நூற்றாண்டுகளை கடந்த மரங்களை ஆவணப்படுத்தும் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி

தெய்வ வழிபாடு காரணமாகவே பெரும்பாலான இடங்களில் பழைய மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கிறார் சுந்தரராஜு. படத்தின் காப்புரிமை சுந்தரராஜு

ஓய்வு பெற்ற தமிழக வனத் துறை அதிகாரியான 66 வயது சுந்தரராஜு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றாண்டுகளைக் கடந்த மரங்களை ஆவணப்படுத்திவருகிறார்.

தற்போதுவரை சுந்தரராஜு, தனது சுயவிருப்பத்தின் காரணமாக, நூறு முதல் சுமார் ஐந்நூறு ஆண்டுகள் வரையிலான ஏறத்தாழ என்பது மரங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

மரத்தின் வயது, தனித்துவம், வரலாறு மற்றும் மரத்தின் தோற்றம் போன்றவற்றைக் கொண்டு வித்தியாசமான பழைய மரங்களின் விவரங்களை தொகுத்துள்ளதாகக் கூறுகிறார் சுந்தரராஜு.

ஆஃப்ரிக்காவில் இருந்து சிவகங்கைக்கு வந்த விதைகள்:

கடந்த மாதம் அவர் சிவகங்கையில் ஒரு அபூர்வ மரத்தைப் பார்வையிட்ட நிகழ்வை விவரிக்கும்போது தனக்கு கிடைத்த புதிய நண்பர்களைப் பற்றி கூறுவதுபோல ஆர்வத்துடன் பேசினார்.

''இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்தன. அந்த இரண்டு மரங்களும் ஆப்பிரிக்க நாட்டுமர இனத்தைச் சேர்ந்த பவோபாப் மரங்கள். ஆறாயிரம் சதுரஅடியில் பரந்துவிரிந்து வளர்ந்துள்ள இரண்டு மரங்களும் சுமார் ஐந்நூறு ஆண்டுகள் ஆன மரங்கள் என்பது என் கணிப்பு. ஒரு மரத்தின் தண்டுப் பகுதி ஏழு மீட்டர் சுற்றுளவு கொண்டதாக இருந்தது. இந்த மரங்கள் முந்தைய காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வாணிபம் செய்ய வந்தவர்கள் போட்ட விதைகளில் வளர்ந்தவையாக இருக்கலாம்,'' என்றார் சுந்தரராஜு.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப வளர்ந்த மரங்களின் பட்டியலில் சூடானில் இருந்துவந்த புளிய மரமும் ஒன்று என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை Facebook

''வெளிநாடுகளில் இருந்து வந்த வணிகர்கள் விதைகளை இங்கு தூவிச்சென்றிருக்கலாம். நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வணிகம் செய்த நாடுகளில் பார்த்த மரங்களை தங்களது ஊர்களில் வளர்க்க இங்குகொண்டுவந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அந்த மரங்கள் உள்ளூரில் உள்ள காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. நான் பார்த்த பவோபாப் மரங்கள் ஆப்பிரிக்கா பாலைவனப் பகுதிகளில் காணப்படும் மரங்கள். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் அவை பலநூறு ஆண்டுகளை கடந்தும் செழுமையாக இருக்க தங்களை அந்த ஊரின் நிலம், தட்ப வெப்பதன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டன,'' என்றார் அவர்.

1974ல் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர்ந்த சுந்தரராஜு, 2011ல் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாளே, தனது நண்பர்களுடன் மரங்களை பாதுகாக்கும் தன்னார்வ அமைப்பில் சேர்ந்துகொண்டதாகக் கூறுகிறார்.

இயற்கையைக் காக்கும் போராட்டம்

இயற்கையைக் காக்க நடக்கும் போராட்டத்திற்கு தன்னுடைய பங்காக பழமையான மரங்களை ஆவணப்படுத்தும் வேலையைச் செய்வதாகக் கூறுகிறார்.

"குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்லும் போதுகூட அங்கு பழைய மரங்கள் உள்ளனவா என்று விசாரித்துப் பார்த்துவருவேன். அப்படி ஒரு பயணத்தின்போது தேனியில் சுருளி அருவிக்கு அருகில் 114 அடிஉயரம் கொண்ட தானி மரம் ஒன்றை கண்டேன். இயற்கையின் மகத்துவத்தை உணர்த்தும் சின்னங்களாக மரங்கள் உள்ளன என்று எண்ணுகிறேன்." என்கிறார் இந்த மரஆர்வலர்.

நூறு அடி உயரம் வளரும் கொடைபனை மரங்கள் அறுபது ஆண்டுகள் கழித்தே பூக்களை கொடுக்கும் என்றும் ஒரு ஆண்டு முழுக்க கனிகளை கொடுத்துவிட்டு மடிந்துவிடும் என்ற தகவலை ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.

வழிபாடுகளால் பாதுகாக்கப்பட்ட மரங்கள்

தெய்வ வழிபாடு காரணமாகவே பெரும்பாலான இடங்களில் பழைய மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கிறார் சுந்தரராஜு.

படத்தின் காப்புரிமை சுந்தரராஜு

''திருச்சியில் காவிரிக் கரையில் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று பாதுகாப்பாக உள்ளது. அதை தெய்வமாக வழிபடுகிறார்கள் .அதே போல சிவகங்கையில் உலக்கைப் பாலை என்ற மரம் வழிபடும் கடவுளாக இருப்பதால் சுமார் ஐந்நூறு ஆண்டுகளாக எந்தச்சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளது,'' என்கிறார் அவர்.

''திருநெல்வேலி தாமிரபரணி கரையில் (முண்டந்துறை மலை அடிவாரம்) அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலில் உள்ள தல விருட்சமான களாக்காய் மரம் சுமார் 200 ஆண்டுகளாக பாதுகாப்பாக உள்ளது. ஆனால் கோயிலைச் சுற்றியுள்ள பழமையான நாவல் மற்றும் வேம்பு மரங்கள் சேதமாகியுள்ளன,'' என்றார் சுந்தரராஜு.

மரங்களின் வயதை கணக்கிடும் முறை

மரங்களின் வயதை அறியும் வழிமுறைகளைப் பற்றிக்கேட்டபோது, "மரத்தின் தண்டுப் பகுதியின் அளவை வைத்து கணக்கிடும்முறை உலகளவில் ஒத்துக்கொள்ளப்படுகிறது. அதோடு, உள்ளூரில் உள்ள மக்களிடம் அந்த மரத்தின் வரலாற்றைக் கேட்டறிவோம். மரம் தனித்துவம் வாய்ந்த மரமா போன்ற தகவல்களைக்கொண்டு ஆய்வு செய்து மரத்தின் வயதைக் கணிக்கின்றோம்." என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption வனத் துறை அதிகாரிகளுடன் சுந்தரராஜு

கொடைக்கானலில் அவர் பார்த்த ஐந்நூறு ஆண்டுகள் பழமையான மலைநாவல் மரம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் தனியார் பள்ளியில் பார்த்த சுமார் ஏழுநூறு ஆண்டுகளான புளியமரம், ஏற்காடு மலைப்பகுதிகளில் உள்ள வேங்கை, அத்தி என தன் மனக்கண்ணில் விரியும் மரங்களின் விவரங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார் சுந்தரராஜு.

2011ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்றும் தன் மனதை இளமையாக வைத்திருப்பதற்கு மரங்கள் மீதான தீராத காதலும், தேடலும்தான் காரணம் என்கிறார் சுந்தரராஜு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்