"டிரம்ப்பே வந்தாலும் பயமில்லை; நமக்கு மோடி இருக்காரு" தமிழக அமைச்சர் பேச்சு

ராஜேந்திர பாலாஜி

"ஒபாமாவே வந்தாலும், ட்ரம்பே வந்தாலும் பயம் கிடையாது; நமக்கு மோடி இருக்காரு," என பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சமூக வலை தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று பேசிய ராஜேந்திர பாலாஜி, "ஒருத்தருக்கும் பயப்பட வேண்டியதே கிடையாது. ஒபாமாவே வந்தாலும் ட்ரம்பே வந்தாலும் நமக்கு பயமே கிடையாது. நமக்கு மோடி இருக்காரு. யாரைக் கண்டும் எந்த பேடியைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு மோடி இருக்காரு" என்று பேசினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு, கட்சியின் பெயரும் இரட்டை இலைச் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது.

இது குறித்தும் பேசிய ராஜேந்திர பாலாஜி, மத்திய அரசு தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் இரட்டை இலைச் சின்னம் தங்கள் தரப்புக்கு கிடைக்கும் என்று பொருள்படும்படி, "இரட்டை இலைச் சின்னம் சின்னம் நம்ம கிட்ட வரப்போவுது, கட்சி நம்மகிட்ட வரப்போகுது." என்றும் பேசினார்.

ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

அழிக்கிறவருக்கே வாழ்த்துப்பாடும் ஒரே கரகாட்ட கோஷ்டி என்றும், அ.தி.மு.கவுக்கு ஓனர் யாரு என்றும் அவரது நேர்மை தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்