளங்களை வலுப்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும் இம்முடிவை கல்பனா விமர்சித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு,

தாலி ஆணுக்கும் வேலி! – புதுவை அருகே 'புதுமைத் திருமணம்'

இந்தத் திட்டம் இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரானது என்று ஐதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரச்சனா ரெட்டி கூறுகிறார்.

"தெலுங்கானா மாநில அரசே அர்ச்சகர்களுக்கு வரதட்சணை வழங்குவது போல இத்திட்டம் உள்ளது," என்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் தேவி.

இதனிடையே, இத்திட்டம் குறித்த முழு விவரங்களையும் இன்னும் ஒரு வர காலத்தில் அறிவிக்கவுள்ளதாக பிராமிண் பரிஷத் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்