குஜராத் தேர்தல்: பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பும் சூரத் எம்பிராய்டரி கலைஞர்கள்

காஞ்சன் சவாலியாவிற்கு 40 வயதாகிறது. அவருடைய வீட்டில் வண்ணமிகு சேலைகள் மற்றும் அலங்கார எம்பிராய்டரி பொருட்கள் நிறைந்திருக்கும். அன்றாட வீட்டு வேலைகளை செய்து முடித்தவுடன், சேலைகளுக்கு பூ வேலைகள் செய்யும் பணியில் மூழ்கிவிடுவார் சவாலியா.

படத்தின் காப்புரிமை Getty Images

வீட்டிலிருந்தபடியே இந்த தொழிலை செய்துவரும் சவாலியாவுக்கு, அவரது பிள்ளைகள் தொலைக்காட்சி பார்க்கும் சமயங்களில் உதவியாக இருப்பது வழக்கம்.

சூரத் நகரில் பல குடியிருப்புப் பகுதிகளில் இதேபோன்ற காட்சிகளை பரவலாகக் காணலாம். நகரில் உள்ள பல பெண்கள் இந்த குடிசைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதையடுத்து, சூரத்தில் சவாலியாவை போன்று பல பெண் எம்பிராய்டரி கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிலில் கூடுதல் வருமானம் பெற்றுவந்த பெரும்பாலான இல்லத்தரசிகள் தற்போது தங்கள் அன்றாட செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் செலவுகளை தள்ளிப் போடுகின்றனர். சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கிட்டத்தட்ட சூரத் நகரில் புனாகம்மில் உள்ள மாத்ருசக்தி செசைட்டியில் உள்ள அனைத்து பெண்களும் கோபத்துடனும், அன்றாட செலவுகளை செய்ய முடியாமலும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதில் சவாலியாவின் குடும்பம் விதிவிலக்கல்ல.

''என்னிடம் பணம் இல்லை. எங்குபோய் ஜி.எஸ்.டி எண்ணை பெறவேண்டும் என்பது தெரியாது, '' என்கிறார் பிபிசியிடம் பேசிய சவாலியா.

பிபிசியின் குஜராத்தி சேவையிடம் பேசிய அவர், தினந்தோறும் வெறும் ரொட்டி மற்றும் ஊறுகாயை உண்டே வாழ்ந்து வருவதாகவும், காய்கறிகள் வாங்க தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தனது மகள்களின் உதவியோடு ஒரு காலத்தில் தினந்தோறும் 1200 ரூபாய் வரை சம்பாதித்து வந்த சவாலியா, தற்போது அந்த வருவாய் நாளொன்றுக்கு 300 ரூபாயாக குறைந்துவிட்டதாக கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

புதிய வரிவிதிப்பு முறையின்படி, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஜி.எஸ்.டி எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். மேலும், மொத்த வருவாயில் 5 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி அமலானதையடுத்து சூரத் நெசவுத் தொழிலில் வர்த்தகம் என்பது முன்பைவிட பாதியாக குறைந்துள்ளது. நகரிலுள்ள வர்த்தகர்கள் ஜி.எஸ்.டியை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர்.

சூரத் ஜவுளி வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மனோஜ் அகர்வால், உள்ளூர் எம்பிராய்டரி வேலைப்பாடு தொழில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''சூரத்தில் சுமார் 1.25 லட்சம் எம்பிராய்டரி இயந்திரங்கள் உள்ளன. இதுதவிர வீடுகளிலிருந்து பல பெண்கள் பணிசெய்து வருகின்றனர். தற்போது, 50 சதவீதத்திற்கும் கூடுதலாக வேலை குறைந்துவிட்டது. ஏராளமான எம்பிராய்டரி தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன.'' என்கிறார் அவர்.

சூரத்தில் குறைந்தது 175 பெரும் ஜவுளி சந்தைகள் உண்டு. இவையே சேலை எம்பிராய்டரி வேலையை எம்பிராய்டரி அலகுகளுக்கும், தனி நபர்களுக்கும் கொடுத்துவந்தன. ஆனால், தற்போது ஜி.எஸ்.டி காரணமாக அவை அனைத்தும் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளன.

 மாத்ருசக்தி சொசைட்டியில் குறைந்தது 3,300 வீடுகள் இருக்கின்றன. அதில், குடியிருப்பவர்கள் பெரும்பாலும் பட்டேதார் இனத்தை சேர்ந்தவர்கள். குஜராத் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என பல பட்டேதார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த குறிப்பிட்ட சமூகத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது.

ஜவுளித் தொழில் நலிவடைந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 55 வயதாகும் ஷாதாபென் ரன்பீரியா, ''என் கணவரை காட்டிலும் எங்கள் தலைவர் நரேந்திர மோதியை மிகவும் மதித்தேன். ஆனால், இந்த ஜிஎஸ்டி எங்களை வேலையில்லாதவர்களாக ஆக்கிவிட்டது. இனி என்னுடைய வீட்டிற்குள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களை நுழையவிட மாட்டேன் '' என்கிறார் அவர். இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :