பண மதிப்பிழப்பு: 'ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு'

  • க. ஜோதி சிவஞானம்
  • பொருளாதார பேராசிரியர்

இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, வரும் நவம்பர் 8-ம் தேதி மூன்றாண்டாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் இரண்டாம் பகுதி இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அதன் லாப - நஷ்டக் கணக்குகளை சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது மிக அவசியமானதாகும்.

இது கடந்த எழுபதாண்டு இந்திய பொருளாதார வரலாற்றில் எடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய அரசியல் பொருளாதார முடிவாகும். இதன் விளைவுகள் அரசியல், சமூக பொருளாதார தளங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியள்ளன.

தொடக்கத்தில் இது கறுப்பு பணத்திற்கு எதிரான ஒரு "துல்லியமான தாக்குதல்" (Surgical Strike) என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்துத்தரப்பு மக்களையும் துறைகளையும் தாக்கியுள்ள, மேலும் தாக்கிவிருக்கின்ற ஒரு "தரைவிரிப்பு குண்டு வீச்சு" (Carpet Bombing) என்றுதான் வர்ணிக்கவேண்டியுள்ளது.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு அரசால் சொல்லப்படும் காரணங்கள், நிலையானதாக இல்லை. தொடர்ந்து மாறிவந்துள்ளது.

நவம்பர் 2016ல் பிரதமர் உரையிலும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புகளிலும் சொல்லப்பட்ட நோக்கங்கள் இரண்டு மட்டுமே:

1. கறுப்பு பணம் ஒழிப்பு,

2. கள்ளப் பண ஒழிப்பு. இதற்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும் ஒரு நோக்கமாகச் சொல்லப்பட்டது.

அதற்குப் பின்னர் இந்த நடவடிக்கை குறுகிய காலத்தில் துன்பத்தை கொடுத்தாலும் நீண்ட காலத்தில் பலன் கொடுக்கும் என்று சொல்லப்பட்டது.

இன்று ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்று வரை மத்திய அரசோ ரிசர்வ் வங்கியோ அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு நோக்கங்களில் எந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

ஆனால், பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் அனைத்தும், அதாவது 15.44 லட்சம் கோடியும் கிட்டத்தட்ட வங்கிக்கு வந்துவிட்டது. இதன் பொருள் எந்த கருப்பு பணமும் பிடிக்கப்படவில்லை என்பதுதான்!

ஆனால், வங்கிக்கு வந்த பணம் அனைத்தும் வெள்ளையானது அல்ல என்று ஒரு வாதம் வைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது தெரியவில்லை.

சொத்துக்களாகவும் வெளிநாட்டு வங்கிகளில் அந்நிய செலவாணிகளாகவும் இருக்கும் கறுப்பு பணத்தை எடுக்க அரசு முயற்சிக்காமல் இந்தியாவில் ரொக்கமாக உள்ள சிறு அளவிலான கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதாக சொல்லி இவ்வளவு பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் மற்றும் கடன் அட்டை மூலமான பரிவர்த்தனை இந்த நடவடிக்கை மூலமாக உயர்ந்துள்ளது ஒரு நன்மையாகும். ஆனால், இந்த நடவடிக்கையின் அடிப்படை நோக்கம் அதுவல்ல.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாம் அடைந்த பலன்கள் எதுவும் பெரிய அளவில் இல்லாத நிலையில் பாதிப்புகள் கடுமையாக உள்ளன.

ஓட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்நடவடிக்கை காரணமாக 7.9 விகிதத்தில் இருந்து (Q2 2016) 5.7 விகிதத்திற்கு (Q2 2017) குறைந்துள்ளது. இதையே பழையமுறையில் கணக்கிட்டால் Q2 2017ன் வளர்ச்சி விகிதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே.

பட மூலாதாரம், Getty Images

இது ராஜி கிருஷ்ணா என்ற பொருளியல் அறிஞர் குறிப்பிட்ட "இந்து வளர்ச்சி விகிதத்திற்கு" அதாவது முப்பது, நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

2007-2008 உலக பொருளாதார சரிவுக்குப் பின் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த வண்ணம் இருந்தது. ஆனால், தற்போது உலக பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரும்போது இந்திய பொருளாதாரம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

தொழில் துறை, விவசாயத் துறை, ஏற்றுமதி என்று அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முறைசாரா துறைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறுகிய காலத்தில் சிறு குறு வர்த்தகர்களும் உற்பத்தி நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விவசாயம் போதுமான கடன்பெறும் வசதி இல்லாமல் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக எல்ல மாநில அரசுகளும் வரி வருவாயை இழந்து வருகின்றன. அரசு செய்யவேண்டிய பல நடவடிக்ககைளில் தடை ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணப் பட்டுவாடா செய்யமுடியாமல் பல மாநில அரசுகள் தவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் தவிப்பதை செய்தித்தாள்கள் எழுதித் தீர்த்துவிட்டன. வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை மக்கள் குறைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகள்வரை இந்திய பொருளாதாரம் நீண்ட கால மந்த நிலையில் இருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கயைின் அடிப்படை நோக்கமான கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு ஆகியவற்றில் எந்த வெற்றியும் அடையாத சூழலில் இந்த பாதிப்புகள் நமக்கு தேவைதானா என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆனால் இந்த நடவடிக்கையிலிருந்து இனிமேலாவது நாம் சில படிப்பினைகளைப்பெற வேண்டும். அதில் முக்கியமான ஒன்று பொருளாதார அறிஞர்களின் ஆலோசனையின்றி எந்த ஒரு பெரிய பொருளாதார கொள்கை முடிவுகளையும் அரசு எடுக்கக் கூடாது.

குறிப்பாக, பொருளாதார பிரச்சனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கலாகாது.

(கட்டுரையாளர் - க. ஜோதி சிவஞானம், துறைத் தலைவர், பொருளாதாரத் துறை, சென்னை பல்கலைக்கழகம்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :