சென்னையில் மீண்டும் கன மழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்

மழை
படக்குறிப்பு,

அதிமுகவின் தலைமையகம் முன்புள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீர்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னையில் வியாழக்கிழமை மாலை முதல் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அளிக்க மாநில வருவாய் நிர்வாகத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மழை இல்லாமலிருந்த நிலையில், வியாழக்கிழமையன்று மாலை 6 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது.

இதன் காரணமாக, நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்க ஆரம்பித்தது. வியாழக்கிழமையன்று காலையில் வெயில் அடித்ததால், சாதாரணமாக அலுவலகத்திற்குச் சென்றவர்கள், திடீரென மழை பெய்ய ஆரம்பித்ததால் திகைத்துப்போயினர்.

படக்குறிப்பு,

திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் தேங்கியுள்ள மழைநீர்

சாலைகளில் மழை நீர் தேங்க ஆரம்பித்ததால், நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பலர் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள பிரதான பாலமான கத்திபாரா பாலத்திற்கு கீழ் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். துரைசாமி சுரங்கப்பாதை, ஈக்காடுதாங்கலில் உள்ள அடையாறு தரைப்பாலமும் மூடப்பட்டது.

தமிழகத்தில் மழை தீவிரமடைந்திருப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், சேலையூர் போன்ற சில இடங்களில் தாழ்வாக அமைந்துள்ள சில வீடுகளில் தண்ணீர் உட்புகுந்தது. சோழிங்க நல்லூரில் உள்ள ஒரு மாணவர் விடுதி, எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரி மாணவிகள் விடுதி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரி விடுதிகளிலும் தண்ணீர் புகுந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்பட்டுச் செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. தாம்பரம் - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில்கள் மிகவும் மெதுவான வேகத்திலேயே இயங்கின.

இரவு பத்து முப்பது மணிவரை, சென்னையில் 119 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 97 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழையின் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மழைபெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :