வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரண்டு நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை NAVEEN

நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழையின் காரணமாக போக்குவரத்துக்கு ஏற்படும் நெரிசல், சாலைகளில் நீர் தேங்கும் இடங்கள் ஆகியவை குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு இருப்பதை அறிவிக்க வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ எடுத்து புகார்களை அனுப்பலாம் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளம், ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மற்றும் சென்னை மற்றும் கடலூரில் பல குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய சம்பவங்கள், உயிரிழப்புகள் போன்றவை தமிழக மக்களின் நினைவுகளில் இன்னும் பசுமையாக உள்ளன.

சென்னை நகரத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 15 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வருவாய்துறை செயலர் சத்யகோபால் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை NAVEEN
Image caption அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

''தமிழகம் முழுவதும் 4,399 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிவாரணப் பணிகளை செயல்படுத்த வருவாய்துறை, தீயணைப்பு, காவல்துறை, சுகாதாரத்துறை என பல்துறை அரசு அலுவலர்களைக் கொண்ட 589 குழுக்களை அமைத்துள்ளோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூடுதலாக மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறியுள்ளார். ''டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பாதிப்புகள், பருவமழை சமயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்களை பணியில் அமர்த்தவுள்ளோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூர்வாறும் பணிகள் , இடர்பாடுகளை நீக்குவது, சாக்கடை நீர் தேங்குவதை தடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பீகாரில் அசத்தும் தலித் பெண்களின் இசைக்குழு

கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

''வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் 21 இடங்களில் மழையின் அளவை கண்காணித்தோம். சீர்காழியில் அதிகபட்சமாக 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது,'' என்றார்.

Image caption கூவம் நதியைப் பார்வையிடும் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் அதிகாரிகள்

வளி மேலடுக்கு சுழற்சி இலங்கை மன்னார் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், அதன் தாக்கம் தமிழகத்தில் உணரப்படுகிறது என்றார் பாலச்சந்திரன். ''தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்,'' என்றார்.

சென்னை, திருவள்ளூர்,கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :