பலர் வேடிக்கை பார்க்க நடைபாதையில் நடந்த பாலியல் வல்லுறவு: விசாகப்பட்டினத்தில் கொடூரம்

பாலியல் வல்லுறவு காரணம் குறித்து கேள்வி எழுப்பும் பதாகை படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஞாயற்றுக்கிழமை விசாகப்பட்டினம் ஒரு வெட்கக்கேடான சம்பவத்தை கண்டது.

சிவா எனும் இளைஞர் ஒரு பெண்ணை நடைபாதையொன்றில் பகல் வேளையில் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியுள்ளார். மனிதத்தன்மையற்ற இந்தச் செயலுக்கு பெருங்கோபமும் ஆத்திரமும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வானது நமது சிவில் சமூக முகத்தின் மீதான அறை என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குளோபல் எய்ட் அமைப்பின் தலைவர் சாய் பத்மா இந்த நிகழ்வு குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

''இந்த சமூகம் எப்படி பெண்களை பார்க்கிறது என்பதை மட்டும் இந்த நிகழ்வு காட்டவில்லை. உடல்ரீதியாவோ மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமூகம் எப்படி மனிதத்தன்மையற்ற வகையில் அணுகுகிறது என்பதை காட்டுகிறது'' என அவர் தெரிவித்துள்ளார்.

மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு உணவும் உறைவிடமும் இன்றி நடைபாதையில் இருப்பதை பார்த்தபிறகு அவருக்கு உதவி செய்யாமல் அவரை சட்டை செய்யாமல் எளிதாக நடந்து செல்கிறோம். ஏன் இப்படியொரு மனிதன்மையற்ற செயல் நடக்கிறது? ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி மட்டுமே நாகரீகமாகி விட்டதா? நமது மனதில் போதிய அளவு நாகரிகம் அடையவில்லையா? அந்த வல்லுறவை நிறுத்துவதற்கு பதிலாக ஒருவர் முழு நிகழ்வையும் படம் பிடித்துக் கொண்டிருந்தால் எப்படி அந்த உளவியலை நாம் புரிந்து கொள்வது?என கேள்வி எழுப்பிகிறார் பத்மா.

படத்தின் காப்புரிமை Getty Images

''அவள் ஒரு உதவியற்ற நிலையில் இருந்ததால் ஒருவேளை அது பாலியல் தாக்குதல் அல்ல என மக்கள் நினைத்திருக்கலாம் . ஆனால் ஒரு அசாதாரணமான நிகழ்வு கண்முன்னே பகல் வேளையில் நடந்து கொண்டிருக்கும்போது அதை தடுக்கவோ என்ன நடக்கிறது என விசாரிக்கவோ செய்யவேண்டியது நமது கடமை இல்லையா? என கேட்கிறார் மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் வேமனா வசந்த லட்சுமி.

சிலர் மட்டுமே மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் நாம் அவர்களை மன நல மருத்துவர்களிடம் அழைத்துச்செல்லலாம். ஆனால் மக்களில் பலர் சமுதாயம் குறித்து அலட்டிக்கொள்ளாமல் சக மனிதரின் மீது கவலை இல்லாதிருந்தால் அவர்களை எந்த மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என வருத்தம் தெரிவிக்கிறார்.

''எங்கிருந்து இந்த வக்கிரம் வருகிறது? ஆதரவற்றவர்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியும் எனும் போக்கை மக்கள் எப்படி எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்'' என்கிறார் லட்சுமி.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிகழ்வானது உதவியின்றி தவிப்பவர்களுக்கு இந்த சமூகம் எப்படி பதில் கூறுகிறது என்பதை பிரதிபலிப்பதாக சமூக செயற்பாட்டாளர் தேவி கருத்து தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவா ஒரு போதை அடிமை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் ஒரு வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்கனவே அவர் குற்றவியல் பதிவுகளை கொண்டிருந்தார். கடந்த 2012ல் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக டவுன் சர்க்கிள் காவல்துறை அதிகாரி ஜி.வி.ரமணா பிபிசியிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேசிய குற்றவியல் பணியக பதிவின் 2015 ஆம் ஆண்டு ஆவணங்களின்படி பாலியல் வல்லுறவு அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களின் வரிசையில் பதினோராவது இடத்தில் ஆந்திரப் பிரதேசம் இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்