மனிதக் கழிவு ஆற்றலைக்கொண்டு இந்தியாவில் அதிக கழிப்பறைகளை உருவாக்க முடியுமா?

  • 15 நவம்பர் 2017

இந்தியாவில் கழிப்பறை கட்டும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டிற்குள் திறந்தவெளிகளில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்திய அரசு அரசு 2,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை ஒதுக்கியிருக்கிறது.

Image caption பீஹார் மாநிலத்திலுள்ள நெமுவா கிராமத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ நிறுவனத்தின் முதல் கழிவறை வளாகம்

இந்தியாவில் ஏழ்மையான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக பொது கழிவறைகளை கட்டும் சவாலை முன்னெடுத்திருக்கும் ஒரு சமூகத் தொழில் நிறுவனம், அந்த கழிவறைகளின் சேகரிக்கப்படும் மனிதக் கழிவில் இருந்து பராமரிப்பு செலவை சமாளிக்கும் சவால் மிகுந்த செலவை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்திய கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதில்லை. இதனால் சுகாராதார பிரச்சனைகள், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தயங்குவது பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக ஒதுக்குப்புறங்களுக்கு செல்லும்போது தாக்கப்படுவது அல்லது தாக்கப்படுலாம் என்ற அச்சம் போன்ற சமூக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அரசின் முயற்சிகளைத் தவிர, ஸ்ரீ (SHRI - Sanitation and Health Rights in India) போன்ற சமூக தொழில் முனைவோர்களும் சில புதுமையான முன்மொழிவுகளுடன் களம் இறங்குகின்றனர்.

கழிவு, ஆற்றல் மற்றும் சுத்தமான நீர்

ஸ்ரீ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரபின் குமார், பள்ளிக்காலத்தில் தாமதமாகவே பள்ளிக்கு செல்வார். ஏனென்றால், மலம் கழிக்க வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றுக்கு அருகில் செல்ல வேண்டும்.

இப்போது இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கழிவறைகளை கட்டும் மூன்று சமூக தொழில் முனைவோர்களில் ஒருவரான அவர், இலவசக் கழிவறைகளைக் கட்டுகிறார்.

Image caption பெல்லே மேசரி கிராமத்தில் உருவாக்கப்பட்டுவரும் உயிர் செரிமான கட்டமைப்பு

அரசால் கட்டப்படும் கழிவறைகளில் கழிவுகளை அகற்றுவதும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செலவுகளை எதிர்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஸ்ரீ நிறுவனம், கழிவுகளை அகற்றுவதற்கு பதிலாக, பயோடைஜஸ்டர் (உயிரி செரிமான கருவி) வழியாகக் கழிவுகளை செலுத்துகிறது.

பயோடைஜஸ்டர் கொடுக்கும் மின்சாரத்தை வைத்து நிலத்தடிநீர் இறைத்து மேலே எடுக்கப்படுகிறது. பிறகு அந்நீர் சுத்தப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு, பாட்டில் ஒன்று 50 காசுகள் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இந்த பணத்தைக் கொண்டு, கழிவறைகளைப் பராமரிக்கலாம்.

தற்போது நாளொன்றுக்கு 3,000 லிட்டர் சுத்தப்படுத்தப்பட்ட நீரை ஸ்ரீ தயாரிக்கிறது.

மக்களின் மனத்தடைகள்

பிரபின் குமாரும் இந்த நிறுவனத்தின் சக நிறுவனர் சந்தன் குமாரும் கனடாவில் பிறந்த அனூப் ஜெயின் எனும் பொறியாளரை 2010இல் சந்தித்தார்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், பீஹார் மாநிலம் சுபெளல் மாவட்டம் நெமுவா கிராமத்தில் முதல் சமூகக் கழிவறை வளாகத்தை இவர்கள் கட்டினார்கள். அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா எட்டு கழிவறைகள் இருந்தன.

Image caption ஒவ்வொரு ஸ்ரீ கழிப்பறை வளாகமும் நாளொன்றுக்கு 800 முறை பயன்படுத்தப்படுகிறது

காலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை அந்தக் கழிவறைகள் திறந்திருக்கும்.

இந்தக் குழு இதுவரை ஐந்து கிராமங்களில் கழிவறைகளை கட்டியுள்ளது. தினசரி சுமார் 800 முறை அவை பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற ஒரு கழிவறை கட்ட சுமார் 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடுகின்றனர். ஆனால் வடிகட்டப்பட்ட நீரை பாட்டில்களில் விற்பனை செய்வதால் வருமானம் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

"இதுவரை அரசு கழிவறை வசதி செய்யாத கிராமங்களை தேர்வு செய்கிறோம்," என்கிறார் சந்தன் குமார்.

கழிவறைகளை கட்டுவதற்கு முன்னதாக குறிப்பிட்ட அந்த கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துகின்றனர். ஏனெனில் மக்களின் சுகாதார பழக்க வழக்கங்களுக்கான அடிப்படை காரணம் பெரும்பாலும் கலாச்சாரமாகவே இருக்கிறது, தேவையான வசதிகள் கிடைக்காதது மட்டுமே அல்ல. கழிவறைகளை பயன்படுத்துவதற்காக மக்களின் போக்கை மாற்றியமைக்க, அவர்களின் மனத்தடைகளை நீக்கவேண்டியிருக்கிறது.

தங்களது தொழில்முனைவோர் தொடரமைப்புகளின் மூலம், கழிவறையின் பராமரிப்பில் மக்களை ஈடுபடுத்தி, "எப்போதும்" சுத்தமான நீரை வழங்க முடியும் என்று நம்புகிறார் செளத்ரி.

தொலைநோக்குத் திட்டங்கள்

"புதிய கண்டுபிடிப்புகளுக்கு தொழில்முனைவோர்களையே எதிர் பார்க்கிறோம்," என்கிறார் யுனிசெஃப் இந்தியாவின், நிக்கோலஸ் ஆஸ்பர்ட்.

Image caption நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த ஸ்ரீ நிறுவனர்கள் விரும்புகின்றனர்

அவர்கள் தொழில் செய்ய புதிய வழிகளை உருவாக்குவது, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதுடன், முன்னேற்றத்தையும் பற்றி சிந்திக்கிறார்கள்."

பயோடைஜஸ்டர் போன்றவை சுவாரஸ்யமாக இருப்பதாக சொல்லும் ஓஸ்பெர்ட், இந்தத் திட்டம் பெரிய அளவில் விரிவுபடுத்துவதை தடுக்கமுடியாது என்கிறார். ஸ்ரீ குழு பெரிய திட்டங்களை இலக்காக கொண்டிருக்கின்றது.

"அரசுடன் இணைந்து நெருக்கமாக வேலை செய்து பெரிய அளவில் எங்கள் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லவேண்டும்" என்கிறார் ஜெயின்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பொதுக்கழிவறை தட்டுப்பாடு : வழிகாட்டும் ஜெர்மன்

"இதுபோன்ற மேலும் பல கழிவறைகளை கட்ட அரசிடம் இருந்து நிதியுதவி பெற விரும்புகிறோம். இந்த கழிவறைகளை சமூகங்களே நிர்வகித்து, இயக்கும். அவற்றின் பயன்பாடு மற்றும் பராமரிப்பை ஸ்ரீ உறுதிப்படுத்தும்."

"சமுதாயத்தில் திறந்தவெளிகளை கழிவறைகளாக பயன்படுத்துவதை 100% மாற்ற உதவும் நிலையில் நாம் இருக்கவேண்டும்" என்று அவரது சக நிறுவனர் சந்தன் குமார் ஒப்புக்கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்