திப்பு சுல்தானின் ராக்கெட் பற்றிய வரலாற்று சான்றுகள்

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி

திப்பு சுல்தான், மைசூர் ராக்கெட் பற்றி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமையாக பேசியது பாரதிய ஜனதா கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கர்நாடாக மாநில பாஜகவினர் ஆச்சரியத்தால் செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர்.

பட மூலாதாரம், GETTY IMAGES, THINKSTOCK

படக்குறிப்பு,

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் திப்பு சுல்தான்

ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலேயே குடியரசுத் தலைவர் பேசினார்.

18ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான், ராக்கெட்டை போரில் பயன்படுத்தினார். அதனை பிரிட்டன் அரசு முன்னெடுத்துச் சென்று மேலும் மேம்படுத்தியது என்பதே அவரது உரையின் சாராம்சம்.

திப்பு சுல்தானின் பிறந்த நாளை காங்கிரஸ் அரசு கொண்டாடுவதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையிலும், குடியரசுத் தலைவர் மாளிகையின் இணையதளத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரை சேர்க்கப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான் முகலாய ஆட்சியாளர் என்று பாரதிய ஜனதா கட்சி நம்புவதே சர்ச்சைகளின் அடிநாதம்.

தொழில்நுட்ப ஆர்வலர் திப்பு சுல்தான்

ராக்கெட் தொழில்நுட்பத்தில் திப்பு சுல்தான் மேற்கொண்ட முயற்சிகளின் ஆதாரங்கள் மற்றும் ராக்கெட் அபிவிருத்தி தொடர்பான வரலாற்று சான்றுகள் இப்போது வெளியாகவில்லை. அது 32 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டது.

விண்வெளி பொறியியலாளரும், விண்வெளி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ரோடம் நரசிம்மாவின் கல்விக் கட்டுரையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Thinkstock

படக்குறிப்பு,

திப்பு சுல்தான்

பிபிசியிடம் பேசிய பேராசிரியர் நரசிம்மா இவ்வாறு கூறினார்: "திப்பு சுல்தானால் பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டை, கிழக்கு இந்திய கம்பெனியின் ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை".

"அவர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கண்டு அச்சமடைந்தார்கள். கர்னல் ஆர்தர் வெலெஸ்லி ராக்கெட்டின் செயல்பாட்டைக் கண்டு அஞ்சி போரில் இருந்து பின்வாங்கினார் என்பதை ஆங்கிலேய அதிகாரிகளின் அச்சத்துக்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால் அதற்குபிறகு வாட்டர்லூ யுத்தத்தில் நெப்போலியனையே தோற்கடித்தவர் வெலெஸ்லி."

"தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர் திப்பு சுல்தான். தொழில் புரட்சியின்போது பிரிட்டனில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்ட முதல் அரசியல் ராணுவ தலைவர் திப்புசுல்தான் மட்டுமே. அவருடைய இந்த கண்ணோட்டம் மிகவும் பாரட்டத்தக்கது" என்று கூறுகிறார் பேராசிரியர் நரசிம்மா.

சரித்திரத்தின்படி, தொழில்துறைப் புரட்சி ஏற்படும்வரை ராக்கெட்டுகளின் பயன்பாடு அவ்வப்போது ஆங்காங்கே மட்டுமே காணப்பட்டது.

11 ஆம் நூற்றாண்டில் சீனா உருவாக்கியது "ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அம்புகள்". அவை தானியங்கியாகவும், வில்லின் சக்தியால் அழுத்தம் பெற்று செயல்படுமாறும் வடிவமைக்கப்பட்டவை.

பட மூலாதாரம், Prof Roddam Narasimha

படக்குறிப்பு,

1000 கெஜம் (914.400மீட்டர்) வரை தாக்கும் திறன் கொண்ட ராக்கெட்

சீனாவுடனான மங்கோலியர்களின் போருக்குப் பிறகு, 12ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு இந்த தொழில்நுட்பம் பரவியது. பிறகு 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் முகலாயர்கள் இந்த தொழில்நுட்பத்தை வேறுசில வடிவங்களில் பயன்படுத்தினார்கள்.

பேராசிரியர் நரசிம்மாவைப் பொறுத்தவரையில், "சீனா மற்றும் திப்பு சுல்தானின் ராக்கெட்டுகள் அடிப்படையிலேயே சில வேறுபாடுகளை கொண்டிருந்தன. திப்புவின் ராக்கெட்டுகள் மிகச் சிறந்த எஃகால் தயாரிக்கப்பட்டவை".

"ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய வழிமுறைகளை உருவாக்குவதற்கும், புத்தாக்கங்களுக்கும் திப்பு சுல்தான் ஊக்கமளித்தார். இந்தியாவில் இது ஒரு குடிசைத்தொழிலாகவே மாறியது என்று சொன்னால் அது மிகையாகாது".

"உலோகமான இரும்பு இந்தியாவில் மரபுரீதியான ஒரு வடிவத்தை எடுத்தது. எஃகு மற்றும் இளகுரக இரும்புகளுக்கான மையமாக தென்னிந்தியா திகழ்ந்தது."

"ராக்கெட்டில் நிறுவப்படும் உருளையில் வெடிமருந்து நிரப்புவதற்காக பல்வேறுவிதமான எஃகு பொருட்களை பயன்படுத்தினார் திப்பு. உருளைகளை நிரப்புவதற்காக, ஒரு நீண்ட வாள் போன்ற கத்தி பயன்படுத்தப்பட்டது. தோற்றத்தில் நவீன ஏவுகணையைப் போல இருந்த அதன் கீழ் பகுதியில் இருக்கும் இறக்கைகள் போன்ற அமைப்பு ராக்கெட்டுகளை உறுதியாக்குகின்றன".

இந்த ராக்கெட்டுகள் மிக்க திறன்மிக்கவை. அவை 1000 கெஜம் (914.400மீட்டர்) தொலைவுவரை தாக்கும் திறன் கொண்டவை. ஒற்றை சக்கர வாகனத்தில் இருந்தே திப்புவின் ராக்கெட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

பேராசிரியர் நரசிம்மா கூறுகிறார், "தற்போது தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் இடையில் உள்ள பொல்லிலூரில் இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போர் நடைபெற்றது. அந்தப் போரில்தான் ராக்கெட் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது, வெற்றிவாகை சூடியது.

காணொளிக் குறிப்பு,

ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய தூய்மை இந்தியா ரோபோக்கள்

ஆங்கிலேயர்களின் தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்தப் போர், கிழக்கு இந்தியா கம்பெனிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாக பதிவு செய்யப்பட்டுள்ளது."

திப்புவின் ராக்கெட்டுகளின் மாதிரிகளை ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திற்கு அனுப்பினார்கள். திப்பு சுல்தானின் ராக்கெட்டுகள் இங்கிலாந்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

150 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பிய இந்திய தொழில்நுட்பம்

பேராசிரியர் நரசிம்மாவின் கருத்துப்படி, "நவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டம் போன்ற ஒரு திட்டம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. தொழில்துறை புரட்சி அதற்கு சாதகமாக இருந்தது. துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் மேம்படுத்தப்பட்டன. நியூட்டனின் கோட்பாடுகளை பயன்படுத்தி திப்புவின் ராக்கெட் சிறந்த ஆயுதமாக மேம்படுத்தப்பட்டது".

பட மூலாதாரம், Prof Roddam Narasimha

"ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட அனைத்து ராக்கெட்டுகளின் அடிப்படையும் மைசூரை சேர்ந்தது என்பது வரலாற்று ரீதியான உண்மை".

"150 ஆண்டுகளுக்கு பிறகு, அதே தொழில்நுட்பம் இந்தியாவிற்கு, அதிலும் குறிப்பாக, திப்புவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பெங்களூருக்கு திரும்பி வந்தது நகைமுரண்!"

"தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ, பிரிட்டனைவிட பெரிய ராக்கெட்டுகளை உருவாக்குகிறது" என்று சொல்கிறார் பேராசிரியர் நரசிம்மா".

திப்புவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தலாம்

18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டின் மாதிரிகள் எதுவும் இந்தியாவில் இல்லை என்பதை பேராசிரியர் நரசிம்மா நம்பவில்லை.

காணொளிக் குறிப்பு,

விமானம்

"வூல்விச் மற்றும் பிரிட்டனில் உள்ள ராயல் பீரங்கி அருங்காட்சியகம் என வெளிநாட்டில் இரண்டு இடங்களில் மட்டுமே திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட்டுகள் உள்ளன.

நம் நாட்டில் நமது ஆட்சியாளர்கள் உருவாக்கிய ராக்கெட் தொழில்நுட்பத்தை நம்மால் மேம்படுத்த முடியும். திப்பு சுல்தானின் ராக்கெட்டை நம்மால் உருவாக்கமுடியும், அதனை உயர் தொழில்நுட்பம் கொண்டதாக உருமாற்றமுடியும்.

இதற்கான திட்டத்தை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினோம், ஆனால் இதில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பல்வேறு திட்டங்கள் பிரதானமாக இருந்ததால் இந்த திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

மீண்டும் இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன். திப்புவின் ராக்கெட் போன்ற விஷயங்கள் நம் நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும், இது இந்தியாவின் வரலாற்றின் ஒரு அங்கம்.

தொழில்நுட்பத்தில் நமது முனைப்பை உலகுக்கும், புதிய தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லும் உதாரணம். இந்தியாவின் வரலாற்று பெருமையை மீட்டெடுத்து இங்கு கொண்டு வரவேண்டும்".

திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு எதிராக பல சர்ச்சைகளும், கேள்விக்கணைகளும் எழுந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திப்பு சுல்தானின் ராக்கெட் பற்றி பெருமையாக பேசியதும் அந்த கேள்விக்கணைகள் கூர் மழுங்கி போய்விட்டன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :