பண மதிப்பிழப்பு: 'பட்டினியும் வேலையின்மையும்தான் மோதி அரசின் சாதனை'

படத்தின் காப்புரிமை Getty Images

(இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, நவம்பர் 8-ம் தேதியுடன் ஓராண்டாகிறது. அந்த நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் ஐந்தாம் பகுதி இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 'பட்டினியும் வேலையின்மையும்தான் மோதி அரசின் சாதனை'

மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டாகிறது.

பணம் மதிப்பிழப்பு குறைத்தல் மூலம் சில முக்கிய இலக்குகள் எட்டப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார் மோதி.

முதலாவதாக நிழல் பொருளாதாரத்தை ஒழித்தல், இரண்டாவதாக, கள்ள நோட்டை அறவே ஒழித்தல், மூன்றாவதாக சட்டவிரோத நோட்டை வெளிக்கொணர்தல், நான்காவதாக கள்ள நோட்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்வதை தடுத்தல் போன்ற வாய்ஜால வித்தைகளை அவிழ்த்து விட்டார் பிரதமர் மோதி.

இவைதான் உண்மையான காரணங்கள் என்றால் மத்திய அரசு சாதாரண முறையிலேயே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் தவிர மற்ற நோட்டுக்களை பெருமளவில் அச்சடித்து வைத்திருக்க வேண்டும்.

பதுக்கல் பணத்தினை வெளிக் கொண்டு வரும் வழிகளையும் அவை பதுக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக அறிவிப்பு வந்த உடனேயே பிடிப்பதற்கு சாதாரண முறைலேயே வருமான வரித் துறையை முடுக்கி விட்டிருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன?

புதிதாக பாரத ரிசர்வ் வங்கியால் மிகவும் ரகிசயமான முறையில் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், அவை முதலில் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வங்கிகளுக்குப் பதிலாக மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளுக்குக் கிடைத்தன.

மறுபுறம், கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், அதை தங்க நகைகளாகவும், தங்கக் கட்டிகளாகவும் உருமாற்ற மத்திய அரசு வாய்ப்பை உருவாக்கியது.

வங்கிகளின் பண இருப்பு குவியும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சம்பாதித்த, சேர்த்து வைத்த பணம் கிடைக்காமல் முடக்கப்பட்டது.

எல்லா வகையிலும் பழைய நோட்டுக்கள் பாரத ரிசர்வ் வங்கிக்கு வந்து சேர்ந்து ஒரு வருடமாகியும் அதில் எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்பதை கண்டறிய முடியாமல் ரிசர்வ் வங்கி குழம்பி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரிசர்வ் வங்கி

தேங்கிக் கிடப்பதன் மூலம் செயற்கையான பொருளாதார வெற்றிடத்தை உருவாக்கி அடிமட்ட தொழில் முடங்கி பட்டினியும், வேலை இழப்பும் தீவிரமானதுதான் மோதி அரசின் கடந்த ஓராண்டு பணமதிப்பிழப்பின் குறிப்பிடத்தக்க சாதனை.

மற்றொரு பக்கம் எல்லா வகையிலும் சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் டிஜிட்டல் கம்பெனிகள் பெருகி, பெரும் லாபம் சம்பாதிக்க மோதி அரசு அனுமதித்துள்ளது.

கவர்ச்சி வசனங்களால் வாக்காளர்களை ஈர்த்த பிரதமர் மோதியின் திட்டமிட்ட செயற்கையான போலித்தனமான வீராப்பு பேச்சுக்கள்தான் தெருக்கோடியில் வாழும் சாமானிய மனிதனுக்கு மிச்சம். செயல் அளவில் கடந்த ஓராண்டாக பணமதிப்பிழப்புக்கு பிந்தைய நடவடிக்கைகளில் நேர்மையான முன்னேற்றங்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

மொத்தத்தில் மோதி அரசில், "நிழல் பொருளாதாரம்"தான் வலுப்பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்தியாவில் அடிப்படை "பண்ட மாற்று முறை" பொருளாதாரமாக இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக பணப் பரிவர்த்தனையாக மாற்றியதில் பெரும்பங்கு மத்தியில் பல யுகங்கள் ஆட்சி செலுத்திய காங்கிரஸ் அரசுகளுக்கு உண்டு.

குறிப்பாக, ராஜீவ் காந்தி கொண்டு வந்த மின் பொருள் பயன்பாடு நிலையிலும் உயர் மட்டத்திலும் மத்திய மட்டத்திலும் இருந்தவர்கள் தங்கள் சேமிப்புகளை நிலம், வீடுகள், கம்பெனி பங்குகளில் கணக்கில் காட்டி முதலீடு செய்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், இன்றைய காலகட்டத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் அவை திவாலாவது அதிகரிப்பதால், அதில் பங்குதாரர்களுக்கும் முதலீட்டா்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் செலுத்தக் கூடிய வரி விகிதங்களை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கச் செய்கின்றன. எனவே திரும்பவும் பணத்தை கணக்கில் கொண்டு வராமலேயே நிழல் பொருளாதாரம் வலுப் பெற ஆரம்பித்துள்ளது.

ஒருபுறம் டிஜிட்டல் முறையில் வணிகம் அதிகரிப்பதும், மற்றொரு புறம் வரியை ஜிஎஸ்டி மூலம் அதிகரிப்பதும் மக்களை மீ்ண்டும் நிழல் பொருளாதாரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

பணப்பரிமாற்றம் என்பது அரசின் நேரடி கவனிப்புக்கு வரும்போது, மக்களும் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கம், நவரத்தினங்களில் வரிக்கு உட்படாமல் சேகரிக்க மோடி அரசு அனுமதிக்கிறது.

இதன் விளைவவாக கட்டுமானப் பணிகள், தொழில்துறை செயலிழந்து உள்ளது.

இந்த முரண்பாடுகள் தனி மனித வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் சிதைக்கிறது.

வெளிநாடுகள் முதலீடு என்பது உறுதியான பொருளாதாரம், வெளிப்படையான தொடர்ந்து கொள்கை முடிவுகள் கொண்ட அரசு இருக்கும் இடத்திலேயே நடைபெறும்.

இந்தியாவில் பணமதிப்பு குறைப்பு, நோட்டுகளை செல்லாது போன்ற திடீர் அறிவிப்புகளால் நிலையற்ற கொள்கைகளைக் கொண்ட அரசாக மோதி அரசாக வெகுஜன சாமானியர்கள் பார்க்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதே நிலை தொடர்ந்தால், அடுத்து திடீர் அறிவிப்பு மூலம் ஒரு நாள் ரூபாய் நோட்டுகளே செல்லாது என்ற அறிவிப்பை ஏன் மோதி வெளியிடத் தயங்க மாட்டார் போன்ற கேள்வியும் சாமானிய மக்கள் மனங்களில் எழுகின்றன?

இப்படிப்பட்ட நிலையற்ற தன்மையால் வெளிநாட்டு முதலீடுகள் எந்த உத்தரவாதத்துடன் இந்தியாவுக்கு வரும்?

மோதியின் நடவடிக்கையால், பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. சாதாரண, நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 நாட்களுக்குள் இந்த விவகாரம் சீராகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார். ஆனால், இதுவரை பிரச்னை தீரவில்லை. மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பண மதிப்பிழப்பு அறிவிப்பு, அமலாக்கப்பட்டபோது பொருளாதாரத்தில் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்களின் அடையாளத்தைக் கண்டறிவது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. முறைப்படுத்தப்பட்ட வங்கி அமைப்பிற்குள் ரூ.15.28 லட்சம் கோடி பணம் திரும்பி வந்ததும் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்களின் முகவரி முழுவதும் பதிவாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டில் பொருளாதாரம் தடுமாறி கொண்டு இருக்கிறது. 7.7 சதவீதமாக இருந்த ஜிடிபி 6.6 சதவீமாக குறைந்துள்ளது. ஒரு சதவீத குறைவு காரணமாக ஒன்றரை லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ள நோட்டுகள் அதிகரிப்பு, கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை என நாட்டின் பொருளாதாரத்துக்கு இணையாக மற்றொரு நிழல் பொருளாதாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிழல் பொருளாதாரம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 23 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ரொக்கமில்லா பரிவர்த்தனை (டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை) போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிழல் பொருளாதாரத்தை ஒழித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது.

