குஜராத்: காங்கிரசுடன் கை கோர்த்த முக்கிய பிற்படுத்தப்பட்டோர் தலைவர்

மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள குஜராத்தில் பலம் வாய்ந்த பிற்படுத்தப்பட்டோர் தலைவர் அல்பேஷ் தாக்கோர் காங்கிரசோடு கை கோர்த்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ALPESH THAKOR / FACEBOOK

திங்கள் கிழமை அல்பேஷும், ராகுல்காந்தியும் இணைந்து அகமதாபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளார்கள்.

இரண்டு தசாப்தங்களாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில், கடந்த ஒரு மாதத்தில் ராகுல்காந்தி மேற்கொள்ளவுள்ள மூன்றாவது பயணம் இது. குஜராத்தின் அரசியல் சதுரங்கத்தில் தனது காய்களை நல்லவிதமாக நகர்த்துவதாக குஜராத் அரசியலை கவனிப்பவர்கள் கணிக்கிறார்கள்.

யார் இந்த அல்பேஷ் தாக்கோர்? இவரால் குஜராத்தில் நடைபெறும் இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் திட்டங்களை தகர்க்க முடியுமா?

குஜராத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 70 தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்கள் பிற்படுத்தப்பட்டோர் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒரு காலத்தில் பாஜக தலைவராக இருந்தவரின் மகனான தாக்கோர் இந்த பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதியாக உருவாகியிருக்கிறார்.

வீரியமில்லாத மதுவிலக்கு சட்டத்தை எதிர்த்து அவர் பயணம் தொடங்கியதில் இருந்து இவரது அரசியல் வாழ்க்கை ஏறுமுகமாகவே உள்ளது. வளரும் இவரது செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக அரசு, மதுவிலக்குச் சட்டத்தைத் திருத்தி தண்டனைகளைக் கடுமையாக்கியது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் ஒற்றுமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கிய தாக்கோர் அவர்களது உரிமைகளுக்காகப் பாடுபடுவதாகக் கூறினார். கடந்த மூன்றாண்டுகளாக வேலையற்ற இளைஞர்கள், ஆஷா சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆகியோருக்காக குரல் கொடுத்தார். போராடினார்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய அல்பேஷ் தாக்கோர் "அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க, வேலையற்ற இளைஞர்களுக்கு, ஏழைகளுக்காக நான் போராடுகிறேன். ராகுல்காந்தியும் எங்களுடன் ஒரே பக்கத்தில் இருக்கிறார்".

ஒரு நேர்மையான அரசு வேண்டும் அதற்காகவே காங்கிரசுடன் இணைவதாக கூறிய அவர், திங்கள் கிழமை நடைபெறவுள்ள பேரணியில் குஜராத்தின் அடுத்த அரசுக்கான அடிக்கல்லை நாட்டவிருப்பதாக கூறியுள்ளார் அவர்.

ஒவ்வொரு பூத் அளவிலும் போராட ஏற்கெனவே தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுக்கு ஆறுதல்

அதே நேரத்தில் பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் பட்டேதார் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேலின் நெருங்கிய கூட்டாளிகளான ரேஸ்மா பட்டேல், வருண் பட்டேல் ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜக தங்கள் பெரும்பான்மையான கோரக்கைகளை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதை எதிர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் மக்கள் தம் பக்கத்தில் இருப்பதாக டிவிட்டரில் கருத்துத் தெரிவித்தார் ஹர்திக் பட்டேல்.

ஜிக்னேஷ்

இன்னொரு புறம் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானியை காங்கிரசில் வந்து இணைய வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. பிபிசி குஜராத்தியிடம் பேசிய மேவானி தமது நோக்கம் பாஜக-வை வீழ்த்தவேண்டும் என்பதுதான் என்றபோதும் காங்கிரசில் இணைவது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்