காவல்துறை ஆளும் மாநிலமாகிறதா தமிழகம்?

  • முரளீதரன் காசி விஸ்வநாதன்
  • செய்தியாளர்
ஜெயராமன் - அறப்போர் இயக்கம்
படக்குறிப்பு,

ஜெயராமன் - அறப்போர் இயக்கம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலர் காவல்துறையால் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் அறப்போர் இயக்கத்தின் பொருளாளராக இருப்பவர், நக்கீரன் புகழேந்தி. கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று, அதிகாலையில் அவரது வீட்டிற்குச் சென்று அவரைக் கைதுசெய்த காவல்துறை புழல் சிறையில் அடைத்தது.

சென்னையில் உள்ள ராமாபுரம் பகுதியில் அக்டோபர் 28ஆம் தேதியன்று, அந்தப் பகுதி மக்களின் குறைதீர்ப்புக் கூட்டம் ஒன்றை அறப்போர் இயக்கம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையை முன்வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது.

இதற்குப் பிறகு நீதிமன்றத்தை அணுகிய அவர், பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த நான்காம் தேதியன்று அவரை புழல் சிறையிலிருந்து அழைத்துவந்த அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்டவர்கள் நக்கீரனைக் கைதுசெய்த ராயலா நகர் காவல்நிலையத்திற்குச் சென்று நக்கீரனின் மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை பெறுவதற்காகச் சென்றனர்.

"மொபைல், பர்ஸ் ஆகிவற்றை வாங்கிவிட்டு, அங்கிருந்த ஆய்வாளரிடம் ஏன் எங்கள் மீது பொய் வழக்குத் தொடர்ந்தீர்கள்? நீங்களும்தானே சம்பவம் நடந்த இடத்தில் இருந்தீர்கள்? என்று கேட்டேன். இதனால், கோபமடைந்த ஆய்வாளர் என்னையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கிடையில் துணை ஆணையர் தலையிட்டு என்னைப் போகச் செய்தார்" என்கிறார் அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்.

படக்குறிப்பு,

வழக்கறிஞர் செம்மணி

ராமாபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் பெஞ்சமினை அழைத்தும், அவர் வராத நிலையில் அவர் மீது அறப்போர் இயக்கத்தினர் விமர்சனங்களை வைத்ததால் தங்கள் மீது பொய் வழக்குப் போடப்பட்டு, கைதுசெய்யப்பட்டதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். அந்த இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் மீது கொலை மிரட்டல், சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாறன்குளத்தில் வசித்துவந்த செம்மணி என்ற வழக்கறிஞர் , வீட்டிலிருந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

ராதாபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவர், அங்கு வைத்து கட்டிப்போடப்பட்டு, வாயில் செருப்பை கவ்வக்கொடுத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். பல மணி நேரம் இப்படித் தாக்கப்பட்ட அவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சியால் நீதிமன்றத்தின் பொறுப்பில் அவர் விடுவிக்கப்பட்டார். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தொடர்பான வழக்குகளை இவர் கவனித்துவந்தார்.

கடந்த மூன்றாம் தேதியன்று, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவுசெய்வதாக அவர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர் யார் மீது அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தாரோ, அந்த காவலர்களே தன்னைத் தாக்கியதாக செம்மணி தெரிவிக்கிறார்.

வழக்கறிஞர் செம்மணி மதுரை உயர்நீதிமன்றத்தை நாடவிருக்கிறார். இது தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்த வழக்கறிஞர்கள் தயாராகிவருகின்றனர்.

நவம்பர் ஐந்தாம் தேதி பிற்பகல் ஒரு மணியளவில் சென்னைக்கு அருகில் உள்ள கோவூரில் வசித்துவந்த பத்திரிகையாளும் கோலிச்சித்திர ஓவியருமான பாலாவை திருநெல்வேலி காவல்துறை கைதுசெய்தது.

திருநெல்வேலியில் கந்துவந்து கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குள்ளித்த சம்பவம் குறித்து கேலிச்சித்திரம் வரைந்திருந்தார். அந்த கோலிச் சித்திரத்தில் முதல்வர், காவல்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிர்வாணமான நிலையில், இருப்பதைப் போல வரையப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் சென்னைக்கு வந்த காவல்துறை, அவரைக் கைதுசெய்து திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றது.

வீட்டிற்கு வந்த காவல்துறையினர் காவல்துறையினரின் சீருடையில் இல்லையென்றும் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்ததாகவும் பாலாவின் மனைவி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

படக்குறிப்பு,

நந்தினியின் தந்தை ஆனந்தன், நந்தினி

ஆனால், இந்த கைது நடவடிக்கை ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் அமைப்புகள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்த நிலையில், திங்கட்கிழமையன்று பாலா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

"நான் தொடர்ந்து இதுபோன்ற கார்ட்டூன்களை வரைவேன். தற்போதைய எடப்பாடி அரசு மத்திய அரசிடம் ஆட்சியை அடகுவைத்துவிட்டது" என்று குற்றம்சாட்டினார் பாலா.

இந்த சம்பவங்கள் தவிர, திங்கட்கிழமையன்று சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோதியிடம், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகக் சொன்ன வாக்குறுதி என்னவாயிற்று என கேள்வியெழுப்பப்போவதாக ஃபேஸ்புக்கில் பதிவுசெய்திருந்த மதுரையைச் சேர்ந்த நந்தினியையும் அவரது தந்தை ஆனந்தனையும் ஞாயிற்றுக்கிழமையே கைதுசெய்து, தல்லாகுளம் காவல்நிலையத்திலும் புதூர் காவல்நிலையத்திலும் சிறைவைத்தது காவல்துறை. பிரதமர் புறப்பட்டுச் சென்ற பிறகு இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

படக்குறிப்பு,

நக்கீரன் புகழேந்தி

இதற்கிடையில், நதி நீர் இணைப்பு சரியான முயற்சியல்ல என்பது குறித்து நதிநீர் இணைப்புத் திட்டம்: ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ள, மீத்தேன் திட்ட எதிர்ப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் இந்திய இறையாண்மைக்கு எதிராக புத்தகம் வெளியிட்டதாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 (பி) பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது மற்றும் வழக்கு நடவடிக்கைகள் மாநில அரசின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஊழலுக்கு எதிராகவும் அரசின் அடக்குமுறைத் திட்டங்களுக்கு எதிராகவும் போராடிவரும் சமூக ஆர்வலர்களை ஒடுக்கும் நோக்கத்திலேயே தமிழக காவல்துறை இம்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.

படக்குறிப்பு,

ஆனந்தனை தடுப்புக் காவலுக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை.

"தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளால், தமிழகத்தில் ஜனநாயகத்திற்கான வெளி குறைந்தவருகிறது. தமிழக அரசின் அரசியல் சாஸனத்திற்கு விரோதமான, மனித உரிமைகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்து சாதாரண மக்கள் குரல் எழுப்ப வேண்டும்" என அந்த அமைப்பின் மாநிலச் செயலர் ஆர். முரளி தெரிவித்திருக்கிறார்.

மக்கள் ஆங்காங்கே தாங்களாகப் போராட ஆரம்பித்துவிட்டார்கள். மக்களிடம் கோபம் கனன்று கொண்டிருக்கிறது என்கிறார் சட்டக் கல்லூரி மாணவி நந்தினியின் தந்தையான ஆனந்தன்.

"பள்ளிக்கூட குழந்தைகள்கூட தற்போது போராடுகிறார்கள். காவல்துறை அம்மாதிரி அத்துமீறல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது" என பிபிசியிடம் கூறினார் ஆனந்தன்.

அறப்போர் இயக்கத்தைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிரான தங்களது செயல்பாட்டின் காரணமாகவே தாங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக கருதுகிறது. இந்த இயக்கம், தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா, பான்பராக் போன்றவை விற்கப்படுவதில் காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் பங்கு குறித்து கேள்வியெழுப்பிவருகிறது.

"எங்களுடைய 'கொள்ளையனே வெளியேறு' போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதனால், நாங்கள் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அமைச்சர் பெஞ்சமினின் தூண்டுதலில் எங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. நக்கீரன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த அரசின் போதாமை குறித்து கேள்வியெழுப்புபவர்களை கைதுகளின் மூலம் மௌனமாக்க விரும்புகிறார்கள். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறார்கள்" என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

கார்டூனிஸ்ட் பாலா

மக்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என இந்த அமைப்பு வெளியிட்ட ஒரு காணொளிக் காட்சி வன்முறையைத் தூண்டுவதாக இந்த அமைப்பின் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது காவல்துறை.

கடந்த சில நாட்களாக எழுதப்படாத எமர்ஜென்சியைக் கொண்டுவரும் முயற்சி தமிழகத்தில் நடந்துவருகிறது என்கிறார் மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம்.

"விமர்சனத்தை அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே வேலைசெய்யும் அரசுக்கு இதற்கெல்லாம் நேரமிருக்காது. எல்லாரையும் பயமுறுத்த நினைக்கிறார்கள். ஆனால், அது முடியாது. தொடர்ச்சியாக இப்படியாக செயல்படமுடியாது." என்கிறார் சுதா ராமலிங்கம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :