''தொடர்ந்து கார்ட்டூன் வரைவேன்''- பிணையில் வந்த கார்டூனிஸ்ட் பாலா

கார்டூனிஸ்ட் பாலா படத்தின் காப்புரிமை Facebook
Image caption கார்டூனிஸ்ட் பாலா

அவதூறாக சித்திரம் வரைந்ததாக கார்டூனிஸ்ட் பாலாவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில், இன்று கார்டூனிஸ்ட் பாலா திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டர்.

லைன்ஸ் மீடியா என்ற பெயரில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் கேலிச்சித்திரம் வரைந்து வந்த பாலா, திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த எசக்கிமுத்துவின் குழந்தை நெருப்புடன் தரையில் கிடப்பது போலவும், தமிழக முதல்வர், நெல்லை காவல்துறை ஆணையார் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வேடிக்கை பார்ப்பதுபோல கேலிச்சித்திரம் வரைந்தார்.

இந்த சித்திரம் அவதூறு செய்வதுபோல இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடுத்த புகாரைத் தொடர்ந்து பாலா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

நீதிமன்றத்திற்கு அழைத்துவந்த சமயத்தில் ஊடகத்தினரிடம் பாலா பேசும்போது தொடர்ந்து கேலிச்சித்திரங்கள் வரையப்போவதாக கூறினார்.

''அரசாங்கத்தின் செயலாற்ற தன்மையை வெளிப்படுத்த நான் தொடர்ந்து கார்ட்டூன் வரைவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் சித்திரங்களை வரைவேன்'' என்றார்.

கார்டூனிஸ்ட் பாலாவின் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பலரும் சமூகவலைதளங்களில் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கருத்துச்சுதந்திரத்தை பறிக்கும் வேலை இது என்றும், பாலாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறி அவர் வரைந்த சித்திரத்தை பலரும் முகநூலில் பகிர்ந்துவருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்