வாதம்-விவாதம்: இறந்தவர்களுக்கு மட்டும்தான் பேனரா?

தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களின் படங்களுடன் கூடிய பேனர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் மற்றும் பதாகைகளை வைப்பதற்கு தடைசெய்யும் வகையில் ஏற்கனவே உள்ள சட்ட விதிகளில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டது.

மேலும், இதுபோன்ற பேனர்களை வைப்பவர்கள், தங்கள் படங்களையே அதில் போட்டுக்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப் படம்)

இதுதொடர்பாக, பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் "வாதம் விவாதம்" பகுதியில், "உயிருடன் உள்ளவர் படத்துடன் பேனர் வைக்கத் தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவு அவசியமானதா? அடிப்படை மீறலா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

அது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

"இது உரிமை மீறல்தான். ஆனால் தமிழகத்தில் காணப்படும் கட்அவுட் கலாச்சார சீரழிவை பொறுத்த மட்டில் இது மிக அவசியம். இந்த சட்டம் மிக தாமதமாக இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது அந்த வகையில் இதற்கு முன் நீதிபதிகளின் முதுகெலும்பு வளைந்து குனிந்து இருந்ததையே காட்டுகிறது.," என்று தமிழக அரசியல் கலாசாரத்தை விமர்சிக்கிறார் சாகர் வின்சென்ட் எனும் நேயர்.

முழுமையாக தடை செய்ய வேண்டும்!

"பேனரையே முழுமையாக தடை செய்ய வேண்டும். இதில் உயிர் உள்ளவர், இறந்தவர் என்ற பாகுபாடு தேவையில்லை. அதேபோல பெயர்ப்பலகைகள், அறிவிப்பு பலகைகளில் நோட்டீஸ் ஒட்டுவதையும் தடுக்க வேண்டும்," என்று ஒட்டுமொத்த தடைக்கு குரல் கொடுக்கிறார் சுரேஷ் ஸ்ரீநிவாசன் எனும் பதிவர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்காவில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

"அரசியல் கட்சி பேனர்கள் வைக்ககூடாது என சட்டம் போட்டால் போதும். இது மனித உரிமை மீறலாகவே அமையும்," என்று இந்த தீர்ப்பு அரசியல் கட்சிகளை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் சிவசெந்தில் குமார்.

இந்தியா முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இதர கட் அவுட் அனைத்தையும் தடை செய்ய வேண்டும், என்று இதே தடை இந்தியா முழுதும் வேண்டும் என்கிறார் சையது உசேன் மன்சூர்.

"ஜெயலலிதாவின் பேனர் வைக்கலாம், கலைஞரது கூடாதென்று அர்த்தம்," என்று இந்தத் தீர்ப்பை தமிழக அரசியலுடன் பொருந்துகிறார் தங்கமணி ராகவன் எனும் நேயர்.

"செத்தவன், சாகாதவன் என்று எதற்குமே பேனா் தேவையில்லை. பேனா் கலாச்சாரமே தவறு, " என்பது மார்க் அந்தோணியின் கருத்து.

படத்தின் காப்புரிமை AFP

'பலர் விபத்தில் சிக்குகிறார்கள்'

"பேனர்களை பார்த்துக்கொண்டே போய் பலர் விபத்தில் சிக்குகிறார்கள். ஆனால் இந்த உத்தரவு விளம்பர கம்பெனிகளுக்கும் பொருந்தும்தானே? இல்லை அரசியல் மற்றும் சினிமாவிற்கு மட்டுமா?," என்று கேள்வி எழுப்புகிறார் ரவி ராஜ் .

ஆனால், "வேடிக்கையான தீர்ப்பாக உள்ளது. சாதாரண மக்கள் தன்னை விளம்பரபடுத்தி கொள்ள தடையாக இருக்கிறது," என்கிறார் ஏசுசாமி என்னும் பதிவர்.

இறந்தவர்களுத்தான் பேனரா?

"இறந்தவர்களுக்குதான் பேனர் வைக்கவேண்டுமென்று நீதிமன்றம் கூறுவது போன்றுள்ளது. பேனர் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு என்பது நீதிமன்றத்துக்கு தெரியவில்லை," என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அடிப்படை குறித்து விமர்சிக்கிறார் மகா நடராசா எனும் நேயர்.

"உயிருடன் இல்லாதவரெனின் கடவுள் உயிருள்ளவரா? இறந்துபோனவரா?," என்பது மரியா புஷ்பா ராஜின் கேள்வி.

வீண் விவாதம்!

"வீண் விவாதம் ...மக்கள் மனதில் பெரியதாக இடம்பிடிக்க யாரும் விரும்பவில்லை....பேனரில் பெரியதாக காட்டிக் கொண்டால் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியுமா ? பேனர் பிரச்சினைக்கு நீதிமன்றம் அருமையான தீர்ப்பு வழங்கியுள்ளது ..மக்கள் மனமுவந்து ஏற்கும் தீர்ப்பு," என்று பதிவிட்டு இந்த வாதமே தேவையற்றது என்கிறார் பச்சையப்பன் ஞானசுந்தரம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்