மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை மடக்கிப் பிடித்த போலீஸ் பெற்றோர்

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பதின்வயதுப் பெண்ணின் பெற்றோர், காவல் துறை வழக்கு பதிவு செய்ய மறுத்தத்தைத் தொடர்ந்து, தங்கள் மகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை அவர்களாகவே பொது இடத்தில் வைத்துப் பிடித்துள்ளனர்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசில் ஒப்படைத்த பெற்றோர்

பட மூலாதாரம், Getty Images

அப்பெற்றோர் இருவருமே காவல் துறை அதிகாரிகள். தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் தெரிவிக்க சென்றபோது, காவல் துறை அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் "திரைப்பட பாணியில் கதை சொல்வதாகக்" கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட அந்த 19 வயது இளம்பெண், ஒரு பயிற்சி வகுப்பில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரைத் தாக்கிய இரு ஆண்கள் அவரை ஒரு பாலத்தின் அடியில் தூக்கிச் சென்றனர்.

சில மணி நேரங்கள் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அவர்கள், அவரைக் கட்டி வைத்துவிட்டு, அவர்களின் நண்பர்கள் இருவரை அழைத்துள்ளனர். அவர்களும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் இருவரை, அந்தப் பெற்றோரே பிடித்துச் சென்று போபாலில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின்னரே காவல் துறையினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு,

ஷேக்குகளுக்கு விடுமுறை மனைவிகளாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்

குறைந்தபட்சம் இரண்டு காவல் நிலையங்களில் முதலில் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புகார் பதிவு செய்ய மறுத்த இரண்டு காவல் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்கள் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டும் இரண்டு நபர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாகவும், தாங்கள் அவர்கள் இருவரையும் பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையிடம் அப்பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஹபீப்கஞ் ரயில் நிலையத்தில் இருந்து தாங்கள் வந்துகொண்டிருந்தபோது, குற்றம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மான்சரோவர் காம்ப்ளெக்ஸ் அருகே குற்றவாளிகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததை தங்கள் மகள் பார்த்ததாகவும், அவர்களைப் பிடித்துக் காவல் துறையிடம் தாங்கள் ஒப்படைத்ததாகவும் அப்பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த போராட்டம் ஒன்றில் பெண் ஒருவரை கைது செய்து இழுத்து செல்லும் காவல் துறையினர். (கோப்புப் படம்)

"இது ஒரு மோசமான அனுபவம். காவல் துறையில் பணியாற்றும் நானே எனது மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான புகாரைப் பதிவு செய்ய இவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தால், சாமானிய மனிதர்கள் படும் அவலங்களை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பரபரப்பான ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று அப்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :