அரசியல் களத்தில் கமல்ஹாசன்: சாதிப்பாரா?

கமல்ஹாசன் படத்தின் காப்புரிமை Getty Images

சுமார் இருபது - இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் ஒரு முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், நான் அரசியலுக்கு வந்தால் தவறு செய்பவர்களை எந்திரத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்; அதனால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று பதிலளித்தார்.

2017 நவம்பர் 7ஆம் தேதியன்று அவரது பிறந்த நாளில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, உங்களுடன் இருப்பவர்கள் தவறுசெய்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, என் படங்களில் தவறு செய்தவர்களை நான் என்ன செய்தேனோ அதைவிட கடுமையாக செய்ய வேண்டியிருக்கும் என்று பதிலளித்தார். ஆனால், ஒரே வித்தியாசம் அவர் தேர்தல் அரசியலில் அவர் நேரடியாக இறங்க முடிவெடுத்துவிட்டார் என்பதுதான்.

தமிழக திரைத் துறையிலிருந்து தமிழக அரசியலுக்கு வந்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் சினிமாத் துறையில் செயல்பட்டவர்கள் என்றாலும் அவர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தால் அரசியல் களத்தில் சாதித்தவர்கள் அல்ல. ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு அவர்களது சினிமா பிரபலம் மிக முக்கியமான முதலீடாக இருந்தது.

ஆனால், இவர்களுக்குக் கிடைத்த வெற்றி, இவர்களைப் பின்பற்றி சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலருக்குக் கிடைக்கவில்லை. எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகியோர் அரசியலில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில், ராமராஜன், எஸ்.வி. சேகர், எஸ்.எஸ். சந்திரன், நெப்போலியன் உள்ளிட்ட அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலரும் தமிழக கட்சிகள் எதிலாவது ஒன்றில் இணைந்தே தேர்தலில் போட்டியிட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், தொன்னூறுகளின் துவக்கத்திலிருந்து தமிழின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களால் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வரான ஜெ. ஜெயலலிதாவை சில சந்தர்ப்பங்களில் அவர் கடுமையாக விமர்சித்ததே இந்த யூகங்களுக்கான அடிப்படை.

1996ல் வெளிப்படையாக தி.மு.க. - த.மா.காங்கிரஸ் கூட்டணியை அவர் ஆதரித்தார். 2004ல் வெளிப்படையாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பங்களைத் தவிர, அவர் அரசியல் குறித்து வெளிப்படையாக பேசிய தருணங்கள் மிகவும் குறைவு.

இருந்தபோதும் கடந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து அவரது அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. 2016ஆம் ஆண்டின் இறுதியில் அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்தபோது மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியெழுந்தது. ரசிகர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, போர் வரும்போது களத்தில் இறங்க வேண்டும் என்று மட்டும் சொன்னார்.

இப்போதுவரை, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வந்தால் அவரது அரசியல் எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விகள் பதில் கிடைக்காதவையாகவே உள்ளன.

பிக் பாஸ் கமல்ஹாசன்

ஆனால், கமல்ஹாசனைப் பொறுத்தவரை சமீபகாலமாக வெளிப்படையாக தனது அரசியல் ஆசைகள் குறித்து பேசியதில்லை. அவரது விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசிலிருந்து நெருக்கடி வந்தபோதும் நாட்டைவிட்டு வெளியேறப்போவதாகச் சொன்னாரே தவிர, அரசியல் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் கமல்ஹாசனை நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கொண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

படத்தின் காப்புரிமை STRDEL/Getty Images

அந்த நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பிலேயே, தமிழக அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் குற்றம்சாட்டினார். வெளிப்படையாக அவர், அரசியல் பேச ஆரம்பித்தது அப்போதுதான். தொடர்ந்த செய்தியாளர் சந்திப்புகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் மெல்லமெல்ல அரசியல் பேச ஆரம்பித்தார். மாநில அரசை விமர்சித்தார். பா.ஜ.கவின் தேசியச் செயலர் கமலுக்கு எதிராக கருத்துச் சொன்னபோது, "எலும்பு நிபுணர்" என்ற கடுமையான கேலியுடன் அதனை எதிர்கொண்டார்.

கமல்ஹாசனுக்கு அரசியல் குறித்த அபிலாஷைகள் இருப்பது தெரிய ஆரம்பித்தவுடன், அ.தி.மு.கவும் பாரதீய ஜனதாக் கட்சியும்தான் அதனைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தன. மாநில அரசு குறித்து கமல் விமர்சனங்களை செய்துவந்ததால் மாநில அமைச்சர்கள் அதற்கு எதிர்வினையாற்றியதுகூட புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

ஆனால், மத்திய அரசு குறித்து கமல் பெரிதாக எந்த விமர்சனங்களையும் வைக்காத நிலையில், பா.ஜ.க. தொடர்ந்து கமல்ஹாசன் குறித்த விமர்சனங்களை முன்வைத்துவருகிறது.

தான் அரசியலுக்கு வருவேனா என்ற கேள்வி இனியும் அர்த்தமற்றது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்ட கமல்ஹாசன், அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு முன்பாக #மையம்விசில் என்ற பெயரில் டிஜிட்டல் களம் ஒன்றை உருவாக்கி பலரது கருத்துக்களையும் பெறப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

அரசியல் வெற்றிடத்தை கமல் நிரப்புவாரா?

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, மற்றொரு வலிமையான தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உடல்நலக் குறைவால் செயல்பட முடியாமல் இருப்பது ஆகியவை தமிழக அரசியல் களத்தில் ஒரு சக்திவாய்ந்த தலைவருக்கான வெற்றிடம் உருவாக்கியிருப்பதான ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது. உண்மையில் அப்படி ஒரு வெற்றிடம் இருந்தால் அந்த இடத்தை கமல்ஹாசனால் நிரப்ப முடியுமா என்பதுதான் இப்போது அவர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.

இந்த சவாலை தன்னுடைய ரசிகர்கள் சக்தியின் மூலமும் சமூக வலைதளங்களில் தனக்கு இருக்கும் ஆதரவின் மூலமும் எதிர்கொள்ள நினைக்கிறார் கமல்.

படத்தின் காப்புரிமை Getty Images

கமல்ஹாசனின் ரசிகர் மன்றங்கள் 1979ல் துவங்கப்பட்டன. 1982ல் ரசிகர்களுக்கென ஒரு மாநாட்டையும் சென்னையில் நடத்தினார் கமல். அப்போதும்கூட, இது அரசியலுக்கான கூட்டமல்ல, மக்களுக்கு சேவைசெய்யவே இந்தக் கூட்டம் என்றுதான் கமல் பேசினார். இருந்தபோதும், அவரது ரசிகர் மன்றங்கள் துவக்கத்தில் வழக்கமான ரசிகர் மன்றங்களைப் போலவே அவரது படம் ரிலீஸாகும்போது தோரணங்களைக் கட்டுவது, பிறந்த நாள் கொண்டாடுவது என்றே செயல்பட்டுவந்தன.

இந்த நிலையில் 1989ல் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றுவதாக கமல் அறிவித்தார். பிற நடிகர்களின் ரசிகர் மன்றங்களுக்கு தலைவர் என ரசிகர்களில் ஒருவரே இருக்கும் நிலையில், கமல் நற்பணி இயக்கத்தின் தலைவராக கமலே இருந்துவந்தார்.

தற்போது கமலுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நற்பணி மன்றங்கள் உண்டு. ஒவ்வொரு மன்றமும் 25 உறுப்பினர்களைக் கொண்டவை. இந்த நற்பணி இயக்க நிர்வாகிகளை கமல் தொடர்ச்சியாக சந்தித்துப் பேசிவந்தார்.

ஆனால், இந்த மன்றங்கள் மட்டும் தமிழக அரசியல் களத்தில் அவருக்கு வெற்றித் தேடித்தர போதுமானவையா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. இந்த மன்றங்களில் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் 40களை நெருங்கியவர்கள். அவர்களில் சிலர் ஏற்கனவே வேறு ஒரு கட்சியில் செயல்பட்டுவரக்கூடும். கமல் தனது அரசியல் கட்சியைத் துவங்கும்போது, தான் ஏற்கனவே உள்ள கட்சியில் வகித்துவரும் பொறுப்புகளை விட்டு அவர்கள் வெளியேறிவருவார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

போட்டியை சமாளிப்பாரா?

தமிழக அரசியல் களத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தேர்தல் பூத் மட்டத்தில் தொண்டர்களைக் கொண்டவை. தேர்தலின்போது, ஒவ்வொரு பூத்திலும் பல ஆட்களை கண்காணிப்பிற்காகவும் தேர்தல் பணிகளுக்காவும் நிறுத்தும் சக்தி கொண்டவை. தமிழகம் போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் வேறு எந்தக் கட்சிக்கும் இவ்வளவு பெரிய தொண்டர் படையும் கட்சி அமைப்பும் வலுவாகக் கிடையாது.

தே.மு.தி.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை சிறிது சிறிதாக அந்தத் திசையில் தங்களை வலுப்படுத்தப் போராடிவருகின்றன. இந்த நிலையில், புதிதாக களத்தில் நுழையும் கமல்ஹாசன் இந்த மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும் அவரது அரசியல் எத்தகையது என்ற கேள்விக்கு கமல் இன்னும் தெளிவான பதிலைச் சொல்லவில்லை. அவரது பிறந்த நாளன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், "நான் மையத்திற்கு இடதுபுறமாகவும் இருக்க மாட்டேன்; வலதுபுறத்திலும் இருக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரமடைந்த இருபதே ஆண்டுகளில் தேசியக் கட்சியான காங்கிரசைத் தூக்கியெறிந்து, திராவிடக் கட்சிகளை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்திவரும் தமிழகத்தில், திராவிடக் கொள்கைகளுக்கு மாற்றாக வேறு ஒரு சித்தாந்தத்தை முன்வைத்து கமல் வெற்றிபெற முடியுமா என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி.

நாத்திகம், பெரியார் போன்ற அடையாளங்களைத் தாண்டி, சமூக நீதி, மொழி உரிமை, மாநில சுயாட்சி போன்ற திராவிட சித்தாந்தத்தின் முக்கியக் கூறுகளை, தற்போதைய திராவிடக் கட்சிகளைவிடத் தீவிரமாக கமல்ஹாசன் கையில் எடுப்பாரா என்பதும் தெளிவாகவில்லை.

கமலுக்கு சாதகமான அம்சங்கள்

சவால்கள் ஒருபுறமிருக்க, கமலுக்கு சாதகமான அம்சம் முன்பே குறிப்பிட்ட அரசியல் வெற்றிடம். தவிர, பட்டிதொட்டியெல்லாம் அறியப்பட்ட ஒரு முகம் என்பது தேர்தலின்போது அவருக்கு உதவக்கூடும்.

கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல கிசுகிசுக்கள் உண்டு. ஆனால், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது போன்ற விவகாரங்களில் கமலுக்கு வேறுவிதமான இமேஜ் இருந்தது. 1990களின் பிற்பகுதியில் சிதம்பரம் அறிமுகப்படுத்திய தானாக முன்வந்து கறுப்புப் பணத்தை வெளியிடும் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கமல் இடம்பெற்றார்.

தமிழ் சினிமாவில் ஒழுங்காக வருமான வரி கட்டும் ஒரு சிலரில் கமல்ஹாசனும் ஒருவர் என்று அறியப்படுகிறார். வருமான வரித்துறையின் விளம்பரங்களிலும் கமல் இடம்பெற்றார். ரத்த தானம், உடல் தானம் குறித்தும் கமல் தொடர்ந்து பேசியும் விளம்பரம் செய்தும் வந்தார். அவரது இத்தகைய செயல்பாடுகள், அவரை சமூக நலன் மீது ஆர்வம்கொண்ட ஒருவராகவே காண்பித்துவருகின்றன. இது மத்திய தர வர்க்கத்தின் ஆதரவை அவருக்கு சற்று ஈட்டித்தரலாம்.

படத்தின் காப்புரிமை HRAJABJP

சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அரசியல் களத்தில் பிரதானமாக உள்ள கட்சிகளில் இடதுசாரிகள் போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர, வேறு யாரும் கூறாத இந்த விமர்சனத்தை கமல் முன்வைத்திருப்பதை முற்போக்காளர்கள் வரவேற்கின்றனர். ஆனால், மத்திய தர வர்க்கத்தின் ஒரு பிரிவினர் இதில் அதிருப்தியடையலாம் என்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊழல் எதிர்ப்பு என்ற ஒரு காரணி மட்டுமே வெற்றிதேடித் தந்துவிடாது என்பது இதற்கு முன்பாக பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சக்திவாய்ந்த திராவிடக் கட்சிகளை தேர்தல் களத்தில் எதிர்கொள்ள நினைக்கும் கமல், தன்னுடைய அரசியல் என்ன என்பதை தெளிவாக முன்வைப்பதே, அவரது அரசியல் பயணத்தின் முதல் படியாக இருக்கும்.

தனது ட்விட்டர் கருத்துகளின் மூலமும் ஊடக பேட்டிகளின் மூலமும் கமல் உருவாக்கியிருக்கும் எதிர்பார்ப்பு, வலிமையான கட்சி அமைப்பாக மாறுமா என்ற கேள்விக்கு பதில், தற்போது முழுக்க முழுக்க கமல்ஹாசனிடமே இருக்கிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ கமல்ஹாசனின் கட்சி போட்டியிட்டால் பெரும் வெற்றி கிடைக்காமல் போகலாம். ஆனால், குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தையாவது அவர் வென்றெடுக்க வேண்டும். தொடர் பயணம் அப்போதுதான் சாத்தியமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்