இந்திய உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான ஊழல் குற்றச்சாட்டினை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக அசாதாரணமான நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடந்தன.

படத்தின் காப்புரிமை Reuters

கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, சுயேச்சையான புலன்விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இடையே வெளிப்படையான வேறுபாடுகள் எழுந்தன.

அந்த மருத்துவக் கல்லூரியைத் திறக்க நீதிமன்ற உத்தரவு பெற முயன்றதாக ஓய்வு பெற்ற நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துசியை மத்திய புலனாய்வாளர்கள் குற்றம்சாட்டினர். கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது பிணையில் வெளியில் வந்துள்ளார்.

இவ்வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு முரண்பட்ட நோக்கங்கள் இருப்பதாக வழக்கின் ஒரு மனுதாரரான பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியதை அடுத்து அவருக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் இடையில் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

நீதித்துறை ஒழுக்கமின்மை, இந்தியாவின் உயர்ந்த நீதிபதிகளுக்கிடையே வளர்ந்துவரும் நம்பிக்கை குறைபாடு ஆகியவற்றை இந்நிகழ்வு வெளிச்சம்போட்டுக் காட்டியது.

உலகின் அதிகாரமிக்க நீதிமன்றங்களில் ஒன்றான இந்திய உச்சநீதிமன்றத்துக்கு இது நற்செய்தி அல்ல. கடந்த வார நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் எழுந்துள்ள நம்பிக்கை குறைபாட்டை சுட்டிக் காட்டுவதுடன், இந்நீதிமன்றத்தின் எதிர்காலம் தொடர்பான முக்கியக் கேள்விகளையும் எழுப்பியுள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உரிய மரியாதையோடு நடத்த நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் தவறிவிட்டதை அடிக் கோடிட்டுக் காட்டுவதாகவும் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஒருமித்த குரலில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படத்தின் காப்புரிமை J Suresh

எமர்ஜென்சிக்குப் பிறகு மிகமோசமான நம்பகத் தன்மை நெருக்கடியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டிருப்பதாக மூத்த கல்வியாளரும் கட்டுரையாளருமான பிரதாப் பானு மேத்தா கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் இருண்ட காலமான எமெர்ஜென்சி காலத்தில்தான் சிவில் உரிமைகள் நசுக்கப்பட்டதோடு இந்திரா காந்தி அரசிடம் இருந்து வந்த நெருக்கடிகளுக்கு நீதிமன்றம் அடிபணியவேண்டியதாயிற்று என்கிறார் மேத்தா.

அவர் சொல்வது சரியாக இருக்கலாம். "எமெர்ஜென்சி காலத்தில் அரசங்கத்தால் நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டனர், பலவீனப்படுத்தப்பட்டனர். நாம் இப்போது பார்ப்பது உள்ளே இருக்கிற சிக்கல்," என்று என்னிடம் கூறினார் அலோக் பிரசன்னகுமார். இவர் பெங்களூரில் இருந்து செயல்படும் 'விதி லீகல் பாலிசி' என்ற சட்டக் கொள்கை ஆலோசனை அமைப்பின் ஆய்வாளர்.

"நீதிமன்றம் என்ற நிறுவனத்தைப் பாதுகாக்கவேண்டிய நீதிபதிகள் ஒருவரை ஒருவர் நம்புவதாகத் தெரியவில்லை. மாபெரும் நிறுவனத்தை உள்ளீடற்றதாக மாற்றுவதாக இது இருக்கிறது," என்கிறார் அவர்.

இந்திய உச்சநீதிமன்றம் அதிக வேலைப் பளு உள்ள நீதிமன்றம். 2015ல் இது 47,000 வழக்குகளை முடித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி வரையில் மேலும் 60,000 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

படத்தின் காப்புரிமை AFP

நீதி அமைப்பின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை சரிந்துவருவதை இந்த சர்ச்சை பிரதிபலிப்பதாக பலரும் கூறுகின்றனர். நீதிபதிகளை சார்பற்றவர்களாகவோ, நேர்மையானவர்களாகவோ இப்போது இந்தியர்கள் பார்ப்பதில்லை. பல ஆண்டுகளுக்கு, பல பத்தாண்டுகளுக்கு விசாரணைகள் இழுக்கின்றன. மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த பத்தாண்டு காலத்தில் மக்கள் தொகையும், பொருளாதாரமும் வளர்ந்திருந்தாலும் உரிமையியல் வழக்குகள் பதிவாவது சீராகக் குறைந்துவந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மூலமோ, உள்ளூர் காவல்துறை மூலமோ தங்கள் தகராறுகளை மக்கள் தீர்த்துக்கொள்வதாகத் தெரிகிறது. கடந்த பத்தாண்டுகளில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் கூட தவறாகப் போவதாகத் தெரிகிறது.

"கீழமை நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை போனாலும் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவையாகப் பார்க்கப்பட்டன. இப்போது அப்படிப் பார்க்கப்படவில்லை. அதுதான் அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது," என்கிறார் ஷைலஸ்ரீ சங்கர். தில்லியில் இருந்து செயல்படும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளரான இவர் உச்சநீதிமன்றம் தொடர்பாக நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

ஊடகம் மற்றும் சுயேச்சையான சட்டச் சீரமைப்பு குழுக்களின் கடும் சீராய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆளானது. இதன் தீர்ப்புகள் சில கடும் மக்கள் எதிர்ப்புக்கு ஆளாயின.

சர்ச்சைகள்

ஜல்லிக்கட்டை தடை செய்யும் 2014-ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை அடுத்து அத் தீர்ப்பை மாற்றியமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஜனவரியில் சட்டம் ஒன்றை இயற்றியது.

நீதிபதிகள் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற அவமதிப்புக்காக கைது செய்து சிறையில் அடைத்தது உச்சநீதிமன்றம்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடும்படி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஓட்டல்களும் உணவகங்களும் போராட்டம் நடத்தியதை அடுத்து அந்த உத்தரவைத் தளர்த்தியது. சினிமாவுக்குச் செல்லும் பலரது வெறுப்புக்கும் ஆளாகும் வகையில், திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன்பு தேசிய கீதம் ஒலிபரப்பவேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

தம்மை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர மறுக்கும் நீதித்துறையின் போக்கு கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து மூத்த நீதிபதிகளைக் கொண்ட 'கொலீஜியம்' என்னும் வெளிப்படைத்தன்மை இல்லாத அமைப்பே உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் நியமிக்கும், இடமாற்றம் செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதையும் விமர்சகர்கள் எதிர்க்கிறார்கள்.

அரசியல் அழுத்தம்

உச்ச நீதிபதிப் பதவிகளுக்கு வட்டாரவாரியான, பாலின ரீதியான ஒதுக்கீடுகள் எழுதப்படாத சட்டமாக நீடிப்பதையும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையில் இதமான உறவுகள் நீடிப்பதையும் பற்றியும் பேச்சுகள் உண்டு.

பதவிக் காலத்துக்குப் பிறகு கௌரவமான அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதால் அவர்கள் அரசிடம் இருந்து வரும் அழுத்தங்களுக்குப் பணிகிறவர்களாக இருக்கிறார்கள். போதிய அளவு நீதிபதிகளின் ஊதியம் உயர்த்தப்படாததும் ஒரு காரணம். கடந்த 67 ஆண்டுகளில் நீதிபதிகளின் ஊதியம் நான்கு முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய நீதிமன்றங்களின் பணிச்சுமை குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை. தமது நூலுக்காக ஆய்வுகளை மேற்கொண்டபோது ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சராசரியாக தினமும் 100 வழக்குகளை விசாரிப்பதை ஷைலஸ்ரீ கண்டறிந்தார். தற்போது பணியில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு குறிப்பிட்ட நாளில் தாம் 300 வழக்குகளை விசாரித்ததாக சக நீதிபதி ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு முதல் ஆறு ஆண்டுகள் நீடிக்கும் தமது பதவிக் காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் 6,000 வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் சராசரியாக 4 ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருப்பதும், தலைமை நீதிபதி பதவியில் ஒருவர் சராசரியாக 2 ஆண்டுகள் இருப்பதும் அவர்களுக்கு அந்த நீதிமன்றத்தின் மீது பற்றுதல் ஏற்படவும் தலைமைத்துவத்தை எய்தவும் வாய்ப்பில்லாமல் செய்கிறது என்றும் சிலர் கருதுகின்றனர். ஒரு நிறுவனத்தின் பொறுப்பை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்வது எளிதல்ல என்கிறார் அலோக் பிரசன்ன குமார்.

பிளவுபட்ட நீதிமன்றம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஒரு பாலின உறவை அங்கீகரிக்கவேண்டும் என்று தீவிர போராட்டம் நடந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் தாராளவாதமும் பழமைவாதமும் மாறி மாறி வெளிப்பட்டுள்ளன. தன்பாலின உறவை சர்ச்சைக்குரிய முறையில் தடை செய்த இதே நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக ஏற்றுக்கொள்வதாகவும் கூறியது. திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று விநோதமாகத் தீர்ப்பளித்த இந்த நீதிமன்றம் தங்களுடைய அந்தரங்கத்துக்கான குடிமக்களின் உரிமை அடிப்படை உரிமை என்றும் தீர்ப்பளித்தது.

ஜனநாயகத்தின் பிற நிறுவனங்கள் செல்லரித்துப் போன நிலையில் ஜனநாயகத்தில் நீதித்துறையின் வகிபாகம் தொடர்பான பதற்றங்களையும், நீதிமன்றம் பிளவுபட்டிருப்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன என்கின்றனர் பலர்.

ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு பொறுப்புள்ளவைகளாக நீதிமன்றங்கள் இருப்பதே சவால் என்கிறார் ஷைலஸ்ரீ.

"நீதித்துறை ஜனநாயகத்துக்கு மேலானதாக இருக்க முடியாது," என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்