அயோத்யா: பிரம்மாண்ட ராமர் வேண்டாம், ஆலயமே போதும்

  • சமீராத்மஜ் மிஷ்ரா
  • பிபிசி

உத்தர பிரதேச மாநில அரசு அயோத்தியில் சரயூ நதிக்கரையில் நூறு மீட்டர் உயரம் கொண்ட ராமரின் சிலையை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் அயோத்யாவில் தீபாவளியை முன்னிட்டு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த 'அயோத்யா தீபத் திருவிழா' நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் அமைச்சர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

தீபாவளியன்று சரயூ நதியின் கரைகளிலும், படித்துறைகளிலும் சுமார் 1.71 லட்சம் தீபங்கள் வரிசையாக ஏற்றப்பட்டு அயோத்யா நகரே ஜொலித்தது. இதற்கு மக்கள் பரவலான வரவேற்பு தெரிவித்தனர்.

ஆனால், இதே சரயூ நதிக்கரையில் நூறடி உயர பகவான் ராமரின் சிலையை அமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக மாநில அரசு அறிவித்திருப்பதற்கு பரவலான எதிர்ப்பு எழுந்துள்ளது.

அயோத்தியாவில் வசிக்கும் இந்து மதத்துறவிகள், சாது சன்யாசிகள் உட்பட பல தரப்பினரும் அரசின் 'நூறடி உயர ராமர் சிலை' முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மிக உயரமான சிலையை நிறுவும் பெருமை அரசாங்கத்திற்கு கிடைக்கும். ஆனால் சிலைக்கு சாஸ்திரபூர்வ அங்கீகாரமோ, மரியாதையோ கிடைக்காது என்பதோடு, நாளடைவில் சிலைக்கான மரியாதையும் குறைந்துவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

பகவான் ராமரின் சிலை திறந்தவெளியில் நிறுவப்படக்கூடாது, அதற்காக ஆலயம் கட்டப்படவேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா சத்யேந்தர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகிறார், "ராமரின் சிலை, பிராண பிரதிஷ்டை செய்யாமல் திறந்தவெளியில் நிறுவப்படக்கூடாது. பகவான் ராமரின் சிலை அமைக்கப்பட்டால் அது ஆலயத்திற்கு உள்ளே அமைய வேண்டும் அல்லது பகவானின் சிலைக்கு மேற்புறம் கூரை அமைக்கவேண்டும்".

"அடுத்ததாக, பிரம்மாண்டமான சிலைக்கு தினசரி அபிஷேகம், பூஜைகள் மற்றும் நித்திய ஆராதனைகளை நிறைவேற்றுவதும் சிரமமானது. அதுமட்டுமல்லாமல், பக்திபாவம் குறைந்து, கண்காட்சிப் பொருளாக மாறிவிடும் அபாயமும் உள்ளது".

'சிலை நிறுவுவது அரசின் அரசியல் சாணக்கியத்தனம்'

ராமஜென்ம பூமியில் ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய அரசு, ஆலயம்-மசூதி என்ற சர்ச்சைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பிரம்மாண்ட சிலையை நிறுவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று கூறுகிறார் சத்யேந்த்ர தாஸ்.

வேண்டுமென்றால், முதலில் ராமஜென்ம பூமியில் ஆலயத்தை கட்டட்டும், அதன் பிறகு நூறடி ராமர் சிலையை நிறுவினால் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்கிறார் அவர்.

"தொலைவில் இருந்து பார்க்கும்போதே அயோத்யா, ராம்ஜென்ம பூமி என அடையாளம் காணப்படவேண்டும் என்பதால் பிரம்மாண்ட ராமர் சிலையை நிறுவுவதாக மாநில அரசு கூறுகிறது.

அயோத்யாவுக்கும், ராமருக்கும் உள்ள சம்பந்தம் யாருக்கு தெரியாமல் இருக்கப்போகிறது?" என்று கேள்வி எழுப்புகிறார் சத்யேந்த்ர தாஸ்.

இது அரசியல் யுக்தி என்று அவர் நேரடியாகவே சொல்கிறார். இப்படி எதாவது செய்தால் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதும், ராமர் என்ற பெயரால் என்ன லாபம் கிடைக்கும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் நிதர்சனம் என்பது முற்றிலும் மாறுபட்டது என்று கூறும் சத்யேந்த்ர தாஸ், ராமர் அவதரித்த பூமியில் அவருக்கு ஆலயம் கட்டும் மக்களின் ஆர்வத்தை மடைமாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போகும் என்கிறார்.

சத்யேந்த்ர தாஸ் கூறும் கருத்துகளையே பிற சாது சன்யாசிகளும் பிரதிபலிக்கின்றனர். திகம்பர் அகாடேவின் தலைவர் ஆசார்ய சுரேஷ்தாஸ் ராமரின் பிரம்மாண்ட சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

"பிற தெய்வங்களின் சிலை திறந்த நிலையில் நிறுவப்பட்டாலும், பகவான் ராமரின் சிலை கோயிலுக்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும்."

'சாது சன்யாசிகளிடம் ஏன் ஆலோசனையைக் கேட்கவில்லை?'

ராமரை மரியாதை செய்யும் அரசின் எண்ணம் பாராட்டிற்குரியது என்றாலும், இது பற்றி சாது சன்யாசிகளிடம் ஆலோசனை கேட்கவேண்டும் என்று ஆச்சார்ய சத்யேந்த்ர தாஸ் கூறுகிறார். ஆனால் அரசு இந்து மதத் துறவிகளிடம் கலந்தாலோசிக்கத் தவறிவிட்டது என்கிறார் அவர்.

பகவான் ராமரின் சிலை திறந்தவெளியில் நிறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அயோத்யாவில் வசிக்கும் மற்றொரு துறவி தர்ம்தாஸ் கூறுகிறார்.

பகவான் ராமரின் பிரம்மாண்ட சிலை நிறுவும் திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்பாயம் இதுவரை அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்தால் மட்டுமே சிலை நிறுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கமுடியும்.

குறிப்பிட்ட மதத்தை மேம்படுத்துவதற்கு இந்திய அரசியலமைப்பு சாசனம் அனுமதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் சிலர், ஆனால் குறிப்பிட்ட மதத்திற்கு சாதகமான முயற்சிகளை உத்தரப்பிரதேச மாநில அரசு மேற்கொள்வதாக விமர்சிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :