தமிழ்நாடு: சங்க பரிவாரத்தின் ஒற்றையாட்சிக் கனவுக்கான பரிசோதனைக் களமா?

(தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் மாநில அரசு அதிகாரிகளிடம் நேரடியாக ஆய்வு நடத்தியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதுகுறித்த ஒரு கண்ணோட்டம். இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். இது, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

தமிழ்நாடு: சங்க பரிவாரத்தின் ஒற்றையாட்சிக் கனவுக்கான பரிசோதனைக் களமா? படத்தின் காப்புரிமை Getty Images

அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் நேரடியாக அரசு அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக எழுந்திருக்கிற சர்ச்சை எதிர்பார்த்த ஒன்றுதான்.

அரசியல்சாசன ரீதியில் தனக்களிக்கப்பட்ட அதிகார வரம்பை மீறி புரோஹித் செயல்படுகிறார் என கிட்டத்தட்ட எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களுமே கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின். கொல்லைப்புற வழியாக ஆட்சி நடத்திவரும் பாரதிய ஜனதா கட்சியினர், இப்போது நேரடியாகவே அந்த வேலையைத் தொடங்கிவிட்டார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அண்மைக்கால தமிழக வரலாற்றில் இது "உரிமை பறிபோதல் காலகட்டம்" என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவதற்கான தனது முயற்சியின் ஒரு பகுதியாக, 90களில், பாரதிய ஜனதா மேற்கொண்ட செயல்பாடுகளைப் பற்றி விமர்சித்த பலர், அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதி தனது மாநிலத்தை சங்கப் பரிவாரத்தினரின் இந்து ராஷ்டிரத்துக்கான பரிசோதனைக் களமாக மாற்றிவிட்டார் என்று கூறினார்கள்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கோத்ரா சம்பவங்களும் தொடர்ந்து நடந்தேறிய ஒரு மிகப்பெரிய படுகொலையும் குஜராத்தை பாஜகவின் கோட்டையாக ஆக்கிவிட்டது. (இப்போது விரிசல் விடத்தொடங்கியுள்ளது என்பது வேறு செய்தி). பிறகு நாடெங்கும், இதே பாணியில் சங்க பரிவார அமைப்புகள் வெற்றியை ருசித்த உதாரணங்களும் உள்ளன.

இப்போது பசு பாதுகாப்பு, அறிவுஜீவிகளைக் கொல்லுதல், கல்வி நிலையங்களைக் கைப்பற்றுதல் என பாஜக ஆளும் மாநிலங்களிலும் வலுவாக உள்ள மாநிலங்களிலும் அவர்களது பரிசோதனைகள் தொடர்கின்றன. மதவாதம், கலாசாரவாதம் உள்ளிட்ட பல களங்களில் இந்தியாவே பரிசோதனை எலிகளின் கூடாரமாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்து ராஷ்டிரக் கனவு என்பது 'ஒரே மதம்', 'ஒரே கலாசாரம்' ஆகியவற்றோடு முடிகிற சமாசாரமல்ல. அது 'ஒரே நாடு'. 'ஒரே அதிகாரம்' என்று கருதும் ஒற்றையாட்சிக் கனவுடனும் தொடர்புடையது.

சுதந்திர இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டதை சித்தாந்த ரீதியில் எப்போதும் ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் சங்க குடும்பத்தினர். பெரும்பலத்துடன் தில்லியில் ஆளும் மோதிக்கு இதுதான் சரியான நேரமும்கூட.

அதுதான் ஜிஎஸ்டியை ஒரு குறிப்பிட்ட மையப்படுத்தப்பட்ட வடிவத்தில் நடைமுறைப்படுத்துகிறது. அதுதான் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று திட்டமிடவைக்கிறது. அதுதான், நாங்கள் சொல்வதைக் கேட்காத மாநிலங்களுக்கு "ஒற்றை ரூபாய்கூட தரமாட்டேன்" என்று பிரதமரைப் பேசவைக்கிறது.

நிதிஷ்குமார் படத்தின் காப்புரிமை AFP
Image caption நிதிஷ்குமார்

அதுதான், "இன்னுமொரு முறை நாங்கள் ஆட்சிக்குவந்தால் இந்தியாவில் மாநிலக்கட்சிகளே இருக்காது" என்று பாஜக தலைவர்களை சவடால் விடவைக்கிறது. அதுதான் பழைய கூட்டாளிகளான சிவசேனை, அகாலிதளம், அதிமுக, பிஜு ஜனதாதளம் ஆகியோரை பாஜக சுழற்றிசுழற்றி அடித்து விளாசக் காரணமாக இருக்கிறது. அதுதான் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை மோதியின் காலில் விழவைத்தது.

மதவாத பரிசோதனைக்களமாக அன்றைய குஜராத் இருந்தது என்றால், ஒற்றையாட்சிக்கான பரிசோதனைக்களமாக இன்றைய தமிழ்நாடு மாற்றப்படுகிறது. மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது ஆளுநர்கள் மூலமாக தொல்லை கொடுப்பது புதிய சமாசாரம் அல்ல. ஆனால் தொடர்ச்சியாக மாநில அரசுகளின் உரிமைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் தில்லி, தமிழ்நாட்டுக்கு தனிச்சிறப்புகொடுத்து இவ்விளையாட்டில் இறங்கியிருக்கிறது.

ஆளுநர் செயல்பாடுகளுக்கும் அதிமுகவின் தினகரன் அணியினரைக் கதறக்கதற துவைத்தெடுப்பதற்கும் வேறு என்ன காரணம்? பாஜகவினர் தமிழ்நாட்டை தனித்து வஞ்சம் தீர்க்கத் துணிந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்களின் அடுத்த இலக்கு திமுகதான்.

இன்று இந்தியாவிலேயே அடிமைத்தனத்தின் உச்சம் என்றால் அது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அமைச்சரவைதான். ஆளுநர் அத்துமீறும்போது, அதற்கு எதிராக ஒரு சிறு முனகலைக்கூட வெளியிட மறுக்கிறார்கள் அமைச்சர்கள். மாறாக ஆளுநருக்கு அந்த உரிமை உண்டு என்று வாதாடுகிறார்கள். காலில் விழ யாருமில்லாமல் எவ்வளவு காலம்தான் இருப்பது?

தமிழ்நாடு: சங்க பரிவாரத்தின் ஒற்றையாட்சிக் கனவுக்கான பரிசோதனைக் களமா?

கோவைக்குச் சென்றிருந்தபோது, புரோஹித் தனது ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அதிமுக அமைச்சர்களையோ எம்எல்ஏ, எம்பிகளையோ யாரையும் அருகில் சேர்க்கவில்லை. அவர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசனை நடத்தினார். பாஜகவின் எடுபிடி அரசாக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுகிறது என்று கூறப்படுவதுகூட மிகவும் மலினப்படுத்தப்பட்ட வர்ணனையாகும்.

தமிழ்நாட்டின் உரிமைகளை அழிப்பதில் பாஜகவினருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து, காவி சக்திகளின் ஒற்றையாட்சிக் கனவை நனவாக்குவதற்கான பரிசோதனை எலிகளாக தமிழ்நாட்டு மக்களை மாற்றுகிற வேலையையும் செய்கிறார்கள் அதிமுகவினர். அவர்கள் கோழைகள் மட்டுமல்ல, துரோகிகளும்கூட என நாளை தமிழக வரலாறு எழுதப்பட்டால் அதில் ஆச்சரியப்படவே ஏதுமிருக்காது.

ஆளுநரின் அதிகாரம் உள்பட மத்திய அரசின் அதிகாரங்கள் ஒரு மாநிலத்தில் எந்த அளவுக்கு தொழிற்படமுடியும் என்பது குறித்து விவாதிக்க சில அரசியல் சாசன முறைகளும் இருக்கின்றன. காலம்தோறும் வழங்கி வந்த அரசியல் மரபுகளும் இருக்கின்றன. இந்த முறைகள், மரபுகள் பற்றியெல்லாம் பேச இனி தேவை இருக்குமா என்று தெரியவில்லை.

போலிக்கூட்டாட்சி நிலவும் இந்தியாவில் இந்த முறைகளும் மரபுகளும் தில்லிக்குச் சார்பானதாகவே இருந்திருக்கின்றன என்பதை நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். ஆனால், மாநில அரசுகளைப் பொறுத்தவரை, குறிப்பாக மாநிலக் கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில், மத்திய அரசின் இடைவிடாத ஒற்றையாட்சி ஈர்ப்புக்கு எதிரான செயல்பாடுகள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரக்காவிலிருந்து ஐ.எஸ் அமைப்பினர் ஆயுதங்களுடன் தப்பிக்க ரகசிய ஒப்பந்தமா?

மாநில உரிமைகள், மாநில சுயாட்சி கோரிக்கைகளினூடாகவும் மாநிலக் கட்சிகள் பெரிதும் பங்கேற்கும் கூட்டணிகளின் மூலமாகவும் அரிதாக சில உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் மூலமாகவும் (எடுத்துக்காட்டாக, மாநில அரசாங்கங்களை கலைத்தல் தொடர்பான அரசியல் சாசன பிரிவு 356 தொடர்பான பொம்மை வழக்குத் தீர்ப்பு) இந்தச் செயல்பாடுகள் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான ஒரு சமநிலையைப் பேண உதவியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இருபெரும் திராவிடக் கட்சிகளுமே இந்தச் சமநிலையைப் பேண பல சமயங்களில் தில்லியோடு முரண்பட்டு மோதியிருக்கின்றன. அரசியல் சமரசங்களின்றி திமுகவும் அதிமுகவும் தொடர்ந்து செயல்பட்டிருந்தால், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கும் அது மிகப்பெரிய விடியலைத் தந்திருக்கும். ஆனால் தில்லியில் ஆள்பவர்களைப் பொறுத்தவரை - காங்கிரசோ பாஜகவோ - அவர்களது இயல்பே மாநிலங்களின் உரிமைகளை மிதிப்பது, பறிப்பது என்பதாக ஆகிவிட்டது.

மமதா பானர்ஜி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மமதா பானர்ஜி

இந்த உரிமைப்பறிப்பு மாநிலங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கியிருக்கின்றன. அண்மை வரலாற்றில், மாநிலங்களின் நலன்களைக் கருதி, மத்திய அரசோடு சண்டையிட்டவர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தவர்களில் நரேந்திர மோதியும் ஒருவர் என்பதுதான் வேடிக்கை. அதைப் போலவே மாநில உரிமைகள் விவகாரத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிவந்தவர் ஜெயலலிதா,

இன்றைய நிலையில் மமதா பானர்ஜி. சித்தராமய்யா, பினராயி விஜயன் போன்றோர் அந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலும் புதுவையில் நாராயணசாமியும் துணைநிலை ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடுவதே முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் ஹெலிகாப்டர் பக்தர்களோ, புதிய அடிமைத்தனத்துக்கு இலக்கணம் வகுக்கிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் ஜல்லிக்கட்டில் தொடங்கிய இந்த உரிமைகள் தொடர்பான பிரச்சினை இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான இந்தியக் கடலோரக் காவல்படையின் துப்பாக்கிச்சூட்டில் வந்து நிற்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தென் கொரியாவிற்காக சண்டையிடவுள்ள வட கொரியர்!

தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலமா அல்லது காலனியா என்றொரு எண்ணம் தமிழகமெங்கும் சாதாரண மக்களிடம் இப்போது பரவிக்கொண்டிருக்கிறது. அப்படிப் பரவவேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் என்பதுதான் உண்மை. பரிசோதனை என்பது அதுதான்.

அத்துடன் பரிசோதனை, எலிகளின் மீதுதான் முதலில் செலுத்தப்படுகின்றன. புலிகள் எனத் தங்களைக் கருதிக்கொள்வோர் எலிகள் என உணரும்படியான ஒரு உளவியல் யுத்தம் இங்கே தொடங்கியிருக்கிறது. புரோஹித்தின் ஆய்வுகள் அதன் ஒரு பகுதிதான்.

(கட்டுரையாளர் - தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :