1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - நடந்தது என்ன?

  • மாக்ஸ்வெல் பெரேரா
  • முன்னாள் கூட்டு ஆணையர், டெல்லி போலீஸ்

1984 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் குறிவைத்து தாக்கப்பட்ட சீக்கிய சமுதாயம் பற்றிய விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் ஒவ்வோர் ஆண்டும் உயிர்த்தெழுந்து வருகின்றன.

பட மூலாதாரம், FABRICE COFFRINI/AFP/Getty Images

ஆனால், அதற்கான முடிவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணமும் இதுவரை கிடைத்தபாடில்லை.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகதீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.

இதைத்தவிர, சீக்கிய சமுதாயத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் பிரதராக பொறுப்பு வகித்தவருமான மன்மோகன் சிங் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் கோப அலைகள் அடங்காத சூழலில், ஒவ்வொரு நாளும் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளையும், எதிர்க்கருத்துக்களையும் செய்தித்தாள்கள் வெளியிட்டு வந்தன.

1984ஆம் ஆண்டு நவம்பர் மாத கலவரங்களை பற்றி நினைக்கும்போது, ஒரு பத்திரிகையாளரை சந்தித்த நினைவுகள் என் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கிறது.

டெல்லியின் வடக்குப்பகுதிகளில் சாலையில் நான் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பத்திரிகையாளரை சந்தித்தேன். அவர் பெயர் பிரதாப் சக்கரவர்த்தி என்று நினைக்கிறன். அக்டோபர் 31ம் தேதி தனது சீக்கிய பாதுகாவலர்களாலேயே இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு ஐந்து நாட்கள் கழித்து இந்த சந்திப்பு நடைபெற்றது...

"இத்தனை நாட்களாக நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்?" என்பதுதான் அவரை நோக்கி நான் எழுப்பிய கேள்வி.

பட மூலாதாரம், NARINDER NANU/AFP/Getty Images

பிரதமரை சீக்கியர்கள் படுகொலை செய்ததால், மக்கள் சீக்கிய சமுதாயத்தினர் மீதே வெறி கொண்டிருந்த சமயம் அது. சீக்கியர்கள் மீதான வெறுப்பினால், கலவரங்கள் வெடித்தன. கலவரக்காரர்கள் கலவரத்தை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

"மக்கள் சீக்கியர்களை கொலை செய்ய முயன்றபோது, நான் துப்பாக்கியால் அவர்களை தடுத்தபோது, அதில் சிலர் இறந்தார்களே அப்போது எங்கிருந்தீர்கள்?" என்பதுதான் என்னுடைய கேள்வியின் தாத்பர்யம்.

சாந்தினி செளக்கில் உள்ள பிரபல சீஜ்கஞ்ச் குருத்வாராவை பாதுகாப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினேன். அங்கு அடைக்கலமாக இருந்த சீக்கியர்களை மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியபோது அதை எதிர்த்து துப்பாக்கித் தாக்குதலை நிகழ்த்தி அந்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன்.

அதேசமயத்திலும் வெறியுடனும் இருந்த சீக்கியர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரிக்காமல் இருக்க முழுமுயற்சிகளையும் செய்தேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

எனக்கு வேறு சில விசயங்களில் காவல்துறைமீது மன வருத்தம் இருந்தது. நிலைமை பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறை வயர்லஸ் மூலம் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி என்னுடைய மேலதிகாரிகளுக்கு எதுவுமே தெரியாது.

இந்த விவகாரம் பற்றி இத்தனை வருடங்களாக நான் எதையும் சொல்லாமல் அமைதி காத்தேன். ஒரேயொரு முறை போலிஸ் உள்விசாரணை குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறேன்.

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/AFP/Getty Images

எஸ்எஸ் ஜோஹ் தலைமையிலான காவல்துறையின் உண்மை கண்டறியும் விசாரணை கமிட்டியை சேர்ந்த வேத் மர்வாஹ் முன்னிலையில்தான் ஒரேயொரு முறை அதுபற்றி விளக்கமளித்தேன்.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட கலவரங்களின்போது போலீஸ் ஆணையராக இருந்த சுபாஷ் தன்டோனிற்கு பிறகு எஸ்எஸ் ஜோஹ் பதவியேற்றார்.

சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பாததாலேயே நான் அமைதியாக இருந்தேன் என்று சொல்கிறேன். அதைத் தவிர மற்றொரு முக்கியமான காரணம் அன்றைய சூழ்நிலை.

கலவரங்களுக்கு பிறகு தகவல்கள் கிடைக்கத் தொடங்கியபிறகுதான் எனக்கு முழு நிலைமையும் தெரியவந்தது. நான் பொறுப்பில் இருந்த வடக்கு டெல்லியைத் தவிர, டெல்லியின் பிற பகுதியில் போலிசார் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது.

இந்த சமயத்தில் நான் கடமை தவறாமல் பணியாற்றினேன் என்று சொன்னால் அதன் விளைவு அனைவருக்கும் தர்மசங்கடம் ஏற்படும்.

கடந்த 33 ஆண்டுகளில் அரசால் நியமிக்கப்பட்ட எட்டு அல்லது ஒன்பது ஆணையங்களிலும் நான் விசாரிக்கப்படவில்லை. ஆனால், ஆரம்பகட்டங்களில் நடைபெற்ற விசாரணைகளில் கடமை தவறாத சில டெல்லி போலீஸ் அதிகாரிகளில் நானும் ஒருவன் என்று பாராட்டப்பட்டேன்.

கலவரத்தின்போது பத்திரிகையாளரை நான் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேனே, அதைப்பற்றி இப்போது பார்ப்போம். "இத்தனை நாட்களாக நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்?" என்ற கேள்விக்கு பத்திரிகையாளர் பிரதாப் சக்கரவர்த்தி வெளிப்படையாக சொன்ன பதில் என்ன தெரியுமா?

"டெல்லியின் வடக்குப் பகுதியில் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை, டெல்லியின் பிற பகுதியில் நடப்பதுபோன்ற கலவரங்கள் எதுவும் இங்கே நடக்கவில்லை".

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP/Getty Images

அவர் பொதுவாக சொன்னது ஓரளவுக்கு சரியாக இருந்தாலும், அது முற்றிலும் சரியானதல்ல. ஏனெனில் டெல்லியின் வடக்குப் பகுதியிலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. அதை கடமையுணர்வு கொண்ட போலிசாரும், மக்களும் இணைந்து செயல்பட்டு கட்டுப்பாட்டிற்குள் வைத்தார்கள். மக்களின் பங்கு இதில் மகத்தானது.

டெல்லியின் வடக்குப் பகுதியில் கலவரத்தை கட்டுப்படுத்தி, சீக்கிய மக்களின் உயிர்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கோ, தைரியமாக செயல்பட்ட பொதுமக்களுக்கோ உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

கலவரங்களை பற்றிய செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களிடம் நான் சொன்ன செய்தி இதுதான். "கலவரத்தில் ஈடுபட்டவர்களில் நான் சுட்டவர்களைத் தவிர வேறு யாரும் இறப்பதை நான் பார்க்கவில்லை".

நான் பணியில் இருந்த இடத்தில் எந்தவொரு மனிதரோ (சீக்கியர் என்று படிக்கவும்), கலவரக்காரரோ இறக்கவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். கலவரக்காரர்களை துப்பாக்கியால் சுட்டாவது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதுதான் போலிசாகிய என்னுடைய கடமை.

கலவரங்களின்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலிசார் பற்றி பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அரசின், நிர்வாகத்தின் மேலிடத்திலிருந்து 'குறிப்புக்காக' போலிசார் காத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது.

எனது கருத்துப்படி, நடவடிக்கை எடுக்கும் அவசியம் ஏற்படும் நிலையில், போலிஸார் எந்தவொரு உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் மக்களின் நலன் கருதி செயல்படவேண்டும்.

போலிசார் குழப்படைந்து, செயல்பட தயங்கி தாமதித்திருந்தால், அல்லது வேண்டுமென்றே கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால், அவர் கடமை தவறியவர், தண்டனைக்கு தகுதியானவர் என்றே நான் எண்ணுவேன்.

(இவை எழுத்தாளரின் சொந்த கருத்துக்கள்)

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :