"அதிகாரிகளை ஆளுநர் சந்திப்பதை அரசியல்சாஸனம் தடைசெய்யவில்லை"-ஆளுநர் மாளிகை

பன்வாரிலால் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு அதிகாரிகளைச் சந்தித்ததன் மூலம் அரசியல்சாஸன வரம்பை மீறவில்லையென ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்காகச் சென்றபோது, அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு உயர் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களோ இடம்பெறவில்லை.

ஆளுநரின் இந்தச் செயல்பாட்டிற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், தமிழக அமைச்சர்களும் பாரதீய ஜனதாக் கட்சியும் இதனை வரவேற்றன.

ஊடகங்களிலும் ஆளுநரின் இந்தச் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆளுநரின் முதன்மைச் செயலர் இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.

"பல்வேறு நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறைகளைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்வதற்காகவே அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சமூகத்தின் ஒரு பகுதியினர் ஆளுனர் அரசியல்சாஸன மரபுகளையும் வரம்புகளையும் மீறிச் செயல்பட்டதாகக் கருதுகின்றனர்.'' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில்,''தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை மனதில்கொண்டு, ஆளுநருக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் மத்திய அரசின் தூண்டுதலின் பேரிலேயே அவர் இப்படி நடந்துகொள்வதாகவும் துரதிர்ஷ்டவசமாக சில விமர்சகர்கள் கருதினர். இந்த விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை. கற்பனையின் அடிப்படையிலானவை" என ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் பதவியேற்கும்போது சொன்னதைப் போல, அவரது எல்லா நடவடிக்கைகளும் இந்திய அரசியல்சாஸனத்தின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும் அரசியல் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும் தமிழக அரசை முழுமையாக ஆளுநர் ஆதரிப்பதாகவும் பன்வாரிலால் புரோஹித் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் மாவட்ட அதிகாரிகளுடனான சந்திப்பு குறித்து சட்ட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றதாகவும், அவருடைய செயல்பாட்டில் சட்ட மீறுதலோ, அரசியல்சாஸன மீறுதலோ இல்லை என ஆளுநர் உறுதிபட அறிந்துகொண்டதாகவும் ஆளுநர் மாளிகை கூறுகிறது.

மேலும், இந்த சந்திப்பிற்கு குறுக்குவழியில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றும் முறைப்படியே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன என்றும் கோவையில் நடக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பற்றி ஆளுநர் நல்ல முறையில் அறிந்துகொண்டதாகவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

அசாமில் ஆளுநராக இருந்தபோதுகூட பன்வாரிலால் புரோஹித் பல மாவட்டங்களில் இதேபோன்ற கூட்டங்களை நடத்தியதாகவும் இந்தக் கூட்டங்களின் மூலம் அடிதட்டு மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசிடம் தெரிவித்து கூடுதல் நிதியைப் பெற முடியுமென்று அவர் கருதுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பலரும் இந்தக் கூட்டங்களை வரவேற்றுள்ளதாகவும் இது போன்ற முயற்சிகளை ஆளுநர் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அரசியல்சாஸனம் அதைத் தடைசெய்யவில்லையென்றும் பன்வாரிலால் புரோஹித் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்