நிழல்பொருளாதாரத்துக்கு தீர்வு என்பது, சிறப்பான வரி முறையை அறிமுகம் செய்வதால் மட்டுமே தவிர, ரூபாய் நோட்டு தடை கிடையாது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமான மக்கள் உயிர் இழந்தனர். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் ஆகியோர் தங்களது உயிரை இழக்க நேரிட்டது.

இந்த நடவடிக்கையால், 3 லட்சம் கோடி ரூபாய் ஜி.டி.பி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த

நடவடிக்கைக்குப் பின்னுள்ள மறைமுகக் காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

கருப்புப் பணம் ஒழிந்ததா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்குப் பிறகு நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறியது.

தற்போது பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் 15,28,000 கோடி ரூபாய், அதாவது 99 சதவீதம் திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் திரும்பவரவில்லை.அப்படியென்றால் பெருவாரியான கறுப்புப் பணம் அனைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்டு மறுபடியும் புழக்கத்தில் உள்ளது என்று தானே அர்த்தம்.

16,000 கோடியான ரூபாய் கருப்புப் பணம் என்று சொல்லும் 1 சதவீத பணத்திற்காக 99 சதவீத பணத்தை செல்லாதது என்று அறிவித்தித்து, இந்த மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு செலவிட்ட தொகை ரூ.21,000 கோடி என்பது எவ்வளவு அபத்தமானது.

பணமதிப்பு நீக்கத்தின் முக்கியமான இலக்கில் அடுத்தது கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பது. 2015-ம் ஆண்டு தேசிய புலனாய்பு அமைப்பு (என்ஐஏ) வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்தது. அதாவது மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் 0.028 சதவீதம் கள்ளநோட்டுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளே அதிகம் கள்ளநோட்டுகளாக உள்ளன என்று என்ஐஏ கூறியது.

Image caption சுதர்சன நாச்சியப்பன்

ஆனால் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிக்கு திரும்பிய 1,000 ரூபாய் நோட்டுகளில் 0.0007 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். 500 ரூபாய் நோட்டுகளில் சுமார்0.002 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். மொத்த கள்ளநோட்டுகள் புழக்கத்தில் மிக குறைவான சதவீதமே வந்துள்ளது. மீதி என்ன ஆனது என்பதை மோதி அரசு விளக்கவில்லை.

அதுமட்டுமல்ல 2017 முதல் 2018-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் இதே காலாண்டில் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாக இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப் பெரிய அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி விகிதத்தில் சரிவு தற்போதுதான் ஏற்பட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பணமதிப்பிழப்பு முடிவால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் வரை குறையும் என்று பாரத முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் அதை அப்போது மோதி அரசு அலட்சியப்படுத்தியது. தற்போது மன்மோகன் சிங் கூறியது நடந்துவிட்டது. எப்படி பணமதிப்பு நீக்கம் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணமாக இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், இந்த உண்மைகளை மறைத்து விட்டு ஏதோ சாதனை செய்ததாக மோதி அரசு பெருமிதப்படுகிறது. ஒளிவு மறைவுகளுடன் கூடிய தெளிவற்ற மோதியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாமானிய மக்களுக்கு பயன் அளிக்கவில்லை. அதனால், பலன் பெற்று வருவது நிழல் பொருாளாதாரமே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்த, பணம் எடுக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள், சில அசெளகரியங்களை எதிர்கொண்டு தியாகம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோதி கூறினார்.

ஆனால், வெற்று இலக்குகளை நிர்ணயித்து, அதை சாமானிய மக்கள் மீது திணித்து அவர்களை ஓராண்டின் முடிவில் பிரதமர் மோதி ஏமாற்றி விட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

(கட்டுரையாளர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்