மெர்சல் காட்சிகளை நீக்கக் கோரிக்கை: பெருகும் எதிர்ப்பு, மீம்களின் கிண்டல் மழை

விஜய் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் திரைப் படத்தில் இருந்து பாஜக அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அரசை விமர்சிக்கும் சினிமா, சினிமாவை விமர்சிக்கும் அரசியல் - எது சரி?

இந்த சர்ச்சை தேசிய ஊடகங்களின் பேசு பொருளாகவும், சமூக ஊடகங்களில் டிரெண்டாகவும் மாறியிருக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் கிண்டல்களுக்கும், மீம்களுக்கும் குறைவில்லை.

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ModiVsMersal என்ற ஹேஷ்டேக் டிரென்டாகத் தொடங்கியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டரில் வெளியிட்ட கருத்து:

திரு. மோடி, தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு சினிமா. மெர்சலில் தலையிடுவதன் வாயிலாக தமிழ்ப் பெருமிதத்தை மதிப்பு நீக்கம் செய்யவேண்டாம்.

மெர்சல் திரைப்படத்தின் காட்சிகளை நீக்கக் கோருகிறது பாஜக. பராசக்தி படம் இன்று வெளியாகியிருந்தால் பின்விளைவுகள் என்னவாக இருந்திருந்திருக்கும் என்று டிவிட்டரில் கேட்டுள்ளார் ப.சிதம்பரம்.

திமுக தலைவர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் 1952ல் வெளியான பராசக்தி திரைப்படம் சமூக தீங்குகளை, அரசை, மூடநம்பிக்கைகளை எதிர்த்தபடம். சிவாஜி கணேசன் அப்படத்தின் மூலமே தமிழ்த் திரையுலகத்துக்கு நடிகராக அறிமுகமானார்.

வேறொரு டிவிட்டர் பதிவில் "படம் எடுப்பவர்களுக்கு அறிவிப்பு. சட்டம் வருகிறது, அரசின் கொள்கைகளை புகழ்ந்து ஆவணப்படம் மட்டுமே நீங்கள் எடுக்கலாம்," என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டிவிட்டரிலேயே இப்படி பதில் சொல்லியிருக்கிறார்.

ஹெச். ராஜா முன்னதாக வெளியிட்ட வேறொரு டிவிட்டர் பதிவில் நடிகர் விஜய் கிறிஸ்துவர் என்பறும், அதனால் அவர் மோடியை எதிர்க்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் ஆங்கிலத்தில் கருத்துத் தெரிவித்த கமலஹாசன் "மெர்சல் சான்றிதழ் பெற்றது. அதனை மறு தணிக்கை செய்யவேண்டாம். விமர்சனத்தை தர்க்கபூர்வமான வாதங்களின் மூலம் எதிர்கொள்ளவேண்டும். விமர்சகர்களின் வாயை அடைக்கவேண்டாம். பேசும்போதுதான் இந்தியா ஒளிரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தும் காட்சிகளை நீக்கத் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளத்திலும் பாஜகவுக்கு கடும் எதிர்வினைகள் வருகின்றன. மெர்சலுக்கு மறு தணிக்கை வேண்டும் என்றால், எங்களுக்கு மறு தேர்தல் வேண்டும் என்று ஒரு மீம் வெளியானது.

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையைவிட பாஜகவின் பின்னணி இசையே மெர்சலை பெரிய படமாக்குகிறது என்று ஒரு பதிவர் கருத்துப் பதிந்தார்.

ஃபேஸ்புக்கிலும் மெர்சலை விமர்சிக்கும், காட்சிகளை வெட்டக் கோரும் பாஜகவுக்கு, கிண்டலாக எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. பாஜகவுக்கு எதிராக விஜய் பேசும் காட்சிகள் ஏற்கெனவே சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்டு வலம்வரத் தொடங்கிவிட்டன. சினிமாவை தணிக்கை செய்தாலும் இந்தக் காட்சிகளை பகிர்ந்து வைரலாக்குவோம் என்று பலர் சமூக ஊடகங்களில் தோள் தட்டுகிறார்கள். தமிழிசையும், ஹெச்.ராஜாவும் பேசி மோடியை வம்பில் இழுத்து விட்டதாக கிண்டலாகக் கூறும் மீம் ஒன்று.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :