தமிழக நடிகர்களுக்கு அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிச்சல் எப்படி வருகிறது?

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசை விமர்சித்து பேசியது, மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சித்த காட்சிகளுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் பேசியபோது, அத்திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு ஆதரவாக தென் இந்திய நடிகர்கள் மற்றும் திரைத்துறையினர் குரல் எழுப்பியது உள்ளிட்ட விடயங்களில் தென்னிந்திய நடிகர்கள் அரசியல்வாதிகளை எதிர்த்து பேசி வருகிறார்கள்.

Image caption பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே

இதே சமயம் இந்தி திரைப்படமான 'பத்மாவதி'யில் ராஜபுத்திரர்களின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தீவிர வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நேரத்தில், அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே அப்படக்குழுவினர் பேசி வருகின்றனர்.

ஒரு அமைப்பு, அப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகியின் தலைக்கு விலை வைத்த பின்னும் வட இந்தியத் திரைத் துறையில் பெரிய அளவிலான எதிர்ப்புக்குரல்கள் எழவில்லை.

பிபிசி தமிழின் வாதம்-விவாதம் பகுதியில், சமூக வலைத்தள நேயர்களிடம் ''கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் முயற்சியை வட இந்திய நடிகர்களை விட தென்னிந்திய நடிகர்கள் தைரியமாக எதிர்க்கிறார்கள் என்ற கருத்து'' உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கிறதா? எப்படி?இல்லை என்றால், ஏன்?" என்ற கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Twitter

கடமைகளில் ஒன்று

சக்தி சரவணன் எனும் நேயர், "அரசு, அரசர், அமைச்சர், தலைவனின் அரசியல் செயலில் குற்றம், குறைபாடு இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதை தங்களது கடமைகளில் ஒன்றெனக் கருதினர் சங்க இலக்கிய புலவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை எழுர்ச்சிக்கு தங்களது படைப்புகளால் வழு சேர்த்தனர் கடந்த நூற்றாண்டு தென்னக கவிஞர், நாடகக்கலைஞர்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் இக்காலத்துத் தென்னக திரைத்துறையினரின் அரசியல் ரீதியான பங்களிப்பு வடபிராந்திய கலைஞர்களை விடச் சற்று முன்னோடிகளாக இருந்தாலும் குறைவே ஆகும்," என்று கூறியுள்ளார்.

'தாதாக்கள்' மீதான பயம் காரணமா?

"அங்கு அரசியல்வாதிகள் பின்னால் பல தாதாக்கள், தொழிலதிபர்கள் உள்ளார்கள், எதிர்த்தால் விளைவு வேறுவிதமாக வரும் என்ற பயம்தான். அங்கு மக்களிடம் நடிகர்கள் அரசியலில் செல்வாக்கு பெறுவது கடினம். அவர்களுக்கு மக்கள் அதிகம் ஆதரவு அளிக்கமாட்டார்கள், தென்னிந்தியாவில் அப்படியில்லை அரசியலில் நடிகர்கள் பங்களிப்பு அதிகம்," என்பது ஜாய்ஸ் பால் எனும் நேயரின் கருத்து.

'மக்கள்தான் எதிர்க்கிறார்கள்'

"இல்லை. தென்னிந்திய மக்கள்தான் எதிர்க்கிறார்கள் இதை சுயநலத்துக்காக நடிகர்கள் தனதாக்கி கொள்கிறார்கள் நடிகர்களை எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவர்கள்தான் எதிர்ப்பதுபோல மாயை ஏற்படுகிறது. மக்களின் எண்ணங்களை நடிகர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம்," என்கிறார் வெற்றி வெற்றி என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

'ரத்தத்தில் கலந்த உணர்வு'

"நடிகனுக்கு மட்டு்ம் அல்ல தென்னகத்தின் குழந்தைக்கு கூட இரத்தத்தில் கலந்த உணர்வு போர்க்குணம். வரலாற்றை பாரும்!!!" என்கிறார் சாகுல் ஹமீது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :