நடிகர் விஷால் அலுவலகத்தில் சோதனை ஏன்: வருமான வரித் துறை விளக்கம்

நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை ஏன்? படத்தின் காப்புரிமை Getty Images

வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, செலுத்த வேண்டிய 50 லட்ச ரூபாய் வரியை செலுத்தாதன் காரணமாகவே விஷாலின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும் சமீபத்தில் மெர்சல் திரைப்படம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கும் இந்த நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லையென்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று மாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மெர்சல் திரைப்படத்தை பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா இணையத்தில் பார்த்ததாக ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார். சமீபத்தில்தான் வெளியான திரைப்படத்தை இணையத்தில் பார்த்தாக எச். ராஜா கூறியது குறித்து விஷால் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று மாலையில் விஷாலின் அலுவகத்தில் சோதனை நடைபெற்றது. சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள்தான் சோதனை நடத்தியதாக முதலில் செய்திகள் வெளியான நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் அதனை மறுத்தது. இந்த நிலையில், வருமான வரித் துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

ஊதியம் வழங்கும் இடத்திலேயே பிடித்தம் செய்யப்படும் வரியானது ஒழுங்காக வருமான வரித்துறைக்குச் செலுத்தப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது பல இடங்களில் சோதனைகள் நடப்பது வழக்கம்தான் என்றும் அது போன்ற சோதனையே திங்கட்கிழமை நடைபெற்றது என்றும் கூறியுள்ளது.

விஷாலின் பெயரைச் சுட்டிக்காட்டாமல் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில், "சென்னையில் உள்ள வருமான வரித் துறை அலுவர்கள் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் அலுவலகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தமிழக விவசாயிகளுடன் விஷால்

மேற்படி நிறுவனம் 2016-17 நிதி ஆண்டில் வரிபிடித்தம் செய்யப்பட்டபின் பிறகு அவர் செலுத்த வேண்டிய ரூ. 50 லட்சம் மதிப்பிலான வரியை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற விதிமீறல் குறித்து குறிப்பாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" என்று கூறியுள்ளது.

வருமான வரி சட்ட விதிகளின்படி பிடித்தம் செய்யப்பட்ட வரி, ஏழு நாட்களுக்குள் அரசு கணக்கில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஆய்வின் போது, மேற்படி நபர் விதிமீறலை ஒப்புக்கொண்டு, செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் உடனடியாக செலுத்துவதாக உறுதியளித்தார் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத் தயாரிப்பாளர் மீதான நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :