கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோதி

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோதி

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி தினத்தந்தி இதழின் பவளவிழாவில் பங்கேற்றதோடு, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தும் நலம் விசாரித்தார்.

கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக திங்கட்கிழமை பிற்பகல் 12 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள மு. கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த நரேந்திர மோதியை, தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நரேந்திர மோதியுடன் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கோபாலபுரத்திற்கு வந்திருந்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்த நரேந்திர மோதி, அவரது கரங்களைப் பிடித்தபடி நலம் விசாரித்தார். அதற்குப் பிறகு, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் மோதி நலம் விசாரித்தார்.

கோபாலபுரம் இல்லத்திலிருந்து வெளியில் வந்த நரேந்திரமோதி, அங்கு கூடியிருந்த ஏராளமான பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, தில்லி செல்வதற்காகப் புறப்பட்டார்.

மோதி புறப்பட்டுச் சென்ற பிறகு, கீழே வந்த கருணாநிதி, கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இது அங்கிருந்த தொண்டர்களுக்கு உற்சாகமளித்தது.

முன்னதாக, தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் கலந்துகொண்ட நரேந்திர மோதி, "இன்று ஒவ்வொரு குடிமகனும் தனக்கு பல்வேறு வழிகளில் வந்துசேரும் செய்திகளை ஆராய்ந்து, உண்மைத்தன்மையை கண்டறிய முற்படுகிறார். ஆகவே, ஊடகங்கள் தங்கள் நம்பகத் தன்மையை நிரூபிக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

"ஊடக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாக இருந்தாலும் அவை ஒரு பொதுத் தேவையே நிறைவேற்றுகின்றன. ஆகவே, ஒரு தேர்வுசெய்யப்பட்ட அரசைப் போல, நீதித் துறையைப் போல அதற்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரத்தை பொதுமக்களின் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும். எழுதுவதற்கான சுதந்திரம் என்பது, உண்மையல்லாத தகவல்களை எழுதுவதற்கான சுதந்திரமில்லை" என்றும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் குறித்து ஊடகங்கள் கூடுதல் செய்திகளை வெளியிட வேண்டுமென்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நம்மால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் மோதி தெரிவித்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் பிராந்திய மொழி பத்திரிகைகளாப் பார்த்து அஞ்சியதாகவும் அதன் காரணமாகவே 1878ல் இந்திய பிராந்திய மொழி செய்தித்தாள் சட்டத்தை உருவாக்கியதாகவும் கூறியமோதி, அந்த காலகட்டத்தில் இருந்ததைப் போலவே, இப்போதும் பிராந்திய மொழிப் பத்திரிகைகள் முக்கியத்தவம் வாய்ந்தவையாக இருப்பதாகக் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :