நியாய விலைக் கடையில் அநியாய விலையா? கேள்வியெழுப்பும் மக்கள்

இனிப்பான சர்க்கரையின் விலையை நியாயவிலை கடைகளில் அதிகரித்து மக்களுக்கு கசப்பை உண்டாக்கியுள்ளது இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.

இதுதொடர்பாக, பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் "வாதம் விவாதம்" பகுதியில், ரேஷன் சர்க்கரை விலையை கூட்டியுள்ளது தமிழக அரசு. இது அவசியமானதா? தமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தை நீர்க்கச் செய்யும் முயற்சியா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

அது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

படத்தின் காப்புரிமை AFP

கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று!

"இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் அடிபட்டுள்ள ஏழைகளுக்கு உணவு செலவை ஓரளவிற்கு சமாளித்து கொடுத்து வருவது இந்த பொது விநியோக திட்டம். இதிலும் கை வைத்து உயிருள்ள மக்களை சாகடிக்காமல் விடாது போல மத்திய அரசும், மாநில அரசும்! ஆனால் ஒன்று, மக்கள் இவர்களுக்கு மரண அடி கொடுக்க காத்திருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை தேர்தல் மூலமாக!" என்று பதிவிட்டுள்ளார் ஷாஹீல் ஹமீது என்ற ஃபேஸ்புக் பயனர்.

"ரேசன் கடைகளில் திருட்டுத் தனமாக ஏற்றுமதி செய்யப்படும் அரிசி, சர்க்கரை, ஆயில், உப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தி சரியாக மக்களிடத்தில் கொடுக்க வக்கு இல்லை. அதை விடுத்து முறையாக கார்டு வைத்து வாங்கும் ஏழை மக்களை வதைப்பது கொடுமை. மத்திய அரசை கண்டிக்கிறேன்" என்று ரேஷன் முறையில் நடக்கும் முறைகேடுகளை பட்டியலிட்டுள்ளார் ரம்சான் அலி என்ற பிபிசி நேயர்.

ரேஷன் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான தொடக்கம்

"ரேசன் கடைகளில் மக்களை நாட விடாமல் வெளி மார்க்கெட் விலையில் அனைத்து பொருட்களையும் விலை ஏற்றி, மக்களே ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் வெளி கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். அது இவர்களுக்கும் ரேசன் கடைகளை மூட காரணம் சொல்ல ஏதுவாய் அமையும்" என்று ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார் மாணிக் என்னும் பயன்பாட்டாளர்.

நியாயவிலை கடைகளா? அந்நியாயவிலை கடைகளா?

ஜெயக்குமார் என்னும் ஃபேஸ்புக் பயனர், "மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதால் ரேஷனில் சர்க்கரை விலையை உயர்த்தியுள்ளனர். இனி அந்நியாய விலைக்கடைகள் என பேரை மாற்றிக்கொள்ளலாம். அடித்தட்டு மக்களை இந்த அரசுகள் கைகழுவிவிட்டன" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எம்எல்ஏக்களின் சம்பளம் மட்டும் உயர்வு?

"MLA களின் சம்பளம் 1 லட்சம் உயர்த்திவிட்டு ஏழைகளின் உணவு பொருட்களில் கைவைப்பது கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார் மோகன்ராஜ் என்ற நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்