சேலம் தனியார் மருத்துவமனையில் பாம்பு, கொசுக்கள்: பத்து லட்சம் அபராதம்

  • 22 அக்டோபர் 2017
சேலம் தனியார் மருத்துவமனையில் பாம்பு படத்தின் காப்புரிமை salem municipal corporation

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு ஆய்வின்போது ஒரு தனியார் மருத்துவமனையில் கொசு, புழுக்கள் மற்றும் விஷபாம்பு உள்ளிட்டவை காணப்பட்டதால் அந்த மருத்துவமனை ரூ.பத்து லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள அந்த மருத்துவமனை வளாகத்தின் தண்ணீர் தொட்டிகளில் பாம்பு மற்றும் கொசுகள் இருந்தன. மருத்துவக் கழிவுகள் அருகில் இருந்த ஓடையில் கொட்டப்பட்டிருந்தன. அதனால் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது என ஆணையர் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், கொசுக்களின் உற்பத்தியை தடுக்காமல் இருப்பதால், பொதுச் சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலை தனியார் மருத்துவமனை செய்துள்ளது என ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்குப் பிறகு, டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்திற்காக அந்த மருத்துவமனைக்கு மாநகராட்சியால் வழங்கப்படும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் தண்ணீர் தொட்டிகள் மூடப்படாமலும், கொசுக்கள் உற்பத்தி இருப்பதைக் கண்டு மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தினருக்கு ரூ.20,000 அபராதம் விதித்துள்ளதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மையற்ற நிலையில் இருந்ததாகக் கூறி ஒரு தனியார் பள்ளிக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த சுகாதார அமைச்சகம் தினந்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. பொது இடங்களில் நிலவேம்புக் குடிநீர் அளிக்கப்படுகிறது.

எழும்பூர் அரசு மருத்துவமனையைப் பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். ''டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடிய நோய் என்பதால் மக்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்,'' என்றார் அமைச்சர்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் பலியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்