"தீபிகாவின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்" - பத்மாவதி படத்திற்கு கமல் ஆதரவு

படத்தின் காப்புரிமை NOAH SEELAM

பத்மாவதி படத்தில் நடித்ததற்காக பல்வேறு ராஜபுத்திரர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியான கொலை மிரட்டல்களை பெற்றுவரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, இதில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனுக்கு எதிராக பல்வேறு விதமான கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.

திங்கட்கிழமையன்று, ஹரியானா மாநில பா.ஜ.கவின் மூத்த ஊடக ஒருங்கிணைப்பாளரான சுராஜ் பல் அமு, தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல், "எனக்கு தீபிகாவின் தலையை (உயிரை) பாதுகாக்க வேண்டும். அவரின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்.அதைவிட அவரது சுதந்திரத்தை. அதை அவருக்கு கிடைப்பதற்கு மறுக்காதீர்கள்" என்று நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

"பல்வேறு அமைப்புகள் எனது படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எந்த விவாதத்திலும் தீவிரவாதம் என்பது துயரம் தரவல்லது. அறிவாற்றல் மிக்க இந்தியாவே விழித்தெழு. இது யோசிப்பதற்கான நேரம். நாம் போதுமான அளவிற்கு பேசிவிட்டோம். சொல்வதை கேள் என் பாரதத்தாயே" என்று இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்.

தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள்

தற்போதைய ராஜஸ்தான் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி பற்றி மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் 'அவதி' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத்' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Padmavati

பத்மாவதி படப்பிடிப்பின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே கர்னி சேனா என்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை தாக்கி அவரின் சட்டையையும் கிழித்தனர்.

தீபிகாவின் மூக்கை வெட்டி விடுவோம் என்று கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங்கும், அவரின் தலையை துண்டித்து கொண்டு வருபவருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேசத்தின் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபையின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோமும், தீபிகாவை உயிரோடு எரிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அகில பாரதா சத்திரிய மகாசபையின் இளைஞர் அணியின் தலைவர் புவனேஷ்வர் சிங்கும் உள்ளிட்டோர் ஏற்கனவே கூறியுள்ளனர்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த இப்படத்தை, தயாரிப்பு நிறுவனமான வியாகாம்18, தொடர் எதிர்ப்புகளின் காரணமாக படத்தின் வெளியீட்டை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குஜராத் பெண்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவது ஏன்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :