#வாதம்விவாதம்: அரசியலுக்கு வர ரஜினி அவசரம் காட்டாதது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக அரசியலில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நுழைவாரா? மாட்டாரா? என பரபரப்பில் பல ஆண்டுகள் உருண்டோடியதுண்டு. இப்போது அவருடைய சமகால நடிகரான கமல் ஹாசன் அரசியலில் இறங்குவதற்கான தயாரிப்புகளில் மும்முரமாகிவிட்டார்.

இச்சூழலில், அரசியலில் நுழைய தற்போதைக்கு அவசரம் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இதுபற்றி பிபிசி தமிழின் சமூக ஊடக பக்கங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கருத்து கேட்டிருந்தோம்.

பிபிசி தமிழின் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்த இந்த கேள்விக்கு நேயர்கள் அளித்த பதில்களில் முக்கியமானவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

''தற்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க எந்த அவசரமும் இல்லை. மற்றவர்களுக்காக உடனடியாக அவர் வரவேண்டியது இல்லை சரியான நேரத்தில் (தேர்தல்)அவர் வந்தாலே அது பாதி வெற்றியை தந்துவிடும். மீதி அவரின் கொள்கை வளர்ச்சி திட்டங்களை பொருத்தது. அவருக்கான இடம் தவிர்க்க முடியாது என்பது வாக்காளனாக எனது கருத்து'' என்கிறார் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள மெ.ரஜினி பிரசாத்.

இர்ஷாத் எம்எல் என்ற மற்றொரு ஃபேஸ்புக் நேயர், ''ரஜினி அரசியலுக்கு பொருத்தம் இல்லாதவர். எல்லோருக்கும் நல்லவராய் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி. இப்படிப்பட்டவரால் மக்களுக்காக எதையும் தட்டி கேட்க முடியாது. ஆனால் கமல் அப்படி இல்லை எல்லா விடயங்களையும் வெளிப்படையாக பேசுபவர். இப்படிப்பட்டவர்களால்தான் ஊழலை எதிர்க்கவும் தன் நாட்டு மக்களுக்கு தேவையானதை திறன்பட செய்யவும் முடியும்'' என்று கூறுகிறார்.

கமல் அரசியலில் சிறக்க வாய்ப்பு உண்டு. ரஜினி தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் ஜெயபிரசாத் அரன்.

ஏ.கே.அரசன் என்ற நேயர், அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் புஸ்வாணமாகிப் போவார்கள் என்பதை ரஜினி கொஞ்சம் கணித்திருப்பதாகவே தெரிகிறது என்கிறார்.

1996ல் அருமையான வாய்ப்பு வந்தது அதை தவறவிட்டு விட்டார். ரஜினியை பொறுத்தவரை அரசியல் என்பது இனி எட்டாக்கனி என்கிறார் முகமது ஹமு.

இவர்கள் அரசியலுக்கு வந்து ஒன்றும் நடக்கபோவது இல்லை கமலுக்கு அந்த தகுதி எல்லாம் இல்லை என்கிறார் மோகன் பி.

நவுசத் அலி என்னும் ஃபேஸ்புக் நேயர், அரசியலில் ரஜினியால் கமலுக்கு ஈடு கொடுக்க முடியாது என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :