சிறை விடுப்பு முடிந்து சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், தனது இரு மாத கால சிறை விடுப்பு முடிந்து இன்று மீண்டும் சிறைக்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நலம் பாதிப்படைந்திருப்பதால், அவருக்கு சிறை விடுப்பு அளிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் கோரினார்.

ஆனால் இந்தக் கோரிக்கையை பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறையின் கண்காணிப்பாளர் நிராகரித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தமிழக அட்வகேட் ஜெனரலின் கருத்தை மாநில அரசு கேட்டது. பேரறிவாளன் மத்திய அரசுச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தாலும் அவர் தன் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்துவிட்டதால், மாநில அரசில் உள்ள பொருத்தமான அதிகாரிகள் அவருக்கான சிறைவிடுப்பு குறித்து முடிவு செய்யலாம் என அட்வகேட் ஜெனரல் தன் கருத்தை அளித்தார்.

இந்நிலையில், அவருக்கு ஒரு மாத காலம் சிறைவிடுப்பு அளிப்பதாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று தமிழக அரசு அறிவித்தது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/GETTY IMAGES
Image caption அற்புதத்தம்மாள்

இதற்குப் பிறகு, அவரது சிறை விடுப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த இரு மாத சிறை விடுப்பு இன்று நிறைவடைந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் தனது ஜோலார்பேட்டை வீட்டிலிருந்து பேரறிவாளன் சிறைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் அற்புதத்தம்மாள், "இந்த இரு மாதங்கள் எப்படி போயின என்றே தெரியவில்லை. இனியும் அவரது விடுதலைக்கு தொடர்ந்து முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 26 ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சிறையை விட்டு வெளியில் வந்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
’’அடிமை மனநிலை கொண்டவர்களின் ஆட்சிதான் இங்கு நடந்து வருகிறது’’

தற்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 7 பேர் சிறையில் தண்டனை பெற்றுவருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா இவர்கள் அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார். ஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :