டெல்லி மக்களை மிரட்டும் காற்று மாசு: 30 மடங்கு அதிகரிப்பு

இன்று, செவ்வாய்க்கிழமை, காலை உறக்கத்திலிருந்து கண் விழித்துப் பார்த்த பல டெல்லிவாசிகளுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. சாம்பல் நிறத்தில் சூழலை மாற்றியிருந்த மாசு காற்றில் படர்ந்திருந்ததே அதன் காரணம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செவ்வாய் காலை டெல்லியை மாசு நிறைந்த பனிப்புகை சூழ்ந்திருந்தது

டெல்லியின் சில பகுதிகளில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிகமான காற்று மாசுபாடு நிலவியதால், எதிரில் வரும் மனிதர்களையும் வாகனங்களையும் கூடத் தெளிவாகப் பார்க்க முடியாமல் போனது.

'சுகாதார ரீதியான அவசர நிலை' நிலவுவதாகக் கூறியுள்ள இந்திய மருத்துவக் கழகம், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளது.

மாசுப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் வகையிலான புகைப்படங்களை டெல்லி மக்கள் சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

பி.எம் 2.5 (P.M 2.5) என்று அழைக்கப்படும் காற்றில் கலந்திருக்கும், நுரையீரலுக்குள் செல்லக்கூடிய அளவுக்கு மிக மிகச் சிறியதாக இருக்கும் நுண்துகள்களின் அளவு டெல்லியின் சில இடங்களில் ஒரு சதுர மீட்டருக்கு 700 மைக்ரோகிராம் வரை உள்ளதாக 'சிஸ்டம் ஆஃப் ஏர் குவாலிட்டி வெதர் ஃபோர்காஸ்டிங் அண்ட் ரிசர்ச்' எனும் ஆய்வு நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 19 அன்று டெல்லியில் நடைபெறவுள்ள , பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்க வாய்ப்புள்ள மாரத்தான் போட்டியையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ளது.

தங்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதை பலரும் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

டெல்லியில் இருக்கும் பள்ளிகளை சில நாட்களுக்கு மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், மாநில கல்வி அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்கள் விளை நிலங்களைச் சுத்தப்படுத்தும் நோக்கில், டெல்லிக்கு அண்மையில் அமைந்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சுள்ளிகளையும், கூளங்களையும் எரிப்பதால் குளிர் காலங்களில் டெல்லியின் காற்று மாசுபாடு அளவு அதிகரிக்கும்.

பல ஆண்டுகளாக டெல்லியின் மாசுபாடு அளவு அபாயகரமான அளவில் அதிகரித்து வந்தாலும், இந்தப் நடைமுறையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரிதாக ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை MaanviNarcisa
Image caption டெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் ட்விட்டர் பயனாளி மான்வி நார்சிகா எடுத்த படம்

குறைவான காற்றின் வேகம், கட்டுமானத் தலங்களில் இருந்து வெளியேறும் மாசு, குப்பைகள் எரிக்கப்படுதல், திருவிழாக் காலங்களில் வெடிக்கப்படும் பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை ஆகியவையும் டெல்லியின் காற்று மாசு அதிகரிக்கக் காரணமாக உள்ளன.

இந்தப் பிரச்சனையைக் கையாளுவதற்கான திட்டம் ஒன்றை கடந்த அக்டோபர் மாதம் அரசு உருவாக்கியது.

வாகனப் போக்குவரத்தில் கட்டுப்பாடு, பெரும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடல் ஆகியன இதில் அடக்கம். கடந்த ஆண்டு, ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண்கள் கொண்ட கார்கள் ஒரே நாளில் சாலைகளில் பயணிக்காமல், மாறி மாறிப் பயன்படுத்தும் நடவடிக்கை காற்று மாசைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அது பெரிதாக ஒன்றும் பலனளிக்கவில்லை.

இவ்வாறான சீரற்ற, தற்காலிகத் தீர்வை தேடும் நடவடிக்கைகள் மட்டும் எடுக்காமல் நீண்ட கால் அடிப்படையில் தீர்வு தரும் நடவடிக்கைகள் தேவை என்று சில சமூக வலைதளப் பயனாளிகள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :