கவுன்டரில் ஆளில்லை: டிக்கெட் இல்லாப் பயணிகளிடம் வழியில் கட்டணம் வசூலித்த ரயில்வே

ரயில்

டிக்கெட் கவுன்டரில் ஆள் இல்லாததால் டிக்கெட் எடுக்காமல் ரயில் ஏறிய பயணிகளிடம் வழியில் கட்டணம் வசூலித்த விநோத சம்பவம் ராமேஸ்வரத்தில் நடந்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் 56724-ம் எண் பயணிகள் ரயில் வழக்கம்போல புதன்கிழமை காலை 5.30க்கு கிளம்பவிருந்தது. வழக்கம்போல பயணிகளும் நூற்றுக்கணக்கில் வந்திருந்தனர். ஆனால், ராமேஸ்வரம் ரயில் நிலைய கவுன்டரில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க ஊழியர்கள் யாரும் இல்லை.

கொந்தளித்த பயணிகள் ரயில்வே உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பிறகு டிக்கெட் இல்லாமலே ரயில் ஏறினர்.

கடைசி நேரத்தில் விழித்துக்கொண்ட ரயில்வே நிர்வாகம், டிக்கெட் இல்லாத இந்தப் பயணிகளிடம் அபராதம் வசூலிக்காமல் டிக்கெட் தொகையை மட்டும் பயணத்தின்போதே வசூலித்துக்கொண்டது.

இது குறித்து விசாரித்தபோது பிபிசி தமிழிடம் பேசிய தென்னக ரயில்வேயின் மதுரை மக்கள் தொடர்பு அலுவலர் என்.வி.வீராசாமி, காலை 5 மணிக்கு டிக்கெட் கவுன்டர் திறக்கப்படவேண்டும் என்றும் ஆனால், அந்த நேரத்தில் பணியில் இருக்கவேண்டிய முதன்மை வணிக எழுத்தர் ரோஹித்குமார் மீனாவுக்கு அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு வலி வந்ததால் அவர் எவரிடமும் கூறிக்கொள்ளாமல் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சென்று அதிகாலை 3.40க்கு அங்கு உள்நோயாளியாக சேர்ந்ததாகவும் கூறினார்.

கடைசி நேரத்தில் மாற்று ஏற்பாடாக துணை நிலைய மேலாளர் சந்தோஷ்குமார் என்பவர் டிக்கெட் கொடுக்க காலை 5.20க்கு டிக்கெட் கவுன்டருக்கு வந்து, ஐந்து பேருக்கு டிக்கெட் கொடுத்துள்ளார் என்றார் அவர்.

"ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வேலை செய்கிறது. பயணிகள் அதில் டிக்கெட் எடுத்திருக்கலாம். ஆனால் எடுக்கவில்லை. எனினும் ரயிலிலேயே அவர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது.

டிக்கெட் எடுக்கவில்லை என்பதால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படவில்லை. சராசரியாக இந்த ராமேஸ்வரம்-பயணிகள் ரயிலுக்கு 270 டிக்கெட்டுகள் விற்பனையாகும்; சராசரியாக ரூ. 9,450 வசூலாகும். இந்த சம்பவத்தை அடுத்து, ரயிலிலேயே பயணிகள் 183 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. ரூ.4,545 வசூலானது. வழக்கமாக கவுன்டரில் இரண்டு பேர் பணியில் இருக்கவேண்டும். இந்தச் சம்பவத்தின்போது ஏன் இருவர் இல்லை என்பது குறித்து விசாரணை நடக்கிறது," என்று தெரிவித்தார் வீராசாமி.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செவிடன் காதில் ஊதிய சங்கு: தமிழக அரசை சாடும் சென்னைவாசிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :