ஒடிஷாவில் கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்று காப்பாற்றிய மருத்துவர்

  • பிரவீன் காசம்
  • பிபிசி தெலுங்கு

ஞாயிறன்று ஒடிஷாவின் சரிகட்டா என்ற கிராமத்தில், கர்ப்பிணி பெண்ணின் சிகிச்சைக்கு மூட நம்பிக்கை தடையாக இருந்தபோது, மருத்துவர் ஓம்கார் ஹோடா அவரை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆரம்ப சுகாதார மையம் வரை ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்று அப்பெண்ணை உயிர் பிழைக்க வைத்துள்ளார்.

பட மூலாதாரம், Omkar/Debi Maity

ஒரு தொலைதூர கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஓம்கார் ஹோட்டா தனது நற்செயலால் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டை பெற்று வருகிறார்.

உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னிடம் கர்ப்பிணி ஒருவர் ஆபத்தில் இருப்பதாகவும் அப்பெண்ணை காப்பாற்ற தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும் ஓம்கார் பிபிசி தெலுங்கு சேவையின் பிரவீன் காசமிடம் தெரிவித்தார்.

"எந்தவித பொது போக்குவரத்து வசதியும் இல்லாத ஒரு கிராமம், 12கிமீ தூரத்திற்கு பல ஓடங்களையும், கரடுமுரடான பல பாதைகளையும் கடந்துதான் அந்த கிராமத்தை அடைய முடியும்."

"மேலும் அந்த கிராமத்தில் எந்தவித ஆரம்ப சுகாதார வசதிகளும் இல்லாமையால் அப்பெண்ணின் குடிசையில்தான் அவருக்கு பிரசவம் பார்க்க நேர்ந்தது; இருப்பினும், அதிகப்படியான ரத்தப் போக்கால் அவர் ஆபத்தான நிலைக்கு செல்லவே அவரை அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது."

பட மூலாதாரம், Omkar/Debi Maity

"ஆனால் அந்த கிராமத்தில் கர்ப்பிணி பெண்களை தொடக்கூடாது என்ற ஒரு கடுமையான கட்டுப்பாடு நிலவுவதால் அப்பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல எவரும் உதவிக்கு முன்வரவில்லை."

"அந்த பெண் ’கொண்டாரெட்டி’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர், அந்த சமூகத்தில் கர்ப்பிணி பெண்களை தொடக் கூடாது என்னும் பழக்கம் நிலவுகிறது."

"கடைசியாக நாங்கள் ஒருவருக்கு பணம் கொடுத்து எங்களுடன் உதவிக்கு வர கோரினோம்." என்கிறார் மருத்துவர் ஓம்கார்.

"நான் மருத்துவ உதவிகளை செய்ய தொடங்கினேன் அவருக்கு க்ளூகோஸ் ஏற்றினேன் பின் உயர் அதிகாரிகளிடம் அதைபற்றி தெரியபடுத்தினேன். அவரின் நிலை தற்போது சீராகி ஆபத்து நிலையை கடந்து விட்டார்" என்று மேலும் தெரிவித்தார் மருத்துவர் ஓம்கார்.

அப்பெண்ணிற்கு இது மூன்றாவது பிரசவம்; மேலும், இதற்கு முன்னதாக பிரசவத்தின் போது தனது ஒரு குழந்தையை அவர் இழந்துள்ளார் என்கிறார் அந்த மருத்துவர்.

பட மூலாதாரம், Omkar/Debi Maity

அது மாவோயிஸ்ட் நிறைந்த பகுதி, அங்கு அவசர ஊர்திகளும் இல்லை செவிலியர்களும் இல்லை. இம்மாதிரி நோயாளிகள் ஆபத்தில் விழும்போது, நான் அவர்களை தூக்கிச் செல்வது புதிதல்ல. இம்மாதிரியான சமயங்களில் நான் மருத்துவராக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருக்க வேண்டும் என நினைத்து கொள்வேன்.

உள்ளூர் பத்திரிக்கையாளர் டேபி மைட்டி பிபியிடம் பேசியபோது, தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு மருத்துவரிடம் சென்றதாகவும், அங்கிருந்து இருவரும் ஆபத்தில் இருக்கும் கர்ப்பிணியை பார்க்க சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் சுகாதார மையம் வரை ஸ்ட்ரெச்சரை தூக்கி செல்ல தானும் உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அந்த மருத்துவரின் செயல் குறித்து டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நற்செயலால் அந்த மருத்துவர் ஒடிஷாவை பெருமை படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :